”வெளியிடங்களுக்கு செல்லும்போது, காரில் பயணம் செய்யும்போது பார்க்கும் பலர் ‘உங்களால்தான் நான் போலீசில் சேர்ந்தேன். உங்கள் படம் பார்த்துதான் ராணுவத்தில் இணைந்தேன். என் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் படங்கள் பார்த்து தேச பக்தியை நிறைய கற்றுக்கொண்டார்கள் என சொல்வார்கள். அதை கேட்கும்போது பெருமையாக இருக்கும், சந்தோஷமாக உணர்வேன்” என ஆகஸ்ட் 15ல் பிறந்தநாள் காணும் நடிகர் அர்ஜுன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கன்னட நடிகர் சக்திபிரசாத் மகனாக, கர்நாடகாவில் பிறந்தவர் அர்ஜுன். தன் மகன் சினிமாவுக்கு வருவதை அவர் அப்பா விரும்பவில்லை. சின்ன வயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது அர்ஜுனின் விருப்பமாகவும் இருந்தது.
ஆனால், 1973-ஆம் ஆண்டு வெளியான ‘என்டர் தி டிராகன்’ திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட அர்ஜுன், தனது 16 வயதில் கராத்தே பயிற்சியைத் தொடங்கினார். மெல்ல, மெல்ல அவருக்கு சினிமா ஆர்வம் வந்தது.
1981-ல் வெளியான ‘சிம்மதா மரி சைன்யா’ என்னும் கன்னட படத்தில் அறிமுகம் ஆனார். 1984-ல் ராமநாராயணன் இயக்கிய ‘நன்றி’ என்னும் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக தமிழில் தடம் பதித்தார். அதில் ஹீரோவாக நடித்தவர் கார்த்திக். அதில் அர்ஜுனுக்கு வாய் பேச முடியாத கேரக்டர்.
பட மூலாதாரம், Youtube/Rajshri Tamil
படக்குறிப்பு, அர்ஜுன் நடித்த ‘நன்றி’ திரைப்படம்
1980களில் தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் ‘யார்’ (1985), ‘சங்கர்குரு’ (1987), ‘தாய்மேல் ஆணை'(1988), ‘படிச்ச புள்ள’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆரம்ப காலத்தில் ராம.நாராயணன் படங்களில் அதிகம் நடித்தார். 1987இல் வெளியான ‘சங்கர் குரு’ திரைப்படம், தமிழிலும் தெலுங்கிலும் அர்ஜுனுக்கு ‘ஆக்ஷன் ஹீரோ’ என்ற அந்தஸ்தை பெற்றுகொடுத்தது. அந்த பாணியை அவர் பிடித்துக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் மெனக்கெட்டு நடிப்பார் எனும் பெயரைப் பெற்றார். பிற்காலத்தில் ‘ஆக்ஷன் கிங்’ ஆனார்.
தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசியுள்ள அர்ஜுன் ”என்னுடைய 22 வயதில் என் அப்பாவை இழந்தேன். அப்போது தமிழ் நாட்டில்தான் இருந்தேன். எனக்கு இங்கு ஒன்றும் புரியவில்லை. நடிப்பு கூட அப்போது எனக்கு சரியாக வரவில்லை. உடம்பு நன்றாக உள்ளது என்று சினிமாவில் வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்பா இறந்த பிறகு குடும்ப சுமை என் தோள்களில் வந்துவிட்டது. அதில் பாதி சுமையை எங்கள் அம்மா எடுத்துக்கொண்டார்” என கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Youtube/API Tamil Songs
படக்குறிப்பு, அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது
“அவருக்கு ஸ்வீட் பிடிக்கும். ஆனா….”
அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் படத்தின் இயக்குநர் சுபாஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில் ” நான் ரொம்ப ஜூனியர், அவர் சீனியர். எனக்கு பிளாஸ்ட் முதல் படம். ஆனால், அவரோ அது பற்றி யோசிக்காமல் தனது முதல் படம் மாதிரி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் பணியாற்றினார். அவரே ஒரு இயக்குநர். ஆனாலும், என்னை மதிப்பார். நான் சொல்வதை காது கொடுத்து கேட்பார். ‘உனக்கு என்ன வேண்டும். அதை சொல்லு, நான் செய்கிறேன்’ என படப்பிடிப்பில் அடிக்கடி சொல்வார்.
ஒரு சமயம் மறுநாள் அவருக்கு சண்டைக்காட்சி எடுக்க வேண்டியது இருந்தது. நான் அவருக்கு போன் செய்தபோது, மூச்சிரைத்தது. என்ன ஆனது என்று கேட்டேன். ‘சண்டைக்காட்சிக்காக தயார் ஆகிக்கொண்டு இருக்கிறேன். கடும் உடற்பயிற்சி’ என்றார். அவரை வைத்து சண்டைக்காட்சி எடுத்தால் படப்பிடிப்பு வேகமாக முடிந்துவிடும்.
