14
அ சொல்ல முனைந்தேன்
நாவை அறுத்தீர்கள்
அ எழுத எத்தனித்தேன்
கைகளை முறித்தீர்கள்
விலங்கிட்டீர்கள்
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றேன்
கொட்டடிக்கு இழுத்து வந்தீர்கள்
இரவு பகலாய் அடித்தீர்கள்
சுவர்கள் சுண்ணாம்புக் காரையை உதிர்த்தன
தரையெல்லாம் ரத்த நசநசப்பு
இருளும் நடுநடுங்கி அலைகிறது
ஒளி எங்கோ ஒளிந்து கொண்டது
காலச்சக்கரம் நின்று போனது
தாய்மொழியை மறந்து விடு என்கிறீர்கள்
தாயின் கருவறையில் விளைந்ததை எங்ஙனம் மறப்பது ?
எனது இனத்தை அடிமை, காட்டுமிராண்டி என்கிறீர்கள்
மொழிகளில் மூத்தது என் மொழி
நாகரீகத்தை உலகிற்கு முதலில் அறிவித்தது என் இனம்
உண்மையை சகிக்க முடியாமல்
உன்மத்தம் கொண்டு வெறியாட்டம் ஆடுகிறீர்கள்
ஆயுதங்களால் எம் இனத்தை நிர்மூலமாக்க முயற்சிக்கிறீர்கள்
அடக்குமுறையால் எம் மொழியை அழிக்க முனைகிறீர்கள்
இதோ..நைந்த காலால் தரையில் எழுதி விட்டேன்
அம்மா … அம்மா… அம்மா…
என் தாய்மொழியில்.
வசந்ததீபன்