பட மூலாதாரம், Dave Hurwitz/ Simon’s Town Boat Company
-
- எழுதியவர், இசபெல் ஜெரெட்சென்
- பதவி, பிபிசி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
தென்னாப்பிரிக்கக் கடற்கரைப் பகுதிகளில் இறந்த வெள்ளைச் சுறாக்கள் அடுத்தடுத்து ஒதுங்கியதை விஞ்ஞானிகள் முதன்முதலில் கண்டபோது, தங்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. அந்தச் சுறாக்கள் அனைத்தின் உடல்களிலும் ஒரே மாதிரியான கொடூரக் காயங்கள் இருந்தன – அவற்றின் உடல்கள் கிழிக்கப்பட்டு ஈரல்கள் மட்டும் தனியாக எடுக்கப்பட்டிருந்தன. இந்தத் துல்லியமான தாக்குதல் முறை யாருடைய கைவரிசை என்பதைக் காட்டியது. தற்போது இந்த வேட்டை முறைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
2017ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு அருகிலுள்ள கான்ஸ்பாய் என்னும் மீன்பிடி கிராமத்தின் கடற்கரையில் பிரமாண்டமான வெள்ளைச் சுறா ஒன்று இறந்த நிலையில் ஒதுங்கியது. 1,100 கிலோ எடையுள்ள அந்தப் பெண் சுறாவின் வயிற்றுப் பகுதியில் ஒரு பெரிய வெட்டு இருந்தது; அதன் 90 கிலோ எடையுள்ள ஈரலை மட்டும் காணவில்லை.
இறந்த அந்தச் சுறாவின் உடற்கூறாய்வுப் பரிசோதனையை முன்னின்று நடத்திய அலிசன் டவுனர், “இது எப்பேர்ப்பட்ட காரியம்?!” என்று வியப்புடன் நினைவு கூர்கிறார்.
அதனைத் தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் ஐந்து வெள்ளைச் சுறாக்கள் பிணமாக வந்து கரை ஒதுங்கின. அவற்றின் உடல்களிலும் அதேபோன்ற விசித்திரமான காயங்கள் இருந்தன; அவற்றின் உடல்கள் கிழிக்கப்பட்டு ஈரல்கள் அகற்றப்பட்டிருந்தன.
தென்னாப்பிரிக்காவின் கிரகாம்ஸ்டவுன் நகரில் உள்ள ரோட்ஸ் பல்கலைக்கழகத்தின் சுறா உயிரியலாளரான டவுனர், “இது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது” என்கிறார். “அந்தச் சமயத்தில் நான் நூற்றுக்கணக்கான வெள்ளைச் சுறாக்களைப் பார்த்திருக்கிறேன்… ஆனால், அவை இப்படி ஒன்றன்பின் ஒன்றாக கரையில் ஒதுங்குவதை நான் எப்போதுமே கண்டதில்லை.”
கடலுக்கு அடியில் ஏதோ ஒரு பெரிய போர் வெடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி அதுவே. பிற்காலத்தில் அவர் அறிந்துகொண்டது போல, இந்த நிகழ்வு உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது.
அனைத்துச் சுறாக்களின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்த டவுனர், ஒரே மாதிரியான இந்தக் காயங்களைக் கண்டதும் இரண்டு குற்றவாளிகள் மீது உடனடியாகச் சந்தேகம் கொண்டார்: ‘போர்ட்’ மற்றும் ‘ஸ்டார்போர்ட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இரண்டு ஓர்க்கா திமிங்கலங்கள் மீதே அந்தச் சந்தேகம் விழுந்தது.
சகோதரர்களாகக் கருதப்படும் இந்த இரண்டு ஆண் ஓர்க்கா திமிங்கலங்களும், முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் கேப் டவுன் கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்டன. அவற்றின் முதுகுத் செவுள்கள் முறையே இடது மற்றும் வலது பக்கமாகச் சாய்ந்திருந்த வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு, அவற்றுக்குப் ‘போர்ட்’ மற்றும் ‘ஸ்டார்போர்ட்’ என்று பெயரிடப்பட்டது.
