ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சந்திக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் போட்டி லக்னௌவில் நடக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும்.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகள் பெற்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் போட்டியில் அவர்கள் தோல்வியைத் தவிர்த்து (வெற்றி அல்லது முடிவு இல்லை), நாளை நடக்கும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த சீசனை பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச் சிறப்பாகத் தொடங்கியிருந்தது. அவர்கள் விளையாடிய முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட, மற்ற 6 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது அந்த அணி. ஆனால், கடைசி 6 போட்டிகளில் அவர்களால் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆறுமே தோல்விகள். அதனால், தற்போது புள்ளிப் பட்டியலில் அந்த அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே அந்த அணியின் பந்துவீச்சு தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், சமீபமாக அவர்களின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அதன்காரணமாக கடந்த சில போட்டிகளில் பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது பஞ்சாப் கிங்ஸ். அதுவும் அந்த அணியின் நிலைத்தன்மையை பாதித்துவிட்டது.
அதேசமயம் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. அந்த அணி 13 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி இந்தப் போட்டியில் வென்று, நாளை மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தால், லக்னௌவால் கடைசி இடத்தில் சீசனை முடிப்பதைத் தவிர்க்க முடியும்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுதத்து. அதிகபட்சமாக ஜாஷ் இங்லிஸ் 72 ரன்கள் எடுத்தார்.
பவர்பிளேவில் கிடைத்த 3 பெரிய ஓவர்கள்
மிட்செல் மார்ஷ் இல்லாததால் இந்தப் போட்டியில் இங்லிஸ் உடன் தொடக்க வீரராகக் களமிறங்கினார் அங்ரிஷ் ரகுவன்ஷி.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ஜாஷ் இங்லிஸ் 4 பவுண்டரிகள் விளாசியதால் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடக்கம் சிறப்பாக அமைந்திருந்த லக்னௌ அணிக்கு, இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே அதிர்ச்சிகொடுத்தார் அஸ்மதுல்லா ஓமர்சாய். அவர் பந்துவீச்சில் அர்ஷன் குல்கர்னி கீப்பர் பிரப்சிம்ரன் சிங் வசம் கேட்ச் கொடுத்து ‘கோல்டன் டக்’ ஆனார்.
அடுத்து வந்த நிகோலஸ் பூரன் ரன் எடுக்கத் தடுமாறினார். 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார் மார்கோ யான்சன்.
3 ஓவர்கள் முடிவில் 20/2 என்ற நிலையில் இருந்த எல்எஸ்ஜி அணிக்கு நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஜாஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் படோனி இருவரும். இந்தக் கூட்டணி 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தது.
முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த படோனி, ஐந்தாவது ஓவரிலிருந்து தன் வேகத்தைப் பன்மடங்கு கூட்டினார்.
மார்கோ யான்சன் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை படோனி விளாசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் எடுக்கப்பட, ஓமர்சாய் வீசிய 6வது ஓவரில் 24 ரன்கள் வந்தது. அந்த ஓவரில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்தார் படோனி. அதன் காரணமாக, பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்.
அதிரடியைத் தொடர்ந்த இங்லிஸ்
பவர்பிளேவு முடிந்த அடுத்த ஓவரிலேயே ஆயுஷ் படோனி வெளியேறினார். சஹல் வீசிய பந்தை அவர் அடிக்கத் தவற, பந்தை கீப்பர் பிரப்சிம்ரன் சிங் பிடித்தார். பந்தை விட்டுவிட்டு தன்னை அறியாமல் தன் காலை ஒரு நொடி படோனி தூக்கிவிட, அந்த நொடிப்பொழுதில் ஸ்டம்பிங் செய்தார் பிரப்சிம்ரன் சிங். அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் படோனி.
அடுத்து ஜோடி சேர்ந்த இங்லிஸ் மற்றும் கேப்டன் ரிஷப் பன்ட் தங்களின் அணியின் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பன்ட், சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பன்ட் அவுட்டான பிறகும் தன் அதிரடியத் தொடர்ந்தார் ஜாஷ் இங்லிஸ். ஒவ்வொரு ஓவரிலும் எப்படியும் பவுண்டரியோ சிக்ஸரோ அடித்துக்கொண்டிருந்த அவர் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து சஷாங்க் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த சீசனில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடிய இங்லிஸ், மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்தார்.
இங்லிஸ் அவுட்டான பிறகு லக்னௌ அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 18வது மற்றும் 19வது ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் அப்துல் சமத் சற்று அதிரடி காட்டி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுதத்து லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். சமத் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது
பிளேயிங் லெவனில் யார்?
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்
இந்தப் போட்டிக்கான எல்எஸ்ஜி அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. மிட்செல் மார்ஷ் நாடு திரும்பியதால் அர்ஷின் குல்கர்னி சேர்க்கப்பட்டார். ஆகாஷ் சிங், மயாங்க் யாதவ், திக்வேத் ராதி ஆகியோருக்குப் பதிலாக மொஹம்மது ஷமி, முகுல் சவுத்ரி மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இடம்பெற்றனர். லக்னௌ அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி இது.
இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. மார்கோ யான்சன் மற்றும் வைஷாக் விஜயகுமார் ஆகியோர் லாகி ஃபெர்குசன் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட்டார்.