தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 15-ந்தேதி நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பிரசாரத்திற்காக மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மாலையில் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கொடிசியா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடக்க கூடிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன், அவினாசியில் போட்டியிடும் மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி மீண்டும் கோவை விமான நிலையம் சென்று டெல்லி திரும்புகிறார். பொதுக்கூட்டத்தையொட்டி கொடிசியா மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் வசதி, குடிநீர், கழிப்பறை, வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடவசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து கூட்டம் நடக்கும் மைதானம் உள்பட பல இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக மாநகருக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மாநகரில் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டல பகுதிகளுடன், அவினாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, காந்திமாநகர், சிங்காநல்லூர், நேருநகர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூர், இருகூர் ஆகிய பகுதிகளில் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது. தடையை மீறி பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையே இன்று பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பிரதமர் வரும் போது அவரை எப்படி அழைத்து செல்வது என்பது உள்பட பல்வேறு ஒத்திகையில் அவர்கள் ஈடுபட்டனர்.