சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான காரணமாக சோப்பு, ஷாம்பு பயன்பாட்டை சுட்டிக்காட்டியதன் மூலம் அரசின் செயல்திறனைப் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. மாசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாமல், அபத்தமான விளக்கங்களை அளிப்பது அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் குறைபாட்டை வெளிப்படுத்துகிறது என்று தினகரன் கூறியுள்ளார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டம் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
கேள்வி எழுப்புகிறது
அரசியல் விபத்தால் முதலமைச்சரான விஜய் அவர்களின் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே தெரியாமல் சில காலம் குழம்பிய அமைச்சர், தற்போது தனது துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்துப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? அல்லது ஆறுகளில் மாசு ஏற்பட்டு நுரை பொங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் சதிதான் காரணம் எனக் கூறாமல் விட்டு விட்டாரே என்று மகிழ்ச்சியடைவதா? என்று தெரியவில்லை.
மேலும் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அமைச்சர், பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் இத்தகைய விளக்கங்களை அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
காற்று வீசாததால் காற்றாலைகள் சுழலவில்லை; அதனால்தான் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது எனக்கூறிய எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கைச் சட்டை அணிய வேண்டும் என சொல்லிய சுகாதாரத் துறை அமைச்சர், தற்போது ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விளக்கம் அளித்திருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என, ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிர்வாகத் திறனற்றவர்களாலும் கோமாளிகளாலும் நிறைந்திருப்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தெரிந்திருக்கிறாரா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறாரா?
எனவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அபத்தமான விளக்கங்களை அளிப்பதில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாகக் கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுத்து, ஆறுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையையும் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.