• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் இரண்டு மோதி விபத்து: 68 பேர் உயிரிழப்பு

Byadmin

Oct 29, 2026


ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதன்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு ரயில்களினதும் பல பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்கள், சடலங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரயில் பாதையின் உயரமான பகுதியிலிருந்து குறைந்தது மூன்று பெட்டிகள் சரிந்து கீழே விழுந்துள்ளதாகவும், இதனால் ரயில் பெட்டிகளின் உடைந்த உலோகக் கட்டமைப்புகள் உள்ளிட்ட இடிபாடுகள் அப்பகுதியில் சிதறிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகிலுள்ள வீதிகள் ஊடாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், அருகிலுள்ள நகரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய குடிநீரையும் அத்தியாவசியப் பொருட்களையும் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

விபத்துக்குள்ளான ரயிலொன்றின் பின்பக்கப் பெட்டியில் பயணித்த மிகுவேல் என்ற பயணி சம்பவத்தை விபரிக்கையில், திடீரென பலத்த சத்தம் கேட்டதுடன் ரயில் தடம்புரளப் போவது போன்று சுமார் பத்து விநாடிகள் அதிர்வு நீடித்ததாகவும், பின்னர் ஜன்னல் வழியாக சேதமடைந்த மற்றைய ரயிலைக் காண முடிந்ததாகவும் ஸ்பெயினின் COPE வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான ஆரம்பகட்ட தகவல்களின்படி, சமிக்ஞைக் கோளாறு காரணமாக ரயில்வே உட்கட்டமைப்பு நிர்வாக நிறுவனமான ADIF வழங்கிய அறிவுறுத்தலின்படி தனியார் நிறுவனமான இரியோ இயக்கிய ரயில் டொலிடோவுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் பயணித்த ரென்ஃபே நிறுவனத்தின் ரயில் நிறுத்தப்பட்டிருந்த இரியோ ரயிலுடன் மோதியதாகவும் கூறப்படுகிறது. எனினும், தமது ரயில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்ட பின்னரே விபத்து இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள ரென்ஃபே நிறுவனம், ரயில்களின் நகர்வு, சமிக்ஞை நிலைமை மற்றும் விபத்துக்கான பின்னணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஸ்பெயினில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது பாரிய ரயில் விபத்தாக இது பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கோர்டோபா மாகாணத்தின் அடமூஸ் பகுதியில் இடம்பெற்ற அதிவேக ரயில் விபத்தில் 46 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நாட்டின் ரயில்வே பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தற்போதைய விபத்து ஸ்பெயினின் ரயில் போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்த கரிசனையை மீண்டும் அதிகரித்துள்ளது.

By admin