13
மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் மற்றும் பதற்ற சூழ்நிலையின் காரணமாக உலகின் முக்கிய கடற்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
ஹார்முஸ் நீரிணைஎன்பது உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கடல் பாதையாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் இந்த வழியாகவே கடந்து செல்கின்றன. எனவே, அப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் உலக பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மீது எந்தவொரு நாடும் தனிப்பட்ட கட்டுப்பாட்டை செலுத்த அனுமதிக்க முடியாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளுக்கும் திறந்த சர்வதேச கடல் பகுதி. இதை யாரும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. இது தற்போது நடைபெற்று வரும் முக்கிய பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகும்,” என்றார்.
அத்துடன், ஓமான் தொடர்பாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். “ஓமான் ஏனைய நாடுகளைப் போலவே பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். இதை அவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்,” என டிரம்ப் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயலும் ஈரான், அந்த வழியாக பயணிக்கும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வருவாயை ஓமனுடன் பகிர்ந்து கொள்ளும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது உலக வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. இந்த சூழலில் டிரம்பின் எச்சரிக்கை, மேற்காசிய அரசியல் நிலவரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.