இந்த ஓர்க்கா திமிங்கலங்கள் இரண்டும் கண்ணில் பட்ட சில நாட்களிலேயே, மூக்குப் பகுதி அகன்ற ‘பிராட்நூஸ் செவங்கில்’ ரகத்தைச் சேர்ந்த பல இறந்த சுறாக்களை நீர்மூழ்கி வீரர்கள் (divers) கண்டனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்துத் தோற்றத்தைக் கொண்ட இந்த முரட்டுச் சுறாக்களின் உடல்களும் கிழிக்கப்பட்டு அவற்றின் ஈரல்கள் காணாமல் போயிருந்தன.
“சுறா உடல்களை நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், போர்ட்டும் ஸ்டார்போர்ட்டும் அங்கே வந்து சேர்ந்தன” என்கிறார் டவுனர்.
“பாதிக்கப்பட்டவையும் குற்றவாளிகளும் ஒரே இடத்தில் இருந்தன. ஆனால், அப்போது அங்கே என்ன நடந்தது என்பதை எங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.”
கடல் உயிரியலாளர்களும் பொதுமக்களும் கேப் டவுன் கடற்கரையோரம் இந்த இரண்டு ஓர்க்கா திமிங்கலங்களையும் தொடர்ந்து பார்த்து வந்தனர். குறிப்பாக, டயர் தீவு பகுதியிலும் அவை காணப்பட்டன. குளிர்கால மாதங்களில் சீல் எனப்படும் கடல்நாய்களைத் தேடிச் சுறாக்கள் அப்பகுதியில் உலா வருவதால், அந்த இடம் முன்பு “வெள்ளைச் சுறாக்களுக்கான மெக்டொனால்ட்ஸ் டிரைவ்-த்ரூ” என்று அழைக்கப்பட்டது என்று டவுனர் கூறுகிறார்.
“வெள்ளைச் சுறாக்களைப் பார்ப்பதற்கு உலகிலேயே டயர் தீவுதான் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்கிறார் அவர். ஆனால், திடீரென்று அந்தச் சுறாக்கள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிட்டன.
“நான் ஏதோ படிப்படியாகக் குறைவதைப் பற்றிச் சொல்லவில்லை, ஒரே இரவில் அவை முற்றிலுமாக மறைந்துவிட்டதைப் பற்றிப் பேசுகிறேன்.”
டவுனருக்கும் மற்றவர்களுக்கும் முன்பே சந்தேகம் இருந்தபோதிலும், 2022ஆம் ஆண்டு வரை சுறாக்களைக் கொல்வது இந்த ஓர்க்கா திமிங்கலங்கள்தான் என்பதை அவர்களால் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.
“இது ஏதோ ஒரு குற்றப் புலனாய்வு விசாரணை போல இருந்தது… நாங்கள் ஒவ்வொரு துப்பாக சேர்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எங்களிடம் உறுதியான ஆதாரம் மட்டும் இல்லை. பிறகு அதுவும் எங்களுக்குக் கிடைத்தது.”
2022ஆம் ஆண்டு மே 16 அன்று, கேப் டவுனுக்குக் கிழக்கே 400 கி.மீ தொலைவில் உள்ள மோசல் பே கடற்கரைக்கு அப்பால், 3 மீட்டர் நீளமுள்ள வெள்ளைச் சுறா ஒன்றை மூன்று ஓர்க்கா திமிங்கலங்கள் வேட்டையாடுவதை டிரோன் கேமரா மூலம் பொழுதுபோக்கு ஆர்வலர் ஒருவர் படம்பிடித்தார். அந்தச் சந்திப்பின்போது, அந்த மூன்று ஓர்க்கா திமிங்கலங்களில் ஒன்று தனது மூக்கினால் சுறாவை நீர்ப்பரப்புக்குத் தள்ளி, அதன் வலது பக்கமாகத் திருப்பி, அதன் பக்கவாட்டுத் செவுள் பகுதிக்கு அருகில் கடித்தது. இதனால் அங்கே இரத்தக் குளம் ஏற்பட்டது. உடனே அந்த திமிங்கலம் சுறாவைத் தன் வாயில் கவ்வியபடி தண்ணீருக்கு அடியில் மூழ்கியது. அதே நேரத்தில் மற்றொரு ஓர்க்கா திமிங்கலம் சுறாவின் வால் பகுதியைப் பிடிப்பதுபோல் காட்சியளித்த சிறிது நேரத்தில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டது.
