• Fri. Oct 23rd, 2026

24×7 Live News

Apdin News

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 7 பறவைகள் உயிரிழப்பு; மனிதர்களுக்கு பரவுமா?

Byadmin

Oct 23, 2026


பறவைக் காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது

படக்குறிப்பு, பறவைக் காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது (கோப்புப் படம்)

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னை அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு நீர்வாழ் பறவைகள் ஹெச்5என்1 (H5N1) வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூங்கா அக்டோபர் 22, 23 (நேற்றும் இன்றும்) ஆகிய தேதிகளில் மூடப்பட்டது.

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் அக்டோபர் 22ஆம் தேதி நோய்த்தொற்றை உறுதிப்படுத்தியதாகப் பூங்கா இயக்குநர் ரிட்டோ சைரியாக் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகும் பூங்காவைத் திறக்க முடியுமா என்பது உறுதியாகவில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் மற்றும் நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அக்டோபர் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை நான்கு வர்ண நாரைகள், ஒரு சாம்பல் நிற கூழைக்கடா, ஒரு சாம்பல் நிற கொக்கு, ஒரு சிறிய நீர்ப்பறவை ஆகிய ஏழு பறவைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இயக்குநர் கூறினார்.

“பறவைகள் உயிரிழந்தபோது, சுமார் 15 நாட்களுக்கு முன்பே மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தோம். முடிவுகள் அக்டோபர் 22ஆம் தேதிதான் கிடைத்தன. பறவைகள் உயிரிழந்த உடனேயே அவற்றுடன் இருந்த மற்ற பறவைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. உயிரிழந்த பறவைகளில் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை,” என்று ரிட்டோ சைரியாக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin