பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கோல்கொண்டா.
இந்தப் பெயரைக் கேட்டவுடன், நினைவுக்கு வருவது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்டமான கோட்டை மட்டுமல்ல, அதை ஆட்சி செய்த நவாப்களும் தான்.
வரலாற்றில் இடம்பெற்றுள்ள கோல்கொண்டா பேரரசை குதுப் ஷாகிகளும், ஆசஃப் ஜாஹிகளும் ஆட்சி செய்தனர்.
ஆனால், கோல்கொண்டா என்றால் கோட்டை என்று பொருள்படும் நிலையில், அதன் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல, வைரங்களுக்காகவும் கோல்கொண்டா புகழ்பெற்றிருந்தது என்பது நினைவுக்கு வருகிறது.
கோல்கொண்டா பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததும், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மற்றும் என்.டி.ஆர் மாவட்டங்களில் அமைந்துள்ளதுமான கொல்லூர் மற்றும் பரிதாலா பகுதிகள் முக்கியமான வைரச் சுரங்கங்களாக இருந்தன. இவை தவிர, வேறு பல சுரங்கங்களும் இருந்தன.
இங்கிருந்து உயர்தரமான பெரிய வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, ஹைதராபாத் நகரம் வழியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், கோல்கொண்டா பேரரசு வைர வர்த்தகத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
உலகின் மிகவும் பிரபலமான பல வைரங்கள் இங்குதான் கண்டெடுக்கப்பட்டதாகப் பல வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர்.
வைரங்களுக்காக கோல்கொண்டா மிகவும் பிரபலமானதால், ஒரு கட்டத்தில் செல்வம், வாய்ப்பு, மகிழ்ச்சி போன்ற சொற்களுக்கு இணையான சொல்லாக ஆங்கில அகராதிகளில் கோல்கொண்டா இடம்பெற்றது. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
பல ஐரோப்பிய வர்த்தகர்களும் பயணிகளும் இந்த வைரங்களைப் பற்றி எழுதியுள்ளனர். பிரெஞ்சு பயணியும், வைரம் மற்றும் ரத்தினக் கல் வியாபாரியுமான ஜீன் பாப்டிஸ்ட் டேவர்னியர் போன்றவர்களின் பதிவுகள் இதில் மிகவும் முக்கியமானவை.
மெரியம்-வெப்ஸ்டர் அகராதியின் படி, கோல்கொண்டா என்றால் வளமான சுரங்கம் என்றும், விரிவான பொருளில் மிகப்பெரிய செல்வத்தின் மையம் என்றும் விளக்குகிறது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சில நகரங்களுக்கு கோல்கொண்டா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உலகின் வேறு சில இடங்களிலும் சுரங்கங்கள், சிறிய நகரங்கள் மற்றும் வைரக் கடைகளுக்காக கோல்கொண்டா அறியப்படுகிறது.
பட மூலாதாரம், Christie’s
அமெரிக்காவில் உள்ள இரு நகரங்கள்
அமெரிக்காவில் கோல்கொண்டா என்ற பெயரில் இரண்டு நகரங்கள் உள்ளன. ஒன்று இல்லினாய்ஸ் மாகாணத்திலும், மற்றொன்று நெவாடாவிலும் அமைந்துள்ளன.
இல்லினாய்ஸில் உள்ள நகரத்துக்கு 1817ஆம் ஆண்டு கோல்கொண்டா என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்பு அந்த நகரம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. எனினும், பெயர் மாற்றத்துக்கான தெளிவான காரணம் எதுவும் இல்லை.
உள்ளூர் உரிமையாளர்களின் (நகர்ப்புற நில உரிமையாளர்கள்) கோரிக்கையின் பேரிலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
“1817ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதியிட்ட நீதிமன்றப் பதிவில், உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, போப் கவுண்டியின் சட்டப்பூர்வ நிர்வாக மையம் இனிமேல் கோல்கொண்டா என்று அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.”
ஆனால், பெயர் மாற்றத்துக்கான காரணம் என்ன?
தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்கை மற்றும் சமூக அறிவியல் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட ‘போப் கவுண்டி நோட்ஸ்’ என்ற புத்தகத்தில், இந்த வார்த்தையை யார் பரிந்துரைத்தார்கள், எங்கிருந்து வந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று எழுத்தாளர் ஜான் டபிள்யூ. ஆலன் குறிப்பிடுகிறார்.
“அந்த உத்தரவுகளில் கோல்கொண்டா என்ற வார்த்தை தடித்த எழுத்தில், சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அது அடிக்கோடிடப்பட்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற உத்தரவுகளில் மூன்று நீதிபதிகளில் குறைந்தது இருவர் கையெழுத்திட வேண்டும். ஆனால், ஒரே ஒரு நீதிபதி மட்டுமே கையெழுத்திட்டிருப்பது கேள்விக்குரியதாக உள்ளது.