தற்போது கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாக் கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பாலும் வெள்ளைச் சுறாக்களைக் கொல்லும் ஓர்க்கா திமிங்கலங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இது அவற்றின் அசாத்தியமான வேட்டைத் திறனையும், கூர்மையான புத்தி கூர்மையையும், கூட்டுச் செயல்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் அழுத்தங்களும் இந்த உயிரினங்களை ஒன்றுக்கொன்று நெருக்கமான பகுதிகளுக்குத் தள்ளுவதால், பெருங்கடல் வாழ்வியலில் இந்த உச்ச வேட்டையாடிகளுக்கு இடையேயான போர் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
உச்ச வேட்டையாடிகளுக்கு இடையேயான போர்
பட மூலாதாரம், Dave Hurwitz/ Simon’s Town Boat Company
ஓர்க்கா திமிங்கலங்கள் மற்றும் வெள்ளைச் சுறாக்கள் இரண்டும் தத்தமது உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளன; மேலும் அவை கடலில் மிக முக்கியமான சூழலியல் பங்கை வகிக்கின்றன. சீல் மற்றும் டால்பின்கள் போன்ற ஒரே மாதிரியான இரைகளுக்காக அவற்றுக்கிடையே போட்டி நிலவுகிறது.
வெள்ளைச் சுறாக்களை வேட்டையாடும் ஒரே அறியப்பட்ட விலங்குகள் ஓர்க்கா திமிங்கலங்கள்தான். “அவை தங்களுக்கு ஊட்டச்சத்துத் தரும் உறுப்புகளைத் தேர்ந்தெடுத்து உண்பதில் மிகவும் கவனமாக இருக்கும். சுறாவின் ஈரல் மிகவும் சத்து நிறைந்த பகுதியாகும்” என்று டவுனர் கூறுகிறார்.
வெள்ளைச் சுறாக்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கும், கடலில் மிதந்து செல்வதற்கும் தங்களின் பெரிய அளவிலான ஈரலையே எரிபொருள் தொட்டியாகப் பயன்படுத்துகின்றன. ஒரு முதிர்ந்த வெள்ளைச் சுறாவின் ஈரல் அதன் உடல் எடையில் 28% வரை இருக்கக்கூடும். இதில் 90% அளவானது அதிக ஆற்றல் தரும் கொழுப்புகளால் நிரம்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவில், திமிங்கலங்களின் உதடுகள் மற்றும் நாக்குகளையும், பென்குயின் பறவைகளின் பக்கவாட்டுத் தசைப் பகுதிகளையும் ஓர்க்கா திமிங்கலங்கள் கடித்துத் தின்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலாளர் இசபெல்லா ரீவ்ஸ் கூறுகிறார். இந்தத் துல்லியமான வேட்டை முறை “ஊட்டச்சத்தை அடிப்படையாகக் கொண்டது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த வேட்டை முறை ஒரு புதிய பழக்கமா அல்லது கடலில் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கேமராக்கள் மற்றும் டிரோன் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் “இப்போது ஏராளமான கண்கள் கடலைக் கண்காணிப்பதால்” இது வெளிப்படையாகத் தெரிகிறதா என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம் என்று வாஷிங்டனில் உள்ள ஓர்கா தீவைச் சேர்ந்த கடல் உயிரியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளருமான டெபோரா கில்ஸ் கூறுகிறார். “நாம் அதைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம், அதனால் அதைக் காண்கிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கக்கூடும்.”
