1
வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (24) நடைபெற்றது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ளசசிதேவி ஜலதீபனுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார்.
இக்கலந்துரையாடலில் வெளிப்படுத்தல் உறுதி ஊடான மோசடிகள் தொடர்பில் ஆளுநர் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
வெளிப்படுத்தல் உறுதி ஊடான காணிப் பதிவுகள் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. மாறாக, அதன் பெயரால் அரங்கேறும் மிகப்பெரிய மோசடிகளைத் தடுத்து நிறுத்த வேண்டியதே எமது தலையாய கடமையாகும்.
வலி. வடக்கில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் காணிகள் கூட இவ்வாறு போலி உறுதிகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளன,’ என ஆளுநர் கவலை வெளியிட்டார்.
மேலும், ‘கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடான வழிகாட்டல் வழங்கப்பட்டிருந்தது. இவ்விடயத்தை நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை அழித்திருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே, இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்கான உறுதியான பொறிமுறையை நாம் விரைவாக உருவாக்க வேண்டும்,’ என ஆளுநர் வலியுறுத்தினார்.
இதன்போது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி) தமது மாவட்டங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துரைத்தனர்.
ஒரு காணி அரச காணியா அல்லது தனியார் காணியா என்பதை உறுதிப்படுத்துவதற்குப் பதிவாளர் திணைக்களம் 14 நாட்கள் அவகாசம் மட்டுமே வழங்குவதாகவும், குறித்த காலத்துக்குள் பதிலளிப்பது சவாலானது எனவும் சுட்டிக்காட்டினர்.
மேலும், போலிப் பெயர்களில் உறுதிகள் எழுதப்படுவதால் சிக்கல்கள் மேலெழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர், அரச காணியொன்று வெளிப்படுத்தல் உறுதி மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் அதனை இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய பதிவாளர் நாயகம், ‘2022ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி அரச காணியா என்பதை உறுதிப்படுத்தப் பிரதேச செயலாளர்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேவையேற்படின் மேலதிக கால நீடிப்பையும் கோர முடியும். பிரதேச செயலகக் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களில் காணி உரித்துத் திணைக்கள அதிகாரிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம் இதற்கான தீர்வுகளை இலகுவாகப் பெறலாம், என்றார்.
எதிர்காலத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகள் பதிவு செய்யப்படும் போது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சரத்து சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என ஆளுநர் முன்மொழிந்தார்.
மேலும், இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி க.அரியநாயகம் அவர்கள், வெளிப்படுத்தல் உறுதிகளைப் பதிவு செய்யும்போது காணியின் வரைபடம் மற்றும் நான்கு எல்லைகளிலும் உள்ளவர்களிடமிருந்தான சத்தியக்கடதாசி ஆகியவற்றைக் கட்டாயமாக்குதல் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.