பட மூலாதாரம், GM BABU
இந்தியா – வங்கதேச எல்லையில் இரு நாடுகளுக்கும் சொந்தமில்லாத பகுதியாகக் கருதப்படும் இடத்தில், திறந்தவெளியில் காய்ந்த புல்லின் மீது மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டு ஒரு பெண் வசித்து வருகிறார்.
எல்லையின் இருபுறங்களிலும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் அந்தப் பெண் இரு நாடுகளின் எல்லையில் ஜீரோ லைனில் சிக்கியுள்ளார். அவரைத் தங்கள் குடிமகளாக ஏற்றுக்கொள்ள வங்கதேசமும் இந்தியாவும் தயாராக இல்லை.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்குள் அனுப்ப முயன்றதாக வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த முயற்சியை உள்ளூர் மக்களும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தடுத்து நிறுத்தியதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் அவரை அனுப்பும் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து இரு நாடுகளின் எல்லைகளுக்கு இடையே உள்ள ஜீரோ லைனில் அந்தப் பெண் தவித்து வருகிறார். இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும் அவரை ஏற்றுக்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர்.
இந்தச் செய்தி எழுதப்பட்ட நேரம் வரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பதில் கிடைத்ததும் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.
அடையாளம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்
பட மூலாதாரம், SCREEN GRAB
இத்தகைய சூழலில், அந்தப் பெண் ஒவ்வொரு நாளும் திறந்தவெளியில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா அல்லது இந்தியாவைச் சேர்ந்தவரா என்பதில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அந்தப் பெண்ணைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இரு தரப்பினரும் மறுத்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் வங்கதேசத்தின் பதாரர் சார் எல்லைப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களிடம் பேசியபோது, சம்பவம் நடந்ததிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பிஸ்கட், ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை அந்தப் பெண்ணுக்கு வழங்கி வந்ததாகத் தெரிவித்தனர். ஆனால், வெள்ளிக்கிழமை அதுவும் சாத்தியப்படவில்லை.
அந்தப் பெண் வெயிலையும் குளிரையும் தாங்கிக்கொண்டு மனிதாபிமானமற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்.
இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முன்னிலையில் உள்ளூர் ஊடகங்களைச் சேர்ந்த சில செய்தியாளர்கள் அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளனர்.
அவர்களில் ஒருவரான ஜமால்பூரைச் சேர்ந்த ஜிஎம் ஃபத்தியுல் ஹஃபீஸ் பாபு, அந்தப் பெண்ணால் தனது சரியான முகவரியைக் கூற முடியவில்லை என்று பிபிசி வங்காள மொழி சேவையிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “தனது பெயர் ஃபுஜி பேகம் என்றும், தந்தையின் பெயர் ஹனிஃப் என்றும், தனது வயது சுமார் 30 என்றும் அந்தப் பெண் கூறினார். முதலில் வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டத்தில் தனது வீடு இருப்பதாகக் கூறினார். பின்னர் ஜாலகாத்தி என்றும், ஒருமுறை பாரிசால் என்றும் தெரிவித்தார்.” என்றார்.
அந்தப் பெண் கூறிய தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் பாபு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “அவரைப் பார்த்துப் பேசியபோது, அவரது நடவடிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. அவர் ஜீரோ லைனில் மனிதாபிமானமற்ற சூழலில் வசித்து வருகிறார். அந்தப் பக்கம் செல்ல முடியாதவாறு அவரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுக்கின்றனர். இங்கு வர வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுக்கின்றனர்.” என்றார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் பிபிசி வங்காள மொழி சேவை அந்தப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர் மக்களிடம் பேசியது.
சம்பவம் நடந்த முதல் சில நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஓரளவு உலர் உணவுப் பொருட்களை வழங்க முடிந்ததாகவும், ஆனால் வெள்ளிக்கிழமை அதுவும் தடைப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிபிசி வங்காள மொழி சேவையிடம் கூறுகையில், “அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காகப் பலர் எல்லைப் பகுதிக்கு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அவருக்கு அருகில் சென்று பார்க்க எங்களால் முடிந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை அவரைப் பார்க்கக்கூட முடியவில்லை. உணவும் வழங்க முடியவில்லை” என்றார்.
உள்ளூர் ஊடகவியலாளர் ஃபர்ஹாத் ரேஸா கூறுகையில், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் பேசி, கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணுக்கு உலர் உணவுப் பொருட்களையும் குடிநீர் பாட்டில்களையும் வழங்க உள்ளூர் மக்களால் முடிந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறினார்.