இன்றைய இளம் நடிகர்கள், பைட்டர் செய்ய முடியாததை அவர் எளிதில் சண்டைக்காட்சியில் செய்வார். ‘நமக்கு பிடித்ததை நன்றாக சாப்பிடலாம். ஆனால் அதை கலோரியாக எரித்துவிட வேண்டும் . அதற்கேற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்பார். அவருக்கு ஸ்வீட் பிடிக்கும். அதை சாப்பிட்டால் அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வார். நம் உடல், ஆரோக்கியத்துக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பார்.
அவர் நடித்ததில் ஏழுமலை எனக்கு ரொம்ப பிடிக்கும். காமெடியில் மட்டுமல்ல, ஆக்ஷனிலும் கலக்கியிருப்பார். நான் உன்னிப்பாக கவனித்ததில் அவரிடம் நகைச்சுவை உணர்ச்சி அதிகம் உண்டு. அதை பேச்சில், எழுத்தில், சினிமாவில் கொண்டு வர முயற்சிப்பார். அதனால், அவர் படங்களில் காமெடி துாக்கலாக இருக்கும்.” என்கிறார்
பட மூலாதாரம், Youtube/Ayngaran Music
படக்குறிப்பு, அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி
வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வது என்ன?
அர்ஜுன் மருமகனும், நடிகருமான உமாபதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ”எனக்கு அவர் நடித்ததில் சேவகன், ஜெய்ஹிந்த், முதல்வன், ரிதம், பிளாஸ்ட் ஆகிய படங்கள் பிடிக்கும்” என்கிறார்
நடிகர் அர்ஜுன் படங்களில் இரண்டு காமெடியன்கள் அதிகம் நடித்து இருக்கிறார்கள். ஒருவர் கவுண்டமணி, இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இந்த கூட்டணி பல வெற்றிகளையும், மறக்க முடியாத காமெடிகளை கொடுத்து இருக்கிறது.
காமெடி குறித்து பேசியுள்ள நடிகர் அர்ஜுன், “காமெடி காட்சிகளை எழுதிவிட்டு, அதனை ஷூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் போது, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தேன். உடனே கேமரா முன் இருந்து வெளியே வந்து விட்டேன். சிரிப்பு அடங்கிய பிறகு தான் நடிக்கவே தொடங்கினேன். அவருடைய நடிப்பு நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்து விடும். பல படங்களில் இதை நான் அனுபவித்து இருக்கிறேன். அந்த சிரிப்பால் சில சமயங்களில் என்னால் கவுண்டமணியுடன் நடிக்கவே முடியாது” என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
”எனக்கு அர்ஜுன் நெருங்கிய நண்பர். ஆரம்ப காலத்தில் நான் ஒரு ஓட்டலில் ரெகுராக சாப்பிடப் போவேன். அங்கே அவர் வருவார். அப்போது பேசியது கூட கிடையாது. அடுத்து பி.எஸ்.வீரப்பா தயாரித்த படங்களில் நடித்தேன். அதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அவர் ரொம்ப நல்ல மனிதர். எனக்கு இப்போது 90 வயது. கொஞ்சம் ஞாபகம் குறைவாகிவிட்டது. ஆனாலும், அவருடன் நடித்த பரசுராம், மதராஸி, வேஷம், வாத்தியார் உள்ளிட்ட பல படங்கள், அந்த நாட்களை மறக்க முடியாது” என்றார்.
பட மூலாதாரம், Youtube/Pyramid Talkies
கவுண்டமணியை விட சம்பளம் குறைவு
நடிகர் அர்ஜுனின் மேலாளரும், அவரின் பல ஆண்டுகால நண்பருமான மதுரை செல்வம், ”1990களுக்கு முன்பு இருந்தே அர்ஜுன் சாருடன் பழகுகிறேன். அன்று முதல் இன்றுவரை சாப்பாடு, உடற்பயிற்சியில் அவ்வளவு கவனம் செலுத்துவார். தினமும் குறைந்த பட்சம் 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வார். படப்பிடிப்பு, மற்ற பணி இருந்தால் அது குறையும்.
1990களில் அவர் மார்க்கெட் டல் ஆனது. அப்போது அவர் தனது சொத்தை விற்று, தானே தயாரித்து, இயக்கி நடித்த படம் சேவகன். அந்த படம் வெற்றி அடைந்தது. அவருக்கு மீண்டும் சினிமாவில் உயரம் கிடைத்தது.
