7
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (02) இரவு நடைபெற்ற இந்தோனேசியாவுக்கு எதிரான மகளிர் ரி20 ஆசிய கிண்ண பி குழு போட்டியில் இலங்கை 75 ஓட்டங்களால் வெற்றிபெற்று தனது அரை இறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.
இப் போட்டியில் நிலக்ஷிகா சில்வா குவித்த அரைச் சதம், அணித் தலைவி சமரி அத்தபத்து பதிவு செய்த முதலாவது ஹெட்-ட்ரிக் அடங்கலான 7 விக்கெட் குவியல் என்பன இலங்கையை மிக இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக ஹெட் – ட்ரிக்கை பதிவு செய்த முதலாவது வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை சமரி அத்தபத்து நிலைநாட்டினார்.
இந்தப் போட்டியில் 3.3 ஓவர்கள் பந்துவீசிய சமரி அத்தபத்து 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவின் பந்துவீச்சுப் பெறுதி ஐந்தாவது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.
மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஹெட் – ட்ரிக் பதிவு செய்தவர்கள் பட்டியலில் ஏற்கனவே இரண்டு இலங்கையர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்ஸி மகளிர் அணிக்கு எதிராக 2025இல் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சுவீடன் மகளிர் அணி சார்பாக கயா ஜயவீரவும், தன்ஸானியா மகளிர் அணிக்கு எதிராக அதே வருடம் கனடா மகளிர் அணி சார்பாக அச்சனி பெரேராவும் ஹெட்-ட்ரிக் முறையில் விக்கெட்களைப் பதிவுசெய்திருந்தனர்.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
13ஆவது ஓவரில் இலங்கை 6 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று திணறிக்கொண்டிருந்தது.
ஆனால், நிகலக்ஷிகா சில்வா (50), காவியா காவிந்தி (15 ஆ.இ.) ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
முன்வரிசையில் சஞ்சனா காவிந்தி 15 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தோனேசியா 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
நி மாதே புத்ரி சுவந்தேவி 12 ஓட்டங்களையும் ரஹ்மாவதி பங்கேஸ்துதி 10 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.
ஆட்டநாயகி: சமரி அத்தபத்து