இந்த வேட்டை முறை ஓர்க்கா திமிங்கலங்களின் “அதிதீவிர புத்தி கூர்மையையும், தங்களின் வசிப்பிடப் பகுதிகளில் கிடைக்கும் இரையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் திறனையும்” வெளிப்படுத்துகிறது என்று கில்ஸ் கூறுகிறார். “வெள்ளைச் சுறாக்கள்தான் கடலின் உச்ச வேட்டையாடிகள் என்று கருதப்பட்டன, ஆனால் ஓர்க்கா திமிங்கலங்கள்தான் உண்மையான உச்ச வேட்டையாடி என்பது தெளிவாகத் தெரிகிறது.”
வெள்ளைச் சுறாக்களை விட ஓர்க்காத் திமிங்கலங்களுக்கு “கூடுதல் பலம் உள்ளது” என்பதை ரீவ்ஸும் ஒப்புக்கொள்கிறார். “இதன் பின்னணியில் அவற்றின் கலாசாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவை தனித்து வாழும் விலங்குகள் அல்ல, தெளிவான விதிகள் மற்றும் அடிப்படைகளைக் கொண்ட குடும்பம் சார்ந்த சமூகங்களில் வாழ்கின்றன.”
வெள்ளைச் சுறாக்கள் பொதுவாகத் தனித்து வாழும் இயல்புடையவை. ஆனால், ஓர்க்கா திமிங்கலங்களோ ‘பாட்ஸ்’ எனப்படும் சமூகக் குழுக்களாக வாழ்ந்து வேட்டையாடுகின்றன. அவற்றுக்கிடையே தொடர்புகொள்ள தனித்துவமான குரல் வழக்குகளைப் பயன்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்பு முறையின் காரணமாகவே ஓர்க்கா திமிங்கலங்கள் “தங்களது வேட்டைத் திட்டங்களை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்துச் செயல்படுகின்றன” என்று டவுனர் கூறுகிறார்.
மிக அபூர்வமாக, ஓர்க்கா திமிங்கலங்கள் தனித்து வேட்டையாடுவதும் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18, 2023 அன்று, ‘ஸ்டார்போர்ட்’ என்னும் ஓர்க்கா திமிங்கலம் தனியாக ஒரு வெள்ளைச் சுறாவை வேட்டையாடியது கேமராவில் பதிவானது. அது இரண்டரை மீட்டர் நீளமுள்ள இளம் சுறாவை வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் கொன்று அதன் ஈரலை மட்டும் தனியாக எடுத்தது. அந்த ஆண் திமிங்கலம் சுறாவின் ஈரலைத் தன் வாயில் கவ்வியபடி செல்வதை ஒரு படகில் இருந்த சுற்றுலா பயணிகள் படம்பிடித்தனர். அப்போது கடற்பரப்பில் மிதந்த எண்ணெய் போன்ற ஈரல் எச்சங்களை ஆமைகள் மற்றும் கடற்பறவைகள் சூழ்ந்தன. அதற்கு அடுத்த நாள், அருகில் உள்ள கடற்கரையில் 3.5 மீட்டர் நீளமுள்ள மற்றொரு காயமடைந்த சுறாவின் உடல் ஒதுங்கியது. இதன் மூலம் ஸ்டார்போர்ட் குறைந்தது இரண்டு வெள்ளைச் சுறாக்களைக் கொன்றிருக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.
“ஸ்டார்போர்ட் எந்த ஒரு துணையின் உதவியும் இல்லாமல் தனியாகச் செயல்படக்கூடிய ஒரு அதிநவீன வேட்டையாடி என்பதை இது நமக்குக் காட்டியுள்ளது” என்று டவுனர் கூறுகிறார்.
