• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

CSK vs MI: சிஎஸ்கே மீண்டும் வெற்றி – மும்பை இந்தியன்சை எளிதில் வென்றது எப்படி?

Byadmin

May 3, 2026


CSK vs MI, ருதுராஜ், கம்போஜ், ஓவர்டன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தடுமாற, அரைசதம் அடித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் இரண்டுமே பெரிய வெற்றிகள். வான்கடேவில் 103 ரன் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே, சேப்பாக்கத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது. மும்பை இந்தியன்ஸை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, அந்த இலக்கை 18.1 ஓவர்களிலேயே எட்டிவிட்டது சிஎஸ்கே அணி.

இந்தப் போட்டி ஆடப்பட்ட ஆடுகளம், போட்டியில் கண்டிப்பாக தாக்கம் ஏற்படுத்தியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான அந்தப் பகல் போட்டியைத் தவிர்த்து, இதுவரை இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகள் பேட்டிங்குக்கு சாதகமான ‘flat’ ஆடுகளங்களில் தான் ஆடப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஆடுகளம் அப்படி இருக்கவில்லை. இது இரட்டைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒருசில பந்துகள் அவ்வளவாக மேலே எழும்பவேயில்லை. அதேசமயம் ஒருசில பௌலர்கள் பந்துவீசியபோது நல்ல பவுன்சையும் பார்க்க முடிந்தது. ஆடுகளத்தின் இந்தத் தன்மையால் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் ரொம்பவே தடுமாறினார்கள் என்பதை மறுக்க முடியாது.

என்னதான் ஆடுகளம் ஒருபக்கம் சவால் கொடுத்தாலும், மும்பை அணியின் செயல்பாடுமே எதிர்பார்க்காத ஒன்றாகத்தான் இருந்தது. அவர்களின் முகத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு ஆடுவதன் பொறுப்பும், அது ஏற்படுத்தும் நெருக்கடியும் தெரிகிறது. முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தது போல் கிடைக்காததால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது அவர்களின் சீசனே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இதற்கு மேல் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மிகமிக கடினமான ஒன்று.

இந்தப் போட்டிக்கான முன்னோட்டத்தில் நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரு அணிகளின் வெற்றிக்கும் கேப்டன்களின் செயல்பாடு மிகவும் முக்கியம் என்று. அதற்கு ஏற்ப ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக முன்னின்று ஒரு அரைசதம் அடித்து, அணியை வெற்றி பெறவைத்து ஆட்ட நாயகன் ஆகிவிட்டார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தடுமாற (23 பந்துகளில் 18 ரன்கள்) மும்பை இந்தியன்ஸும் கடுமையாகத் தடுமாறியது.

By admin