5
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையும், அவரது நீண்டகால முகவரும் தொழில் முகாமையாளருமான ஜோர்ஜ் ஹொராசியோ மெஸ்ஸி தனது 68ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் மெஸ்ஸி, தனது சொந்த ஊரான ஆர்ஜென்டீனாவின் ரொசாரியோவில் உள்ள Sanatorio Centro மருத்துவமனையில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
அவரது மரணத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் கார்லோஸ் மெக்கி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், குடும்பத்தினரின் தனியுரிமையை கருத்திற்கொண்டு மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி இளமைக்காலத்தில் விளையாடிய ரொசாரியோவைச் சேர்ந்த Newell’s Old Boys கால்பந்து கழகமும் ஜோர்ஜ் மெஸ்ஸியின் மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளது.
யார் இந்த ஜோர்ஜ் மெஸ்ஸி ?
1958ஆம் ஆண்டு ரொசாரியோவில் பிறந்த ஜோர்ஜ் மெஸ்ஸி, தொழிலாள வர்க்கக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். உள்ளூர் உருக்கு உற்பத்தி ஆலையொன்றில் இரசாயன தொழில்நுட்ப நிபுணராகவும், பிரிவு முகாமையாளராகவும் பணியாற்றிய அவர், தனது மனைவி செலியா குசிட்டினியுடன் இணைந்து ரொட்ரிகோ, மத்தியாஸ், லியோனல் மற்றும் மரியா சோல் ஆகிய நான்கு பிள்ளைகளை வளர்த்தார்.
கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜோர்ஜ், Newell’s Old Boys கழகத்தின் இளையோர் அணியில் மத்தியகள வீரராக விளையாடியிருந்தார். பின்னர் தனது மகன் லியோனலின் கால்பந்து வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
2000ஆம் ஆண்டு, 13 வயதான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்தின் கவனத்தை ஈர்த்தபோது, அவருடன் ஸ்பெயினுக்குச் சென்ற ஜோர்ஜ், மகனின் ஆரம்பகால கால்பந்து வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினார்.
லியோனலுக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில், அதற்கான சிகிச்சை செலவு குடும்பத்திற்கு பெரும் நிதிச்சுமையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பார்சிலோனா லியோனலை தனது இளையோர் அணியில் இணைத்துக் கொண்டு அவரது மருத்துவ சிகிச்சை செலவுகளையும் ஏற்க முன்வந்தது.
லியோனலின் பார்சிலோனா பயணத்திற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒரு துடைப்புத் தாளில் எழுதப்பட்டதாக கூறப்படும் சம்பவம், அவரது அசாதாரண கால்பந்து வாழ்க்கையின் தொடக்கத்தைச் சுற்றியுள்ள பிரபலமான கதைகளில் ஒன்றாக மாறியது.
மகனின் முகவராக ஜோர்ஜ் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி உலகின் முன்னணி கால்பந்து வீரராக உயர்ந்தபோது, அவரது முக்கிய பிரதிநிதியாகவும் தொழில் முகாமையாளராகவும் ஜோர்ஜ் செயல்பட்டார்.
முக்கிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அவர் கவனித்ததுடன், பார்சிலோனா கால்பந்து கழகத்தில் மெஸ்ஸியின் நீண்டகால வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றினார். பின்னர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் இன்டர் மியாமி அணிகளுக்கான அவரது மாற்றங்களிலும் ஜோர்ஜ் ஈடுபட்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு, விளம்பர வருமானம் தொடர்பான வரி மோசடி வழக்கில் ஸ்பெயின் நீதிமன்றத்தால் லியோனல் மெஸ்ஸியும் ஜோர்ஜ் மெஸ்ஸியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இருவருக்கும் 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அது இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக இருந்தது.
தனது மகனின் உலகளாவிய புகழுக்கு மத்தியில் பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேணிய ஜோர்ஜ், லியோனலின் கால்பந்து சாதனைகளை விட அவர் ஒரு நல்ல மனிதராக இருப்பதே தனக்கு பெருமை அளிப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார்.
இறுதி மாதங்கள்
ஜோர்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை தொடர்பான கவலைகள் 2026 ஆம் ஆண்டில் அதிகரித்தன. ஜூன் மாதத்தில் அவர் அடையாளம் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக மெஸ்ஸி குடும்பத்தினர் தெரிவித்திருந்ததுடன், தனியுரிமையை மதிக்குமாறும் கோரியிருந்தனர்.
அவரது மறைவையடுத்து உலக கால்பந்து வட்டாரத்தில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்டர் மியாமி அணியும் ஜோர்ஜ் மெஸ்ஸிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதுடன், வீரர்கள் கறுப்பு நிற கைப்பட்டைகளையும் அணிந்தனர். அந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்கவில்லை.
மனைவி செலியா மற்றும் நான்கு பிள்ளைகளையும் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி விட்டுச் சென்றுள்ளார்.
ரொசாரியோவின் கால்பந்து மைதானங்களில் தொடங்கிய லியோனல் மெஸ்ஸியின் பயணம் உலக கால்பந்தின் மிகப்பெரிய மேடைகளை எட்டிய வரையிலும், அந்தப் பயணத்தின் பின்னணியில் முக்கியமான வழிகாட்டியாகவும் பிரதிநிதியாகவும் ஜோர்ஜ் மெஸ்ஸி திகழ்ந்தார்.
