0
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கல் தம்பதியினர் அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, அவர்கள் தங்குவதற்கு அரச குடும்பத்திற்குச் சொந்தமான தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஹாரி மற்றும் மேகன் ஆகியோருடன் அவர்களது குழந்தைகள் ஆர்ச்சி (7 வயது) மற்றும் லிலிபெட் (5 வயது) ஆகியோரும் வரவுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழு குடும்பமாக அவர்கள் இங்கிலாந்து வருவது இதுவே முதல் முறையாகும்.
அரச எஸ்டேட்டில் தங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஹாரி-மேகன் தம்பதியினர் அதற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கவில்லை. இதற்கு முந்தைய பயணங்களின் போது, பாதுகாப்புக் காரணங்களைக் கருதி பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதை இளவரசர் ஹாரி தவிர்த்திருந்தார். தற்போது எந்த அரச தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
பர்மிங்காமில் நடைபெறவுள்ள, காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus Games) ஓராண்டு நிறைவு விழாவைக் குறிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளவரசர் ஹாரி பங்கேற்கவுள்ளார்.
மன்னர் சார்லஸ் கடைசியாக 2022ஆம் ஆண்டு ராணி எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களின் போது தனது பேரக்குழந்தைகளை நேரில் சந்தித்தார். குடும்பத்தினரிடையே ஒரு “சமரசம்” ஏற்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஹாரி ஏற்கெனவே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு குறித்த தெளிவற்ற சூழல் நிலவுகிறது. பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பான முடிவுகளை உள்துறை அமைச்சகம் கவனிக்கும் என்றும் அறியப்படுகிறது.
மன்னர் சார்லஸ் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளைச் சந்திப்பாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்துவிட்டது. இது ஒரு “தனிப்பட்ட குடும்ப விஷயம்” என்று அரண்மனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.