அந்தப் பெயர் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக பதிவுகளில் குழப்பம் இருந்தபோதிலும், கோல்கொண்டா என்ற பெயர் அந்த நகரத்துக்கு மிக விரைவாக நிலைபெற்றுவிட்டது” என்று ஆலன் எழுதியுள்ளார்.
கோல்கொண்டா நகரம் தெற்கு இல்லினாய்ஸில் உள்ள போப் கவுண்டியில் அமைந்துள்ளது. ஓஹையோ ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இது ஒரு சிறிய நகரமாகும். இந்தப் பகுதி முன்பு லஸ்க்ஸ் ஃபெர்ரி மற்றும் சாராவில்லே என்று அறியப்பட்டது.
ஒஹையோ ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோல்கொண்டா துறைமுக நகரம், சாலைகள் மற்றும் ரயில்வே வருவதற்கு முன்பு, நீர்வழிப் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றிருந்த காலத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கோல்கொண்டா, போப் கவுண்டியின் முக்கிய நிர்வாக மையமாக இன்னமும் தொடர்ந்து இருந்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
செல்வமே காரணம்
ஆபிரகாம் லிங்கன் ஆவணங்கள் டிஜிட்டல் நூலகத்தின்படி முன்பு சாராஸ்வில், கொரிந்த் மற்றும் லஸ்க்ஸ் ஃபெர்ரி என்று அழைக்கப்பட்ட கோல்கொண்டா, 1817ஆம் ஆண்டு போப் கவுன்டியின் நிர்வாக மையமாக அறிவிக்கப்பட்டது. அங்கு 1820ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது.
இந்தப் பெயரைப் பின்பற்றி மற்ற இடங்களுக்கும் கோல்கொண்டா என்று பெயர் சூட்டப்பட்டதற்கான காரணம் இதேதான் என்றும், கோல்கொண்டாவின் செல்வ வளம்தான் அதற்குக் காரணம் என்றும் இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்து வரும் நனிசெட்டி ஷெரிஷ் விளக்கினார்.
“கோல்கொண்டா என்ற பெயர் அமெரிக்காவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு மட்டும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, இன்னும் பல இடங்களில் இந்தப் பெயர் உள்ளது. அதற்கு ஒரு காரணம், கோல்கொண்டா என்பது செல்வத்துக்கு இணையான பெயராக இருப்பதுதான். அது செல்வத்தின் அடையாளம்.
அதனால் தான் அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர். உதாரணமாக, இந்தியாவில் பல இடங்களில் எல் டொராடோ என்ற ஸ்பானியப் பெயரையும் நாம் பார்க்கிறோம். அது தங்கத்தின் அடையாளம். எல் டொராடோ எப்படி தங்கத்தின் அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல் கோல்கொண்டா வைரங்களின் அடையாளமாக உள்ளது. தங்கம் என்றால் எல் டொராடோ, வைரம் என்றால் கோல்கொண்டா. அதனால்தான் உலகம் முழுவதும் பல இடங்களுக்கும், பல வைரக் கடைகளுக்கும், சில வைரங்களுக்கும் கோல்கொண்டா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று தி இந்துவின் மூத்த பத்திரிகையாளரும், கோல்கொண்டா வைரங்கள் குறித்து ஆய்வு செய்து வருபவருமான நனிசெட்டி ஷெரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
நெவாடாவில், ஆஸ்திரேலியாவில்
அமெரிக்காவில் கோல்கொண்டா என்ற பெயரில் மேலும் ஒரு நகரம் உள்ளது.
இது நெவாடா மாகாணத்தின் ஹம்போல்ட் கவுண்டியில் அமைந்துள்ளது. 1860களில் இங்கு சுரங்கப் பணிகள் தொடங்கியபோது, ஏற்கெனவே வைரங்களுக்காகப் புகழ்பெற்றிருந்த ஹைதராபாத்தின் கோல்கொண்டாவின் பெயரைப் பின்பற்றியே இந்தப் பகுதிக்கு பெயரிடப்பட்டதாகப் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெவாடா மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்களின் வரலாறு குறித்த ஒரு புத்தகத்தில், கோல்கொண்டா என்பதற்கு ‘வளமான சுரங்கம்’ என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
நெவாடா மாநில எழுத்தாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட ‘இடப் பெயர்களின் தோற்றம் – நெவாடா’ என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹென்றி கேனட் எழுதிய ‘அமெரிக்காவில் சில இடப் பெயர்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தில், கோல்கொண்டா என்பதற்கு இந்தியாவில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு நகரத்தின் பெயர் என்று பொருள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறப் பகுதிக்கும் கோல்கொண்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்ளூர் ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தின் படி, இந்தப் பெயர் இந்தியாவில் உள்ள பண்டைய நகரத்தின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாக நமக்குத் தெரிந்த கோல்கொண்டா கோட்டை, கிருஷ்ணா ஆற்றின் கரையில் செல்வம் மற்றும் வைரங்களுடன் ஒத்துப்போகும் உலகப் புகழ்பெற்ற பெயராகத் திகழ்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு