படக்குறிப்பு, இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்களிடையே பெரும் கோபம் நிலவுகிறது.கட்டுரை தகவல்
எழுதியவர், மோஹர் சிங் மீனா
பதவி, பிபிசி ஹிந்திக்காக
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினரின் தகவலின்படி, அந்தச் சிறுமி பல்வேறு இடங்களில் நான்கு நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீகங்காநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கர் பிபிசியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில், “இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாங்கள் 18 பேரைக் கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.
மேலும், தற்போது சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதற்குப் பிறகு மேலும் மூன்று முதல் நான்கு பேர் வரை கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
விசாரணை அதிகாரியான கூடுதல் துணை கண்காணிப்பாளர் கைலாஷ் டான் கூறுகையில், அந்தச் சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு நண்பர் இருந்துள்ளார்.
அவரைச் சந்திப்பதற்காக ஸ்ரீ கங்காநகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஜயநகருக்குச் சிறுமி சென்றுள்ளார். அங்கே, அவளது சமூக ஊடக நண்பர் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, அதன் பிறகு அந்தச் சிறுமி இரவில் விஜயநகரிலிருந்து பேருந்து மூலம் கங்காநகரை அடைந்து, அங்கிருந்து ஒரு ரிக்ஷாவில் ஏறியுள்ளார்.
சிறுமி வீட்டிற்கு திரும்பாததால், அவளது தாய் பல்வேறு இடங்களில் அவளைத் தேடி, உறவினர்களிடமும் விசாரித்துள்ளார். இருப்பினும், ஜூன் 22 ஆம் தேதி வரை சிறுமி வீட்டிற்குத் திரும்பாததால், தாய் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
காவல் நிலையப் பொறுப்பாளர் சுபாஷ் சந்திரா பிபிசியிடம் கூறுகையில், “சிறுமியின் தாய் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, அந்தச் சிறுமிக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் சிறுமியைச் சென்றடைந்து, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தோம்” என்றார்.
“இந்த வழக்கு மகளிர் காவல் நிலையத்துடன் தொடர்புடையது என்பதால், மகளிர் காவல் நிலையப் பொறுப்பாளரும், குழந்தை நலக் குழு உறுப்பினர்களும் வந்திருந்தனர். நாங்கள் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தோம்.”
மகளிர் காவல் நிலைய பொறுப்பாளர் கலாவதி சௌத்ரி பிபிசியிடம், “சிறுமியின் புகாரின் பேரில், போக்சோ, கட்டாயப் பாலியல் தொழில் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்” என்றார்.
மேலும், 20 முதல் 25 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், Mohar Singh
படக்குறிப்பு, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹோட்டல், புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
18 பேர் கைது
விசாரணை அதிகாரியான கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி மூலம் பிபிசியிடம், ”இந்தச் சம்பவங்கள் ஜூன் 18 ஆம் தேதி இரவுக்கும் ஜூன் 22 ஆம் தேதி பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்தச் சிறுமிக்கு நடந்துள்ளன” என்றார்.
”அந்தச் சிறுமி தனது நண்பரைச் சந்தித்துவிட்டு இரவில் ஸ்ரீ கங்காநகர் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் ஒரு ரிக்ஷாவில் பயணம் செய்தார். ரிக்ஷா ஓட்டுநர் அவரை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகுதான் இந்தச் சம்பவம் முழுவதும் நடந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
”அன்று இரவு அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியுடன் அந்த ஹோட்டலிலேயே தங்கியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்ட ஹோட்டலில்தான் அவர் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
”அச்சிறுமி மேலும் இரண்டு ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் அவருக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.”
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் மேலும் குறைந்தது நான்கு பேராவது கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள்.
காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை தங்களின் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், தற்போது அவர்கள் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் அந்த மூன்று ஹோட்டல்களின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்துள்ளது.
பட மூலாதாரம், Mohar Singh
கோபமான உள்ளூர்வாசிகள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுமாறு அப்பெண்ணிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
தற்போது சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நடந்ததில் இருந்து, ஸ்ரீ கங்காநகர் பகுதி மக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருவதுடன், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல மருத்துவரான மருத்துவர் கணேஷ் மீனா, சிறார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போதோ, குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் பெரிய விபத்து நடக்கும்போதோ, அவர்கள் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு நிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறார்.
மருத்துவர் மீனாவின் கூற்றுப்படி, இந்த பாதிப்பானது ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. அவர்கள் மற்றவர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாகவும், அமைதியானவர்களாகவும் மாறுகிறார்கள். பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்கள் மற்றும் வெளியாட்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
”அந்தச் சம்பவத்தை தொடர்ந்து நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்கள் மிகுந்த பயத்திற்குள்ளாகிறார்கள். இந்தச் சூழ்நிலை ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கலாம்.”
குழந்தைகள் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான தீர்வை அவர் பரிந்துரைக்கிறார். இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்று அவர் கூறுகிறார்.