நானும் அவரும் சபரிமலையில் இருந்தபோதுதான் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுனை விட கவுண்டமணிக்குதான் சம்பளம் அதிகம். ஆனாலும், அவர் கதைக்காக நடித்தார்” என்கிறார்.
பட மூலாதாரம், Youtube/Leo Music Tamil
படக்குறிப்பு, சேவகன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி
அர்ஜுனுக்கு பிடித்த 10 படங்கள்
நடிகர் அர்ஜுனிடம் நீங்கள் நடித்ததில் பிடித்த 10 படங்களை பகிர முடியுமா என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். அவர் கொடுத்த பட்டியல்
தமிழில் ராம.நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் அறிமுகம் ஆன படம். 1984ல் வெளியான இந்த படத்தில் முருகன் என்ற வாய் பேச முடியாதவராக நடித்தார். அவருக்கு ஜோடி நளினி. வில்லன்களை பழிவாங்கும் கமர்ஷியல் கதை, சங்கர்கணேஷ் இசையமைத்து இருந்தார்.
ஒரு கட்டத்தில் அர்ஜுன் சினிமா வாழ்க்கையில் தொய்வு ஏற்பட, தன்னை நிலைநிறுத்த அவரே தயாரித்து, இயக்கி, நடித்த படம். மிகுந்த சிரமங்களுக்கு இடையே எடுத்த இந்த படம் பெரிய வெற்றி பெற்று, அர்ஜுனின் அடுத்த கட்ட சினிமா வாழ்க்கைக்கு வித்திட்டது.
வஸந்த் இயக்கத்தில் அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் நடித்த மாறுபட்ட கதை. கணவனை இழந்த பெண்ணும், மனைவியை இழந்த ஆணும் சந்தித்து, அவர்களின் கடந்த கால சோகங்களைப் புரிந்து கொண்டு காதலில் இணைவதை எதார்த்தமாகச் சொன்ன கதை.
4) ஜெய்ஹிந்த்
அர்ஜுன் இயக்கி நடித்த படம். ரஞ்சிதா ஹீரோயின். படத்தில் போலீஸ் கதைக்கரு, கவுண்டமணி நகைச்சுவை காட்சிகள், வித்யாசாகர் பாடல்கள் பிரபலமாகின.
5) ஜென்டில்மேன்
ஷங்கர் இயக்குனர் ஆன படம். முதலில் இந்த கதையில் நடிக்க பலர் பேசப்பட்டநிலையில், கடைசியில் அர்ஜுன் வந்தார். கல்வி, அரசியல் ஊழல், ஆக்ஷன், காமெடி , பாடல்கள் என கமர்ஷியல் பார்மூலாவில் ஹிட்டானது.
பட மூலாதாரம், X/AGS Entertainment
6) முதல்வன்
இன்றைக்கும் ‘ஒரு நாள் முதல்வன்’ என்றால் இந்த படம்தான் நினைவுக்கு வருகிறது. அர்ஜுன் நடித்த சிறந்த படங்களில் ஒன்று. மீண்டும் ஷங்கர், அர்ஜுன் கூட்டணியில் வந்த வெற்றி படம்.
7) வாத்தியார்
ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சமூக அக்கறை கதை. பள்ளிகளை நடத்துவதில் இருக்கும் அலட்சியங்களையும், சட்ட மீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்த கரு.
8) குருதிப்புனல்
பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து அர்ஜுன் நடித்த மாறுபட்ட போலீஸ் கதை. அப்பாஸ் என்ற போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் வருவார். தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க பல சோதனைகளையும் சித்ரவதைகளையும் சந்தித்து, இறுதியில் நாட்டிற்காக தன் உயிரைத் தியாகம் செய்யும் கேரக்டரில் வருவார்.
9) மங்காத்தா/ இரும்புத்திரை
அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு வில்லதனமான வேடம். பிருத்விராஜ் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் மிரட்டியிருப்பார். விஷால் நடித்த இரும்புதிரை படத்தில் சைபர் கிரைம் வில்லனாக வந்து அசத்தியிருப்பார். டிஜிட்டல் யுகத்தில் தகவல்களே செல்வம் என்று அவர் பேசும் கருத்து கவனிக்கப்பட்டது.
10) பிளாஸ்ட்
பெண்களும் தற்காப்பு கலை பயில வேண்டும். ஆபத்து என்றால் தைரியமாக இறங்கி அதிரடி காட்ட வேண்டும் என்ற கருவில் உருவான இந்த படத்தில் மனைவியாக நடித்த அபிராமி, மகளாக நடித்த ப்ரீத்தி முகுந்தனும் இணைந்து அர்ஜுனும் ஆக்ஷனில் கலக்கியிருப்பார். பெண்கள் வெகுவாக ரசித்தார்கள்.