ஓர்க்கா திமிங்கலங்களின் சுறா வேட்டை
பட மூலாதாரம், Erick Higuera
பாஜா கலிபோர்னியாவைச் சேர்ந்த கடல் உயிரியலாளரும் வனவிலங்கு திரைப்படத் தயாரிப்பாளருமான எரிக் ஹிகுவேரா, 2020 ஆம் ஆண்டு எடுத்த தனது சொந்த டிரோன் காட்சிகளை ஆய்வு செய்தபோது தனது கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
கனெக்சியன்ஸ் டெரமார் மற்றும் பெலாஜிக் லைஃப் அமைப்புகளின் ஓர்காஸ் திட்டத்தை நடத்தி வரும் ஹிகுவேரா, கலிபோர்னியா வளைகுடாவில் ஐந்து ஒர்க்காத் திமிங்கலங்களைக் கொண்ட ஒரு குழு சுறாவை வேட்டையாடுவதைப் படம்பிடித்திருந்தார். “அப்போது அவை ஒரு சுறாவை வேட்டையாடுவது எனக்குத் தெரியும், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு பெரிதுபடுத்திப் பார்த்தபோதுதான் அது ஒரு இளம் வெள்ளைச் சுறா என்பது எனக்குத் புரிந்தது” என்று அவர் கூறுகிறார்.
அந்தக் காட்சிகளில், ஒர்க்கா திமிங்கலங்கள் இணைந்து வெள்ளைச் சுறாவை நீர்ப்பரப்புக்குத் தள்ளித் தலைகீழாகத் திருப்புகின்றன. பின்னர் அந்தச் சுறாவைத் தண்ணீருக்கு அடியில் இழுத்துச் சென்று, அதன் ஈரலைத் தங்கள் வாயில் கவ்வியபடி மீண்டும் மேலே வருகின்றன. “ஓர்க்கா திமிங்கலங்கள் சுறாவை மோதித் தள்ளின. அதன் பிறகு, அதன் ஈரலை அகற்றித் தின்றன” என்று கூறும் ஹிகுவேரா, “அவை அந்த உடலின் மற்ற பகுதிகளை உண்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை, ஈரலை மட்டுமே சாப்பிட்டன” என்று சேர்க்கிறார்.
இந்தக் ஓர்க்கா திமிங்கலங்கள் “மொக்டெசுமா பாட்” என்ற குழுவைச் சேர்ந்தவை ஆகும். இது ஒரு முக்கிய முதிர்ந்த ஆண் திமிங்கலத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் மொபுலா மட்டைகளைக் வேட்டையாடுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவை வெள்ளைச் சுறாக்கள் மற்றும் திமிங்கலச் சுறாக்கள் போன்ற பெரிய இரைகளுக்கு மாறியுள்ளன.
2022 ஆம் ஆண்டில், மொக்டெசுமா குழுவைச் சேர்ந்த ஐந்து ஓர்க்கா திமிங்கிலங்கள் மற்றொரு இளம் வெள்ளைச் சுறாவை வேட்டையாடுவதை ஹிகுவேரா படம்பிடித்தார். ஓர்க்கா திமிங்கலங்கள் அந்தச் சுறாவை அதன் முதுகில் தள்ளி நீர்ப்பரப்புக்குக் கொண்டுவந்தன. சுறா இரத்தக் கசிவுடன் இருந்ததுடன் அதன் ஈரலும் வெளிப்பட்டிருந்தது.
சுறாவைத் தலைகீழாகத் திருப்புவது ‘டோனிக் இம்மொபிலிட்டி’ எனப்படும் பக்கவாத நிலையை ஏற்படுத்துகிறது என்று ஹிகுவேரா கூறுகிறார். “இது சுறா தலைகீழாக மாற்றப்படும்போது இயற்கையாகவும் தற்காலிகமாகவும் ஏற்படும் ஒரு பக்கவாதமாகும். இது சுறாவை முற்றிலும் முடக்கி, ஒரு நிமிடத்திற்குள் எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாத நிலைக்கு ஆளாக்குகிறது.”
