தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து தவெக-விடம் 116 இடங்கள் இருந்தன. தற்போது மேலும் 2 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், எம்எல்ஏக்கள் ஆதரவு 120 ஆக அதிகரித்துள்ளது.
விஜய் ஆட்சியமைக்க தேவையான பலம் கிடைத்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக-வின் ஆட்சி அமையும் சூழலில், அவர் எத்தகைய சவால்களைச் சந்திக்கப் போகிறார்?” என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
கூட்டணி ஆட்சியில் சாதகமும் பாதகமும்
பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைக்கக்கூடிய இப்போதைய சூழலில், விஜய் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, திமுக கடந்த ஆண்டுகளில் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியைக் கடுமையாக எதிர்த்த காரணத்தால் எதிர்கொண்ட அழுத்தங்களைத் தற்போது தவெக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.
பட மூலாதாரம், DIPR
மேலும், “அக்கட்சியில் செங்கோட்டையன் தவிர வேறு யாருக்குமே அரசாங்க நிர்வாக ரீதியிலான அனுபவம் என்பது கிடையாது. அப்படியிருக்கும் சூழலில், காங்கிரஸில் இருந்து செல்லக் கூடியவர்களுக்கு ஓரளவுக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. அதேபோல, திருமாவளவனுக்கும் நிர்வாக அனுபவம் இல்லையென்றாலும் வலுவான அரசியல் அனுபவம் இருக்கிறது.
இத்தகைய அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல் விஜய்க்கு இருக்கும். அதுமட்டுமின்றி, செங்கோட்டையன் கூறுவதைப் புறந்தள்ளினாலும்கூட, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவதைக் கேட்காமல் தவிர்க்க விஜயால் முடியாது. ஏனெனில், அவர் ஆட்சியில் தொடர்வதற்கு இவர்களுடைய ஆதரவு கட்டாயம் தேவை,” என்றும் விளக்கினார்.
அதேநேரம், இப்படியான கூட்டணி ஆட்சியில், “தவெக-வுக்கு ஒரு விஷயத்தை செயல்படுத்த வேண்டுமெனத் தோன்றலாம். ஆனால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் விசிக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுக்கு கொள்கைரீதியாக அதில் உடன்பாடு இல்லாமல் போகலாம். அத்தகைய சூழலில் விஜய் சமரசம் செய்துகொள்ளக்கூடிய நிலைக்குத் தள்ளப்படலாம்,” என்று தெரிவித்தார் சிவப்பிரியன்.
இது கற்பனையான நிலை என்றாலும், அரசியல் சூழல்களின் அடிப்படையில் வாதமாக முன்வைக்கப்படுகிறது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
த.வெ.க. தனியாக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்படும் ஆட்சி சிக்கலின்றி இருக்காது என்று கூறுகிறார் சிவப்பிரியன்.
உதாரணமாக, இடதுசாரி கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த அதேவேளையில், மாநில உரிமைகள் தொடர்பான விஷயங்களில் முரணாகச் செயல்பட்டால் அதற்கு எதிராகப் போராடுவோம் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் “அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதாலும் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக நிலைபாடு தடையாக இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், ” ஆட்சியமைத்த பின்னர் அவர்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டால் விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.
அதேநேரம், “தற்போதைய சூழலில் மற்றுமொரு தேர்தலை எந்தக் கட்சிகளும் விரும்பவில்லை என்பதாலும், தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்தாக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. எனவே, ஒரு சுமூகமான அணுகுமுறை இருப்பதற்கும் வாய்ப்புள்ளது,” என்று கூறுகிறார் சிவப்பிரியன்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
பாஜகவின் அழுத்தங்களை தவெக சமாளிக்குமா?
இளங்கோவன் ராஜசேகரனின் கூற்றுப்படி, திமுக-வை அரசியல் எதிரி, பாஜக-வை கொள்கை எதிரி எனக் கூறிக் கொண்டாலும், இதுவரையிலான விஜயின் அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது மாநில உரிமைகள் குறித்தான விவகாரங்களில் அவர் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் பேசிய அவர், “ஸ்டாலின் தலைமையில் திமுக மிகக் கடுமையான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு எதிராக முன்னெடுத்து, மாநில உரிமைகள் தொடர்பாகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், விஜய் அந்த அளவுக்கு வலிமையான குரலாக இருப்பாரா என்று கேட்டால், அது இன்னும் சந்தேகமாகவே உள்ளது,” என்று கூறினார்.
தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு மாநில உரிமைகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டில் இதுவரை இருந்து வருகிறது. இதே நிலைப்பாட்டை விஜய் தொடர்ந்து கொண்டு செல்வாரா இல்லையா என்ற கேள்வி இருப்பதாகக் கூறும் அவர், ஒருவேளை அவ்வாறு செய்யவில்லையெனில் இடதுசாரிக் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எப்படி எதிர்வினையாற்றப் போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.
இதன் காரணமாக, விஜய் எப்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதனாலேயே இந்த ஆட்சி எளிதில் உடையக்கூடிய வகையிலானதாக இருக்கிறது என்றும் கூறினார்.
தவெக-வுக்கு சிக்கல்கள் நிறைய இருக்கின்றன என்றாலும், மத்தியில் இருந்து வரக்கூடிய அழுத்தங்களுக்கு அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இது இருக்கும் என்கிறார் சிவப்பிரியன்.
பட மூலாதாரம், Getty Images
“தமிழ்நாடு அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கொள்கைகளின் நீட்சி என்பது எப்போதும் இருக்கவே செய்கிறது. இருமொழிக் கொள்கையை மாற்றுவதோ, தமிழ்நாட்டின் பண்பாட்டு விஷயங்களை மாற்றுவதோ முடியாத காரியம்.
ஆனால் கூட்டணி ஆட்சியை நடத்துவது என்பது சிக்கலான விஷயம்தான். இருப்பினும், மற்றொரு தேர்தலை யாரும் விரும்பவில்லை என்பதால் ஓரளவுக்கு சுமூகமாகச் செல்ல வாய்ப்புள்ளது,” என்றும் குறிப்பிட்டார் சிவப்பிரியன்.
அதேநேரம், அவர் இவ்வளவு நாட்களாக தவெக-வின் தலைவராக பாஜக குறித்துப் பெரியளவில் பேசாமல் இருந்திருக்கலாம் என்றாலும், ஒரு முதலமைச்சராக அவர் அப்படி அமைதியான அணுகுமுறையைக் கடைபிடிக்க முடியாது என்றும் விளக்கினார்.
மேற்கொண்டு விளக்கிய அவர், “உதாரணமாக, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான கடிதம் வருகிறதெனில், அதற்குப் பதில் கடிதம் எழுதித்தான் ஆக வேண்டும், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஹிந்தி பயில வேண்டுமென மத்திய அரசு கூறினால் அதற்கு விஜய் பேசித்தான் ஆக வேண்டும்.
அவர் தீவிர பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பாரா என்பது தெரியவில்லை, அதைத்தான் எடுத்தாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால், எந்தெந்த இடங்களில் மாநில உரிமைகளுக்குப் பிரச்னை வருகிறதோ அங்கெல்லாம் அவர் வலிமையாகக் குரல் கொடுத்தாக வேண்டியது அவசியம்,” என்று கூறினார்.