3
இங்கிலாந்தின் வடக்கு-தெற்கு பகுதிகளில் இந்த வாரம் வானிலையில் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது. வடக்குப் பகுதிகளில் புயல் காரணமாக வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படும் அதேவேளையில், தென்கிழக்கு இங்கிலாந்தோ மழைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.
வாரத்தின் தொடக்கத்தில் பதிவான வெப்பநிலை உச்சத்துக்குப் பிறகு, புதன்கிழமை (இன்று) வெப்பநிலை இயல்பான அளவை நோக்கி குறையும் என மெட் ஆபிஸ் தெரிவித்துள்ளது. வடக்கு இங்கிலாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லை.
ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பு, மின்னல் தாக்குதல் அல்லது பலத்த காற்று காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்காட்லாந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை பல வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், குடியிருப்பாளர்களும் வணிக உரிமையாளர்களும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமையில், வடக்கில் பெய்த மழை தெற்கு நோக்கி நகரும். ஆனால், அது மேலும் பொழிவு மழையாக மாறும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மழையின் ஒரு பகுதி மழை இல்லாத கிழக்கு இங்கிலாந்தின் பகுதிகளை வந்தடையலாம் என்றாலும், மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்திற்கு அதிக மழை எதிர்பார்க்கப்படவில்லை.
தெற்கு இங்கிலாந்தில் பதிவான மிக வறண்ட மாதமாக ஜூலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சில காலத்திற்கு குறிப்பிடத்தக்க மழை பெய்யாது என்று வானிலையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட் ஆபிஸ் வானிலை முன்னறிவிப்பாளர் மார்கோ பெட்டாக்னா கூறுகையில், “தெற்கு இங்கிலாந்துக்கு மிகவும் வறட்சியான நிலையே நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வடமேற்கிலிருந்து சில தூறல்கள் வந்தடையலாம். ஆனால், தென்கிழக்கை அடையும்போது மழை பலவீனமடையும்” என்று தெரிவித்தார்.
மேலும், “ஓகஸ்ட் இரண்டாம் பாதியிலும் மழைப்பொழிவு இயல்பான அளவைவிட குறைவாகவே இருக்கும், மேலும் அவ்வப்போது வெப்பமான காலநிலையும் நிலவக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.