“சுறா முடக்கப்பட்டவுடன், ஓர்க்கா திமிங்கிலங்கள் எதிர் தாக்குதலால் காயமடையும் வாய்ப்பின்றி எளிதாக சுறாவின் வயிற்றுப் பகுதியை வெட்டி, ஆற்றல் செறிந்த ஈரலை அகற்றி உண்ண முடியும்.”
இந்த வேட்டை முறை ஒரு கற்றறிந்த நடத்தை என்று ஹிகுவேரா கூறுகிறார். “இது இந்த குடும்பத்தின் கலாசாரக் கற்றலாகும், அவர்கள் தலைமுறை தலைமுறையாக இந்தத் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இது குடும்பத் தலைவியான தாய் வழித் திமிங்கலத்திடமிருந்து வருகிறது.”
கலிபோர்னியா வளைகுடாவில், வெப்பமடைந்து வரும் நீர்நிலைகள் இளம் வெள்ளைச் சுறாக்களின் இருப்பை அதிகரித்துள்ளன. இது அவற்றை நேராக மொக்டெசுமா குழுவின் வசிப்பிடத்திற்குள் கொண்டு சென்று நிறுத்துகிறது என்று ஹிகுவேரா கூறுகிறார்.
“பருவநிலை மாற்றம் இந்த உச்ச வேட்டையாடிகளை ஒன்றுக்கொன்று நெருக்கமான பகுதிகளுக்குக் கொண்டுவருகிறது, ஆனால் இது நேரடியாக அவை எவ்வாறு வேட்டையாடுகின்றன என்பதை மாற்றவில்லை. ஓர்க்கா திமிங்கலங்களுக்கு தங்களிடம் ஏற்கனவே உள்ள அதிநவீன வேட்டை உத்திகளை ஒரு புதிய இலக்கின் மீது பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.”
இந்த மாற்றம் வேறு இடங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கலாம். ஆஸ்திரேலியாவிலும் வெள்ளைச் சுறாக்கள் ஓர்க்கா திமிங்கிலங்களால் வேட்டையாடப்படுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2023 இல், தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் 4.7 மீட்டர் நீளமுள்ள வெள்ளைச் சுறா ஒன்றின் உடல் கரை ஒதுங்கியது. அந்தச் சுறாவின் ஈரல், செரிமான மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் காணாமல் போயிருந்தன.
“நாங்கள் தடயவியல் சோதனைகளை மேற்கொண்டோம், காயங்களில் ஓர்க்கா திமிங்கலத்தின் டிஎன்ஏ இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆஸ்திரேலியக் கடற்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் வேட்டை இதுவாகும்” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய ரீவ்ஸ். ஆஸ்திரேலியக் கடற்கரையின் பிற பகுதிகளிலும் ஓர்க்கா திமிங்கிலங்கள் சுறாக்களை வேட்டையாடுவது காணப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த இரண்டு உச்ச வேட்டையாடிகளும் எதேச்சையாக ஒன்றுகூடும் பகுதிகள் மிகக் குறைவாக இருப்பதால் இது அரிதாகவே நிகழ்கிறது என்று ரீவ்ஸ் கூறுகிறார்.
வெள்ளைச் சுறாக்களின் இடப்பெயர்வு
பட மூலாதாரம், Dave Hurwitz/ Simon’s Town Boat Company
தென்னாப்பிரிக்காவில் ஓர்க்கா திமிங்கலங்களின் தாக்குதல்கள், வெள்ளைச் சுறாக்களின் இயல்புகளில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சுறாக்கள் மேற்கு கேப்பில் உள்ள தங்களது முந்தைய வாழிடத்திலிருந்து திடீரென வெளியேறி, ஆழ்கடலை நோக்கிச் சென்றுவிட்டன அல்லது கடற்கரையோரமாகக் கிழக்கு நோக்கி நகர்ந்துவிட்டன என்று டவுனர் கூறுகிறார். கடல் உயிரியலாளரான இவர், இந்த நிகழ்வைத் தான்சானியாவின் செரங்கேட்டி காடுகளில் உள்ள வேட்டையாடி விலங்குகளின் நடத்தையுடன் ஒப்பிடுகிறார்.
