• Sat. Nov 14th, 2026

24×7 Live News

Apdin News

வைத்தியர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வால் மகப்பேறு நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

Byadmin

Nov 14, 2026


இங்கிலாந்தில் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் (Obstetrics and Gynaecology) பயிற்சி பெறும் இளம் வைத்தியர்கள் கடுமையான பணிச்சுமை, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகி வருவதாகப் பொது மருத்துவக் கவுன்சில் (GMC) எச்சரித்துள்ளது.

இந்த நிலைமை நோயாளிகளின் பராமரிப்பில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 52,000 பயிற்சி வைத்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2026ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசியப் பயிற்சி ஆய்வில் 68 சதவீதமானோர் பங்கேற்றிருந்தனர். இதன்படி, மகப்பேறு பிரிவில் பயிற்சி பெறும் வைத்தியர்களில் 70 சதவீதமானோர் மிதமானது முதல் அதிக அளவிலான மனச்சோர்வு ஆபத்தில் உள்ளனர்.

ஏனைய மருத்துவப் பிரிவுகளில் இது சராசரியாக 61 சதவீதமாகவே உள்ளது. மேலும், இத்துறையில் பயிற்சி பெறுவோரில் மூவரில் ஒருவர் (33%) தொடர்ச்சியான கடுமையான தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், தமது கவலைகளைச் சிரேஷ்ட வைத்தியர்களிடம் வெளிப்படுத்த அச்சப்படுவதாகவும் ஆய்வு கூறுகின்றது.

பணிச்சூழல் கலாச்சாரம் மற்றும் தலைமைத்துவத்தில் ஏற்படும் தோல்விகளே அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதாக பொது மருத்துவக் கவுன்சிலின் தலைவர் சார்லி மாஸ்ஸி (Charlie Massey) தெரிவித்துள்ளார்.

முன்னாள் வைத்தியரும் நூலாசிரியருமான ஆடம் கே (Adam Kay), 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் 16 வருடங்கள் கடந்தும் மருத்துவப் பணிச்சூழலில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என விமர்சித்துள்ளார்.

பணியாளர் பற்றாக்குறை மற்றும் மேலதிக நேரப் பணி காரணமாகப் பல வைத்தியர்கள் மனச்சோர்வின் விளிம்பில் உள்ளதாக வைத்தியர்களான மிரியம் பிராடன் (Dr Miriam Broughton) மற்றும் கேட் பார்டன் (Dr Kat Barton) ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பணியாளர்கள் தமது கவலைகளைத் தெரிவிக்க அனைத்து தேசிய சுகாதார சேவை (NHS) கட்டமைப்புகளிலும் விசேட பொறுப்பாளர்கள் (Freedom to Speak Up Guardian) நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்புத் திணைக்களம் (DHSC) தெரிவித்துள்ளது.

மகப்பேறு பிரிவுகளில் அழுத்தத்தைக் குறைக்கக் கடந்த ஆண்டில் 600க்கும் மேற்பட்ட புதிய மகப்பேறு தாதியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், விசேட பணிக்குழு இதற்குத் தீர்வு காணச் செயற்பட்டு வருவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘KINGS OF GAANA 2026’ – நாளை முதல் நுழைவு சீட்டுகள் விநியோகம்

The post வைத்தியர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சோர்வால் மகப்பேறு நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! appeared first on Vanakkam London.

By admin