• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

அமேசான் காடுகளில் தனிமையில் வாழ்ந்த அவா பழங்குடிகள் திடீரென மற்றொரு சமூகத்துடன் தொடர்புக்கு வந்தது ஏன்?

Byadmin

Nov 22, 2026


அமேசான் காடுகள், பிரேசில், அவா பழங்குடியினர், இயற்கை

படக்குறிப்பு, பல தசாப்தங்களாக, மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் காரணமாக பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் இருந்து அவா பழங்குடியினர் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    • எழுதியவர், வாலன்டினா ஒரோபெசா
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரேசிலின் அமேசான் காடுகளில் தனிமையில் வாழ்ந்து வந்த பழங்குடியினர் அவர்கள். அமகாரியா, ஜகரேவிஜ், இராஹோவா ஆகிய மூவரும், பிரேசிலின் வடகிழக்கு அமேசான் பகுதியில் தங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் வேட்டையாடியும், மீன்பிடித்தும், பழங்கள் மற்றும் தேன் சேகரித்தும் வாழ்ந்து வந்தனர். ஆனால், மரம் அறுக்கும் இயந்திரங்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அங்கிருந்து தப்பியோடி மறைந்துகொண்டனர்.

அமகாரியாவும் ஜகரேவிஜும் சகோதரிகள். இராஹோவா, ஜகரேவிஜின் மகன்.

பல ஆண்டுகளாக இவர்கள் மூவரும் முற்றிலும் தனிமையில் வாழ்ந்து வந்தனர். ஆனால், மரம் வெட்டுபவர்கள், குடியேறியவர்கள், கால்நடைப் பண்ணை உரிமையாளர்கள் ஆகியோரின் ஊடுருவல் அதிகரித்ததால், அப்பகுதியில் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பழங்குடி சமூகத்திடம் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.

“காட்டில் இருந்தபோதே அவர்களுக்கு சுவாச நோய்கள், காய்ச்சல், காசநோய் ஆகியவை ஏற்பட்டன. வேட்டையாடுவதற்கான உடல் வலிமையையும் அவர்கள் இழந்துவிட்டனர்” என்கிறார், பழங்குடியினரின் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் சர்வைவல் பிரேசில் என்ற தன்னார்வ அமைப்பின் இயக்குநர் சாரா ஷென்கர்.

2015-ஆம் ஆண்டின் இறுதியில் அந்தச் சமூகத்தைச் சந்தித்தபோது நடந்தவற்றை நினைவுகூர்ந்த அவர், “அவர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், அவர்களுக்கு உணவளிப்பதற்காக வேட்டையாடவோ, உணவு உண்பதற்கு உதவவோ வேறு யாரும் இல்லை” என்கிறார்.

By admin