அவர் பிபிசி வங்காள மொழி சேவையிடம் கூறுகையில், “கடந்த சில நாட்களாகச் செய்தி சேகரிப்பதற்காக ஊடகக் குழுவினர் அருகில் சென்று காணொளிகளைப் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை முதல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அருகில் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை” என்றார்.
“அந்தப் பெண்ணால் தனது முகவரி குறித்து எந்த தெளிவான தகவலையும் வழங்க முடியவில்லை. சில முழுமையற்ற தகவல்களையே கூறுகிறார். அவரிடம் இயல்பாகப் பேசுவதற்குக்கூட சிரமமாக உள்ளது” என்று ஜமால்பூர் 35ஆவது வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் ஹசனுர் ரஹ்மான் பிபிசி வங்காள மொழி சேவையிடம் தெரிவித்தார்.
எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பட மூலாதாரம், Getty Images
ஜமால்பூர் மாவட்டத்தின் பதாரர் சார் எல்லைப் பகுதியில் ஜீரோ லைனில் இருக்கும் அந்தப் பெண் வங்கதேசக் குடிமகளா அல்லது இந்தியக் குடிமகளா என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.
இந்த விவகாரத்தில் எல்லையில் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கப்போவதாக லெப்டினன்ட் கர்னல் ஹசனுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரும் எல்லையில் உள்ளனர். அந்தப் பெண் முன்பு இருந்ததைப் போலவே ஜீரோ லைனில் அமர்ந்திருக்கிறார். இன்னும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.” என்றார்.
யாருக்கும் சொந்தமில்லாத பகுதியில் இருந்த அந்தப் பெண்ணை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் வலுக்கட்டாயமாக வங்கதேசத்தை நோக்கித் தள்ள முயன்றதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “அந்தப் பெண் வங்கதேசக் குடிமகள் என்று அவர்கள் (இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்) கூறுகின்றனர். ஆனால், இந்தியாவிலிருந்து அவர் இங்கு தள்ளப்பட்டதாக நாங்கள் கூறுகிறோம். அவர்கள் அவரை இங்கு தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அண்டை நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.
“வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் இடையே தொடர்ந்து தொடர்பு உள்ளது. எங்கள் அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
இருப்பினும், மனிதாபிமானமற்ற சூழலில் எல்லையின் ஜீரோ லைனில் வசித்து வரும் அந்தப் பெண் விவகாரத்தில், இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கொடி சந்திப்பு நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால், அந்தப் பெண்ணை எல்லைப் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவது குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
இதற்கு முன்பு, இந்த ஆண்டு ஜூன் மாதம் குரிகிராம் மாவட்டத்தின் ரௌமாரி எல்லைப் பகுதியில் வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், இரண்டு குழந்தைகள் உட்பட, 96 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
இதுதவிர, ஜமால்பூர் மாவட்டத்தின் கமல்பூர் எல்லைப் பகுதியைச் சேர்ந்த சஷ்டி சந்திர பர்மன் என்பவரும், அதே மாவட்டத்தின் ஜாவோடங்கா எல்லைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவங்களும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
இந்தியா – வங்கதேச உறவில் விரிசல்
பட மூலாதாரம், Screen Grab
2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்து எல்லைப் பகுதிகளில் நிகழும் பல்வேறு சம்பவங்களால் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பதற்றம் உருவாகி வருகிறது.
குறிப்பாக, எல்லை வழியாகச் சட்டவிரோதமாக ஊடுருவுவதாகக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் சம்பவங்கள் தொடர்பாக இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பலமுறை நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் வங்கதேசக் குடிமக்கள் என்று கூறி, சிலரை வலுக்கட்டாயமாக எல்லை தாண்டி வங்கதேசத்துக்குள் அனுப்புவதாக அண்டை நாடான இந்தியா மீது வங்கதேசம் பலமுறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை எப்போதும் மறுத்து வந்துள்ளது.
இந்த விவகாரம் வங்கதேச நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் அரசிடம் பலமுறை கேள்விகளை எழுப்பியுள்ளன.
சமீபத்தில் வங்கதேச நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்காக அரசு அளித்த உத்தரவுகளைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது அண்டை நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக மக்களை வங்கதேசத்துக்குள் அனுப்பும் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து 2,482 பேர் வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால், பிஎன்பி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த எண்ணிக்கை நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி 37ஆகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, வங்கதேசத்தின் முழு எல்லைப் பகுதியிலும் பெரிய அளவில் மக்களை வலுக்கட்டாயமாக உள்ளே அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை நாங்கள் மிகுந்த பொறுமையுடன் எதிர்கொண்டோம்,” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு