20
இங்கிலாந்தின் டெவோன் (Devon) மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சிப் பயிற்சியின் போது, ராயல் கடற்படையின் (Royal Navy) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.
ஓக்ஹாம்ப்டன் (Okehampton) அருகே உள்ள சார்டன் டவுன் (Sourton Down) பகுதியில், அதிகாலை சுமார் 3:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மெர்லின் எம்கே4 (Merlin Mk4) ரகத்தைச் சேர்ந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் பொதுவாக சோமர்செட்டில் உள்ள ஆர்.என்.ஏ.எஸ் யோவில்டன் (RNAS Yeovilton) தளத்தை மையமாகக் கொண்டு இயங்குபவை.
இந்த விபத்து குறித்து பாதுகாப்பு விபத்து விசாரணை பிரிவு (DAIB) மற்றும் ராயல் கடற்படை இணைந்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. ஹெலிகாப்டர் பறக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதற்கான சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் கீர் ஸ்டார்மர், இங்கிலாந்து மன்னர் மற்றும் வேல்ஸ் இளவரசி உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். “இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் குறிப்பிட்டுள்ளார்.
மெர்லின் ரக ஹெலிகாப்டர்கள் 1999ஆம் ஆண்டு முதல் ராயல் கடற்படையில் பயன்பாட்டில் உள்ளன. முன்னதாக, செப்டெம்பர் 2024 இல் இதேபோன்ற ஒரு பயிற்சியின் போது, மெர்லின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு அதிகாரி உயிரிழந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.