• Fri. Oct 30th, 2026

24×7 Live News

Apdin News

ஹொங்கொங் சர்வதேச சிக்சஸ் ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை வென்றது இலங்கை

Byadmin

Oct 30, 2026


ஹொங்கொங், மொங் கொக் மிஷன் றோட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான பி குழுவுக்கான தனது ஆரம்ப ஹொங்கொங் சர்வதேச சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றது.

அணிக்கு அறுவர் கொண்ட இப் போட்டியில் விஷேன் ஹலம்பகே ஆட்டம் இழக்காமல் சாதனைமிகு 80 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் வெற்றியில்  முக்கிய பங்காற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 6 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும் சபிர் ரஹிம் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 5.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இப் போட்டியில் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

முதலாவது பந்து வைட் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த பந்தில் சமிந்து விஜேசிங்க ஆட்டம் இழந்தார்

இதனைத் தொடர்ந்து கடைசி ஆட்டக்காரருக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி விஷேன் ஹலம்பகே, சிக்ஸ் ஒன்றை விளாசி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

விஷேன் ஹலம்பகே 17 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளை விளாசினார்.

இக் குழுவில் இடம்பெறும் மூன்றாவது அணியான ஸ்கொட்லாந்திடம் தோல்வி அடைந்த பங்களாதேஷ் குவளைப் பிரிவில் போட்டியிடவுள்ளது.

இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் வெற்றிபெறும் அணி பிரதான கிண்ணப் பிரிவிலும் தோல்வி அடையும் அணி கோப்பை பிரிவிலும் போட்டியிடும்.

ஹொங்கொங் சர்வதேச சிக்சஸ் போட்டியில் 12 அணிகள் நான்கு குழுக்களில் பங்குபற்றுகின்றன.

By admin