• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

Breaking நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்!

Byadmin

Jul 6, 2026


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கடுமையான வன்முறை மற்றும் மோதல் சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறைச்சாலைக்குள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்துள்ள பாதுகாப்புப் பிரிவினர், நிலைமையை சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களிலும் காயமடைந்தவர்களிலும் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய வன்முறை, கைதிகள் குழுவொன்று திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக உருவானதாக பாதுகாப்புத் தரப்புகள் கூறுகின்றன. நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஏற்பட்ட பதற்றநிலை நள்ளிரவு நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தபோதிலும், இன்று திங்கட்கிழமை (06) காலை மீண்டும் சூழ்நிலை மோசமடைந்துள்ளது. சுமார் 1,800க்கும் அதிகமான குறுகியகால கைதிகளும் விளக்கமறியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சிறைச்சாலையில், நேற்று பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே பின்னர் பெரும் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.

அந்த ஆரம்ப மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலை ஒருவர் வெளியிட்டமை இந்த மோதலுக்கான காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆண் மற்றும் பெண் கைதிகளில் சிலர் சிறைச்சாலையின் கூரைகளில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்கிருந்து கீழே விழுந்த நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் நுழைந்து மருந்துகளை கொள்ளையடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடற்பயிற்சிக் கூடத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரும்புத் தடிகள் தாக்குதல்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று நள்ளிரவிலேயே அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை அமைதியான சூழ்நிலை காணப்பட்ட போதிலும், பின்னர் கைதிகள் மீண்டும் ஒருங்கிணைந்த முறையில் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கியதாகவும், அவர்களிடமிருந்த அலைபேசிகளையும் பறித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்துக்கு சிறைச்சாலையின் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிராக எழுந்த அதிருப்தியே காரணமாக இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வன்முறையை ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்ற கைதி வழிநடத்தியதாக பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2016ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி கட்டிவைத்து, தூபிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுகளும் அவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

By admin