வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாட்டிற்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அவரது சொந்த ஊரான கோபால்கஞ்சில் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள், வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல் வாகனங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதிகாரிகள் மற்றும் ஊடக செய்திகளின்படி, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கத்திகள் மற்றும் ஈட்டிகளை ஏந்திக்கொண்டு வீதிகளில் இறங்கினர். அவர்கள் காவல்துறையின் கவச வாகனத்திற்கு தீ வைத்ததுடன், காவல் சோதனை சாவடி ஒன்றையும் அடித்து நொறுக்கினர்.
பதற்றமான சூழல்:
2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான எழுச்சியால் தனது அரசாங்கத்தை இழந்த பிறகு, இந்தியாவிற்கு தப்பி சென்ற ஷேக் ஹசீனா, அங்கிருந்து மீண்டும் வங்கதேசத்திற்கு திரும்புவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது தனது அரசாங்கம் நடத்திய ஒடுக்குமுறையின் போது இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து 2025 நவம்பரில் தீர்ப்பளித்தது. இந்த குற்றச்சாட்டுகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
79 வயதான ஷேக் ஹசீனா, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும், டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள போவதாக ஜூலை மாதத்தில் இருந்தே தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தியா கையில் உள்ளது:
வங்கதேச அரசாங்கம், இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை இந்தியாவிடம் இருந்து நாடு கடத்த கோரி வருகிறது. மேலும், ஹசீனாவின் சார்பாக லண்டனை சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்று, அவர் திரும்புவதற்கு வசதியாக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க கோரிய கோரிக்கையையும் வங்கதேச அரசு நிராகரித்துவிட்டது.
சட்ட அமைச்சர் முகமது அசாதுஸ்ஸமான் சனிக்கிழமையன்று கூறுகையில், ஹசீனாவை திரும்ப கொண்டுவருவதற்கான சட்ட நடைமுறைகளை வங்கதேசம் முடித்துவிட்டதாகவும், இனி இது குறித்த முடிவு இந்தியாவின் கையில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பான முன்னேற்றத்தை, பிரதமர் தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணத்துடன் வங்கதேசம் தொடர்புபடுத்தியுள்ளது. ஹசீனா மற்றும் டாக்கா தேடும் பிற நபர்களைத் திருப்பி அனுப்புவது, அந்தப் பயணத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்க உதவும் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இந்தியா, வங்கதேசத்திடமிருந்து நாடு கடத்துவதற்கான கோரிக்கைகளைப் பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளதே தவிர, இது குறித்து எந்த முடிவையும் இன்னும் அறிவிக்கவில்லை.