• Thu. Aug 6th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் பாகிஸ்தான் ISI-யின் ஆதிக்கம்.. பயங்கரவாதிகள் சுதந்திரமாக திரிகின்றனர் – ஷேக் ஹசீனா மகன்

Byadmin

Aug 6, 2026


வங்கதேசத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தடையில்லாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாக ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய் எச்சரித்துள்ளார்.

மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்து இந்தியா தப்பி வந்ததன் 2 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா நேற்று டெல்லியில் இணைய வழியில், முகத்தை காட்டாமல் குரல் வழி செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

2 ஆண்டுகள் பின் அவர் இந்தியாவில் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது. இதில் அவரின் மகன் சஜீப் வாஜித் ஜாயும் கலந்துகொண்டார்.

சஜீப் வாஜித் ஜாய்

அங்கு ஜாய் பேசியதாவது, இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் இருப்பது போல், தற்போது கிழக்கிலும் மற்றொரு பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு இங்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அவாமி லீக் ஆட்சியின் போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை தற்போதைய நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.

தடைசெய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தகரீர்’ அமைப்பு வீதிகளில் பகிரங்கமாக அணிவகுப்பு நடத்துகிறது. அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் உருவாகும் அடுத்தகட்ட பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் இருந்தே வருவார்கள்.

வங்கதேசத்தில் நடக்கும் இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் நல்லதல்ல.

சர்வதேச நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மிக வேகமாக மாறக்கூடியவை. அமெரிக்கா கூட சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு தற்போது நெருக்கம் காட்டுவது இதற்குச் சான்று

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஊடகங்கள், வங்கதேசத்தில் நடக்கும் இந்த ஆபத்தான நிலவரங்களை தொடர்ந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்” என்றார்.

ஷேக் ஹசீனா பேசியது என்ன?

இதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷேக் ஹசீனா,மிகுந்த துன்பங்களை அனுபவித்ததாலும் அதை இனியும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் வங்கதேசத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றுவிடலாம் என்பது எனக்கு தெரியும். நான் என் மக்களுடன் இருப்பதற்காக என் வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்,” என்று கூறினார்.

“டிசம்பர் எங்கள் வெற்றி மாதம். அதனால், நான் டிசம்பர் மாதத்தில் திரும்பி செல்ல விரும்புகிறேன். நான் எதையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எனக்கு தெரியும்.

தற்போதைய நெருக்கடி குறித்துப் பேசுவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கும், முக்கிய தேசிய தலைவர்களுக்கும், நமது விடுதலைப் போரின் முப்பது லட்சம் தியாகிகளுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

மேலும், 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நான் இழந்த எனது சொந்த குடும்ப உறுப்பினர்களையும் ஆழ்ந்த துயரத்துடன் நினைவுகூர்கிறேன்,” என்று அவர் கூறினார்.

By admin