மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிப்பாக, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் டெஸ்க்டாப் பதிப்புகளை (Desktop versions) அணுகுவதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளங்கள் திறக்கப்படாமை, சில அம்சங்கள் செயல்படாமை மற்றும் இணைப்பு பிழைகள் போன்ற பிரச்சினைகள் குறித்து ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, வாட்ஸ்அப் சேவையிலும் இடையூறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சில பயனர்களின் மொபைல் செயலிகள் வழக்கம்போல் இயங்கியதாக கூறப்படுவதால், இந்த கோளாறு அனைத்து பகுதிகளையும் ஒரே அளவில் பாதிக்கவில்லை என நம்பப்படுகிறது.
சமூக ஊடக தளங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, பலர் மாற்று இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, வணிக நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம் மற்றும் தினசரி தொடர்பாடல்களுக்காக இந்த தளங்களை நம்பியிருக்கும் பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. மேலும், சேவைகள் முழுமையாக எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்தும் மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், தொழில்நுட்ப நிபுணர்கள் பிரச்சினையை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கருதப்படுவதுடன், சேவைகள் விரைவில் வழமை நிலைக்குத் திரும்பும் என பயனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
The post மெட்டா சேவைகள் திடீர் முடக்கம்; பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பயனர்கள் அவதி! appeared first on Vanakkam London.