7
ஹொங்கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ அரினா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவு போட்டியில் இந்தியாவை 100 – 34 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இலங்கை அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற போதிலும் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் இலங்கை வீராங்கனைகள் தவறுகள் இழைத்ததை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக துலங்கி வன்னித்திலக்க, கொல் வாயிலில் 12 முயற்சிகளில் 7 கோல் வாய்ப்புகளைக் கோட்டை விட்டார். கடந்த போட்டிகளில் மத்திய களத்தல் எண்ணற்ற தவறுகளை இழந்து இம்முறை கோல் அட்டாக் வீராங்கனையாக விளையாடியபோதிலும் அவரால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

எனவே அவருக்கு மத்தியஸ்தர் சொமித்த டி அல்விஸும் அணி முகாமைத்துத்தினரும் சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இளம் வீராங்கனைகளான பாஷி உடகெதர 29 முயற்சிகளில் 28 கோல்களையும் ரஷ்மி பெரேரா 23 முயற்சிகளில் 28 கோல்களையும் போட்டனர். இவர்கள் இருவரும் கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் விளையாடினர்.
அணித் தலைவி திசலா அல்கம முதல் இரண்டு ஆட்டநேர பகுதிகளில் விளையாடி 50 முயற்சிகளில் 49 கோல்களைப் புகுத்தினார்.