“சிறுத்தைகள் மட்டுமே உச்ச வேட்டையாடிகளாக உள்ள ஒரு பகுதிக்கு சிங்கங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்; அப்பொழுது சிறுத்தைகள் சிங்கங்களுடன் பகலில் மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக இரவில் அதிகமாக இரையைத் தேடத் தொடங்குகின்றன” என்று அவர் கூறுகிறார்.
“ஆனால் ஆப்பிரிக்க காட்டுநாய்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்கின்றன. அவை அவ்விடத்தை விட்டு முற்றிலும் வெளியேறிச் சென்றுவிடுகின்றன. தங்களது பகுதியில் புதிதாக வந்து கலக்கும் ஒரு உச்ச வேட்டையாடியின் வருகைக்கு வெள்ளைச் சுறாக்கள் காட்டுநாய்களைப் போலவே பதிலளிப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.”
தென்னாப்பிரிக்காவின் வெள்ளைச் சுறாக்கள் இத்தகைய ஓர்க்கா தாக்குதல்கள் கண்டறியப்படுவதற்கு முன்பே அழிவின் விளிம்பில் தான் இருந்தன. சுறாவின் தாடைகள் மற்றும் துடுப்புகளுக்காக வேட்டையாடப்படுவது , மாசுபாடு, உணவு ஆதாரங்கள் குறைந்து வருவது, மற்றும் சுறா வலைகள் மற்றும் தூண்டில்களின் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாகத் தென்னாப்பிரிக்காவின் வெள்ளைச் சுறாக்கள் “அழிவை எதிர்நோக்கி” இருப்பதாக ஆறு ஆண்டுகாலம் நீடித்த 2016 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று முடிவு செய்தது. 2015 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றின்படி, இந்த இனம் மிகக் குறைந்த மரபணு வேறுபாட்டையும் சந்தித்து வருகிறது.
அப்போது முதல் இந்தப் பிராந்தியத்தின் எண்ணிக்கை மேலும் சரிவைச் சந்தித்துள்ளது என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலாளரும், மேற்கண்ட இரண்டு ஆய்வுகளுக்கும் தலைமை தாங்கியவருமான சாரா ஆண்ட்ரொட்டி கூறுகிறார். மீன்பிடித் தொழிலில் தற்செயலாகப் பல சுறாக்கள் கொல்லப்பட்டாலும், பிரபலமான கடற்கரைகளிலிருந்து சுறாக்களைத் தொலைவில் வைப்பதற்காகக் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுறா வலைகளே வெள்ளைச் சுறாக்கள் இறப்பதற்கான முக்கியச் சட்டப்பூர்வக் காரணமாக உள்ளன என்று அவர் கூறுகிறார். அதற்கு அடுத்தபடியாக, இந்த வேட்டையாடிகளுக்கு உணவாகும் இளம் குட்டிச் சுறாக்களைக் கொல்வதில் நீண்ட வலை மீன்பிடித்தல் காரணமாக அமைகிறது.
“நாம் அவற்றுக்கு மீண்டு வருவதற்கோ அல்லது உயிர்வாழ்வதற்கோ ஒரு வாய்ப்பைக் கொடுப்பதில்லை” என்று ஆண்ட்ரொட்டி கூறுகிறார். “அவை நம் கண் முன்பே அழிந்துவருவதை நாம் காண்கிறோம்.”
ஓர்க்கா திமிங்கலங்களின் வேட்டையாடும் தன்மையானது இந்தச் சரிவை மேலும் துரிதப்படுத்துவதோடு, பரந்த கடல் சூழலியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கேப் டவுனில் உள்ள ஃபால்ஸ் பே பகுதியில், 2015ஆம் ஆண்டு வரை ஓரளவு நிலையான வெள்ளைச் சுறா எண்ணிக்கை ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அந்தப் பகுதியிலிருந்து வெள்ளைச் சுறாக்கள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. சுறாக்களைத் தின்னும் ஓர்க்கா திமிங்கலங்களே இந்தச் சரிவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
கலிபோர்னியா கடற்கரையோரம், இதே போன்றதொரு இடப்பெயர்வு முறை கண்டறியப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே சுமார் 27 மைல் (43 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள சுறாக்களின் புகலிடமான தென்கிழக்கு ஃபாரல்லன் தீவிலிருந்து, ஓர்க்கா திமிங்கலங்களின் குறுகிய கால வருகை வெள்ளைச் சுறாக்களை அங்கிருந்து இடம்பெயரச் செய்துள்ளது என்று அப்பகுதியில் நீண்ட கால மின்னணு டேக்கிங் தரவுகளைப் பகுப்பாய்வு செய்த 2019 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஓர்க்கா திமிங்கலங்கள் வந்த சில நிமிடங்களிலேயே வெள்ளைச் சுறாக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டதை அந்த பதிவுகள் காட்டின. அடுத்த பருவகாலம் வரும் வரை அவை அந்தத் தீவிற்குத் திரும்பவில்லை. வழக்கமாக வெள்ளைச் சுறாக்கள் வேட்டையாடும் யானைச் சீல் போன்ற பிற கடல்வாழ் உயிரினங்கள் மீது இதன் தொடர் தாக்கங்கள் ஏற்பட்டன. வெள்ளைச் சுறாக்கள் வெளியேறிய ஆண்டுகளில் யானைச் சுறாக்கள் மீது நான்கிலிருந்து ஏழு வரை குறைவான வேட்டையாடும் நிகழ்வுகள் நடந்ததாகத் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மேற்கு கேப்பில் உள்ள வெள்ளைச் சுறாக்களின் பாரம்பரியக் கூடும் இடங்களிலிருந்து அவை இடம்பெயர்வதை ஊக்குவிப்பதன் மூலம், கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆப்பிரிக்கப் பென்குயின்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் மீது ஓர்க்கா திமிங்கலங்கள் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக டவுனர் கூறுகிறார்.
இதற்கிடையில், வெள்ளைச் சுறாக்கள் இல்லாததால், வெண்கலத் திமிங்கலச் சுறா எனப்படும் மற்றொரு வகை சுறா அந்தப் பகுதிக்கு வந்துவிட்டதாக டவுனர் கூறுகிறார். மேற்கு கேப்பில் வெள்ளைச் சுறாக்கள் இல்லாத காரணத்தினால், தற்போது கூண்டு டைவிங் நடவடிக்கைகளின்போது இந்தச் சுறாக்கள்தான் முதன்மை இலக்காக உள்ளன.
கேப் டவுனில் உள்ள ஃபால்ஸ் பே பகுதியில் வெள்ளைச் சுறாக்கள் மறைந்துபோனது உணவுச் சங்கிலியில் ஒரு தொடர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவற்றின் இரையான கேப் ஃபர் சீல்கள் மற்றும் செவங்கில் சுறாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் சிறிய சுறாக்கள் மற்றும் மீன்களின் எண்ணிக்கை குறைய வழிவகுத்துள்ளது.
ஓர்க்கா திமிங்கிலங்கள் கடற்கரையின் ஒரு பகுதியிலிருந்து வெள்ளைச் சுறாக்களை இடம்பெயரச் செய்யும்போது அல்லது கொல்லும்போது, அதற்கான சூழலியல் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று டவுனர் கூறுகிறார். “அந்த விளைவுகள் அரங்கேறுவதை இப்போது நாங்கள் பார்த்து வருகிறோம்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு