• Thu. Nov 26th, 2026

24×7 Live News

Apdin News

அப்பா குட்டி | திரைவிமர்சனம்

Byadmin

Nov 26, 2026


அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன்

நடிகர்கள் : விஜய் அண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பக்ஸ் பகவதி பெருமாள், ஹரி பிரியா இசை,  ‘அருவி’ மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, முருகானந்தம், லிசி அண்டனி மற்றும் பலர்.

இயக்கம் : மு. மாறன்

மதிப்பீடு : 3/5

‘அப்பா குட்டி’ திரைப்படத்தை பட மாளிகையில் கண்டு ரசிக்கும் பார்வையாளர்கள்-  படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அவர்களது கண்களில் இருந்து சிறிதளவேனும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கும். அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக இருக்கிறது’ என வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் இப்படத்தை பற்றி உளவியல் ரீதியான ஒரு கருத்தியலை முன்வைத்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் நிறைவு காட்சிக்கு பிறகு கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னையில் இருந்து தமிழகத்தில் உள்ள மலை வாசஸ்தலமான ஊட்டிக்கு கை குழந்தையுடன் வருகை தரும் சூர்யா( விஜய் அண்டனி) – அந்த பெண் பிள்ளைக்கு தியா ( பேபி லிதன்யா) என பெயரை சூட்டி வளர்க்கிறார். சூர்யா தான் வசிக்கும் ஊட்டியில் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புத் தள மேனேஜராகவும் பணியாற்றுகிறார்.  தியாவிடம் அவரது தாய் இறந்து விட்டதாக கூறி, அன்புடன் வளர்த்து வருகிறார். தனியார் பாடசாலையில் கல்வி பயிலும் தியா மீது அனிதா ( ப்ரீத்தி அஸ்ராணி) எனும் அங்கு பணியாற்றும் ஆசிரியை தனி கவனம் செலுத்துகிறார். ஏனெனில் தியாவின் தந்தையான சூர்யா மீதான காதல். தன் காதலை சூர்யாவிடம் அனிதா தெரிவிக்க, அதை ஏற்க மறுத்து விடுகிறார் சூர்யா. இந்நிலையில் தியாவிற்கு உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பிரத்யேக உடல் நல பிரச்சனை ஏற்படுகிறது. இதனை குணமாக்க வைத்தியசாலை செல்லும் போது விஜய் அண்டனியின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியாகிறது. சூர்யா யார்? அவரின் அசலான பின்னணி என்ன? சூர்யாவின் மனைவி யார்? அந்த குழந்தைக்கும், சூர்யாவிற்கும் இடையே இருக்கும் உறவு என்ன? சூர்யா அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்றினாரா? இல்லையா? அனிதாவின் காதலை சூர்யா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது போன்ற வினாக்களுக்கு உணர்வுபூர்வமாக விடையளிப்பது தான் இப்படத்தின் கதை.

முதல் பாதியில் சூர்யாவிற்கும், தியாவிற்கும் இடையேயான பாசத்துடன் கூடிய காட்சிகள் … அனிதாவிற்கும் சூர்யாவிற்கும் இடையேயான காதல் தொடர்பான காட்சிகள் என படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நகர்ந்தாலும்.. சில எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரசியமாகவே பயணிக்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் சூர்யா தியாவின் உயிரை காப்பாற்றுவதற்காக.. மேற்கொள்ளும் தியாகத்துடன் கூடிய பயணத்தில் புதிய புதிய கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகமாகி கொண்டே செல்வது.. சூர்யா கதாபாத்திரத்திற்கான கதாநாயக பிம்பத்தை மட்டுமே கட்டமைக்கிறது.

அத்துடன் இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்கள்…. நகைச்சுவை காட்சிகள்… மனிதர்களின் குரூர உளவியல் நிலைப்பாடுகள்… நீதிமன்ற நடவடிக்கைகள்… என எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய வணிகத்தனம் மிக்க படைப்பாக பயணிப்பதால் ஒரு தரப்பு ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடிகிறது.

அதிலும் உச்சகட்ட காட்சியில் தியா தன் இறந்து விட்டதாக சொல்லப்பட்ட தாயை நேரில் சந்தித்து பேசும் காட்சி…. ! படக் குழுவினர் விவரித்ததைப் போல் மென்மையான மனம் படைத்தவர்களின் கண்களில் கண்ணீர் துளி லேசாக எட்டிப் பார்க்கிறது.

சூர்யா கதாபாத்திரம் தன் காதலியுடன் கடற்கரையில் சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் உரையாடிக் கொண்டிருக்கும்போது… சுண்டல் விற்கும் சிறுவனுக்காக சூர்யா செய்யும் செயல்… அவனது கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதற்கு கடினமாக்குகிறது.

சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் அண்டனி வழக்கத்தை விட கூடுதலாக இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

அனிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பிரீத்தி அஸ்ராணி ஆசிரியை கதாபாத்திரத்தை விட.. சூர்யாவின் காதலியாக நடிக்கும் காட்சிகளில் ரசிகர்களை வசீகரிக்கிறார்.

தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பேபி லிதன்யா அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதை கலங்கடிக்கிறார்.

ஜென்சன் திவாகர் விட முருகானந்தத்தின் நகைச்சுவைக்கு ரசிகர்களின் கரவொலி அதிகம்.

ஒளிப்பதிவு – படத்தொகுப்பு-  பின்னணி இசை-  பாடல்கள்- அனைத்தும் இயக்குநருக்கு பக்கபலமாக திகழ்ந்து இருக்கிறது.

இந்திய மாநகரம் ஒன்றில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும்.. படைப்பாளியின் படைப்பாக்க சுதந்திரம் இன்னும் நேர்த்தியாக வெளிப்பட்டிருக்கலாம் என்பதுதான் பார்வையாளர்களின் எண்ணம்.

அப்பா குட்டி –  ரசிகர்களின் செல்லக்குட்டி

The post அப்பா குட்டி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin