• Wed. Sep 2nd, 2026

24×7 Live News

Apdin News

9 மாத கர்ப்பம் என சிசேரியன்: கருப்பையில் குழந்தை இல்லை; பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

Byadmin

Sep 2, 2026


பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹம்தார்டு வைத்தியசாலையில் 9 மாத கர்ப்பிணி என்று கூறி அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, அவரது கருப்பையில் குழந்தை எதுவும் இல்லை என்ற அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட சமூக அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, தான் கர்ப்பமாக இருப்பதாகக் குடும்பத்தினரிடம் அந்தப் பெண் பொய் கூறியுள்ளார்.

பிரசவ காலம் நெருங்கியதும், மற்றொரு வைத்தியசாலையில் எடுக்கப்பட்டதாக ஒரு போலி அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அறிக்கையை தயாரித்து, ஹம்தார்டு வைத்தியசாலையில் அவர் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், பணியில் இருந்த மருத்துவர் அவருக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

அறுவை சிகிச்சையின் பின்னர் குழந்தை இல்லை எனத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வைத்தியசாலை குழந்தையைத் கண்டறியத் தவறிவிட்டது எனக் குற்றம்சாட்டி பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

ஆனால், பொலிஸார் நடத்திய அரசு மருத்துவமனைப் பரிசோதனைகள் மற்றும் ஆகா கான் வைத்தியசாலை ஆய்வுகளின் முடிவில், அந்தப் பெண் ஒருபோதும் கர்ப்பமாகவே இருந்ததில்லை என்பது அறிவியல் பூர்வமாக உறுதியானது.

இதன் பின்னரே, சமூக அழுத்தம் காரணமாகத் தான் பொய் கூறியதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

அத்துடன், அந்தப் பெண் தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தை மறந்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அவரது கணவர் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து, கர்ப்பத்தை முறையாக உறுதி செய்யாமல் ஒரு வைத்தியசாலை எவ்வாறு சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்ற மருத்துவக் கவனக்குறைவு குறித்த கடுமையான கேள்விகளை மருத்துவ நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் சிந்து சுகாதார ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

By admin