• Sun. Jul 12th, 2026

24×7 Live News

Apdin News

வியட்நாம் படகு விபத்து நடந்தது எப்படி?-உயிர் தப்பியவர் கண்ணீர் பேட்டி!

Byadmin

Jul 12, 2026


வியட்நாமில் நடந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். கடலில் படகு சவாரியில் ஈடுபட்ட போது பலத்த காற்று வீசியதாலும், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதாலும் படகு கவிழ்ந்து அவர்கள் பலியாகி விட்டதாக முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படகு விபத்திற்கு கடல் கொந்தளிப்பு மட்டுமல்லாமல் படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

வியட்நாம் சுற்றுலா:

வியட்நாமை சேர்ந்த ‘திரீலேண்ட்’ மற்றும் ‘சாய் வியட்நாம்’ ஆகிய நிறுவ னங்களின் உதவியுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சில நாட்களுக்கு முன்பு வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா சென்றனர். இந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக அவர்களில் 32 பேர் நேற்று அன்தோய் தீவுக்கூட்டங்களில் அதிவேக சொகுசு படகு ஒன்றில் படகு சவாரியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த படகில் படகு ஓட்டுனர்கள் உள்பட 4 ஊழியர்களும் இருந்தனர். ஒவ்வொரு தீவுகளாக சென்று சுற்றிப்பார்த்த அவர்கள் மீண்டும் அன்தோய் துறைமுகத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். ஹான் மேருட்ங்வோய் தீவின் கரையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் படகு வந்து கொண்டிருந்த போது திடீரென்று பலத்த காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது.

15 பேர் பலி:

திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த பலர் கடலில் விழுந்தனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மற்ற 21 பேரையும் எல்லை பாதுகாப்பு படை, கடற்படை மற்றும் கடலோர காவல்ப டையை சேர்ந்த வீரர்கள் மீட்டனர்.

இறந்தவர்களில் 10 பேர் தமிழர்கள். இவர்கள் பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த முருகபிரபு, தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார், திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த அழகுராஜன், கீழ கொண்டையம் பேட்டையை சேர்ந்த பாலாஜி, பீம நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாபு, வேலூரை சேர்ந்த வினய்குமார் மற்றும் ரவி சங்கர், சந்தோஷ்குமார் ஆகியோர் ஆவர். மேலும் கேரளாவை சேர்ந்த 2 பேர், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும் பலியாகி உள்ளனர்.

தமிழகம் கொண்டு வர நடவடிக்கை:

இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து உயிரிழந்த தமிழர்களின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்திய தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

டி.ஐ.ஜி. விரைந்தார்:

வியட்நாமில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரும் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகளை எளிதாக்கவும் தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமானி வியட்நாமின் ஹோசிமின் நகரத்திற்கு விரைந்துள்ளார். இதையடுத்து வியட்நாமில் இறந்த தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

காரணம் என்ன?

கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதும், கடல் கொந்தளிப்புமே படகு விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டாலும், படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. விபத்தில் சிக்கிய படகு ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்டது.

இந்த அதிவேக படகு, ‘மின் ஹுய் பூ குவோக் டிரேடிங் அன்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.விபத்து நடந்த இடத்தில் பலத்த காற்று வீசுவது போலவும், அலைகள் உயரமாக எழுவது போலவும் ஒரு வீடியோவில் பதிவாகி உள்ளது.

மேலும் மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்த வர்களை நோக்கி உயிர் காக்கும் மிதவைகளை வீசுவதும், பின்னர் மீட்கப்பட்டவர்களை கரைக்கு கொண்டு செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

படகு விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பாக விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

நாங்கள் பயணித்த படகு மூடிய நிலையில் காணப் பட்டது. படகில் 36 பேர் பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென வீசிய ஓர் மிகப்பெரிய அலை படகை தாக்கியது. இதனால், படகு 3 நிமிடங்களுக்குள் வேகமாக கவிழ்ந்துவிட்டது.

படகு வேகமாக சாய்ந்ததில் 20 பேர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். மற்றவர்கள் படகின் உள்ளேயே அதிர்ச்சியுடன் இருந்தோம். சிறிது நேரத்தில் மீட்பு படையினர் விரைந்து வந்து எங்களை பத்திரமாக மீட்ட னர். இவ்வாறு அவர் கூறினார்.

படகு விபத்தில் சிக்கிய போது அதில் இருந்த பலரும் லைப் ஜாக்கெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், அதிவேக படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இந்த விபத்துக்கு காரணம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட உள்ளது. விசாரணையில், படகு விபத்துக்கு உண்மை யான காரணம் என்ன என்ற விவரங்கள் தெரியவரும்.

By admin