• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

இளவரசர் ஹரி உள்ளிட்ட 7 பேருக்கு அதிர்ச்சி தீர்ப்பு: தனியுரிமை வழக்கில் தோல்வி – ரூ.34.5 மில்லியன் செலவு சுமை!

Byadmin

Aug 21, 2026


இளவரசர் ஹரி உள்ளிட்ட 7 பிரபலங்கள் தங்களின் தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெய்லி மெயில் (Daily Mail) நாளிதழின் பதிப்பாளரான ‘அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்’ (Associated Newspapers Limited – ANL) நிறுவனத்துக்கு 34.5 மில்லியன் பவுண்டுகள் வரை வழக்குச் செலவுகளை வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் நிக்லின் (Justice Nicklin), இந்தத் தோல்வியடைந்த தனியுரிமை வழக்கில் வழக்கத்துக்கு மாறான மற்றும் விதிவிலக்கான ஒரு செலவு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இளவரசர் ஹரி, உலகப் புகழ்பெற்ற பாடகர் சர் எல்டன் ஜான், அவரது கணவர் டேவிட் ஃபர்னிஷ், இங்கிலாந்து நாடாளுமன்ற முன்னாள் துணைத் தலைவர் சர் சைமன் ஹியூஸ், இன நீதிப் பிரச்சாரகர் பரோனஸ் லாரன்ஸ் மற்றும் நடிகைகள் சாடி ஃப்ரோஸ்ட், லிஸ் ஹர்லி ஆகிய 07 நபர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

சட்டவிரோதமான முறையில் தகவல்களைச் சேகரித்ததாக ANL நிறுவனத்துக்கு எதிராக இவர்கள் தொடர்ந்த வழக்கை, கடந்த ஜூலை 7 அன்று நீதிபதி ஜஸ்டிஸ் நிக்லின் தள்ளுபடி செய்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ANL நிறுவனம் முற்றிலுமாக மறுத்திருந்தது.

இந்த 07 முறைப்பாடுகளும் முதற்கட்டமாக 9.54 மில்லியன் பவுண்டுகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (அடுத்த வாரம்) ANL நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இவர்களுக்கு ஓக்டோபர் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் வழக்கில் தோல்வியடைந்தால் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் வழக்குச் செலவுகளை ஈடுகட்ட 16.2 மில்லியன் பவுண்டுகள் வரையிலான காப்பீட்டைப் பெற்றிருந்தனர். ஆனால், தற்போது நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவின்படி, இந்த நாளிதழ் குழுமம் தான் தரப்பில் செலவிட்டதாகக் கூறும் முழுமையான 34.5 மில்லியன் பவுண்டுகள் வரையிலான தொகையையும் மீட்க முயலலாம். இதனால் காப்பீட்டுத் தொகையையும் தாண்டி, இளவரசர் ஹரி மற்றும் பிறருக்கு கூடுதல் சுமையாக சுமார் 18 மில்லியன் பவுண்டுகள் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

34 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வழக்குச் செலவுத் தொகை என்பது ஆரம்பக் கண்ணோட்டத்தில் மிக அதிகப்படியானது என்றாலும், இதில் குறிப்பிட்ட வரம்பு எதையும் விதிக்கப் போவதில்லை என்று நீதிபதி கூறினார். அவ்வாறு வரம்பு விதிப்பது தன்னிச்சையாகவும், அநீதியாகவும் அமையக்கூடும் என்று அவர் விளக்கினார்.

வழக்கை நடத்திய முறைப்பாட்டாளர்களின் அணுகுமுறை “மிகவும் நியாயமற்ற முறையில்” இருந்தது என்று நீதிபதி சாடினார். தங்களின் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், குற்றம் சுமத்தப்பட்ட நிரூபர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த 07 பேரும் முன்வந்து திரும்பப் பெறாதது ஒரு முறையான சட்ட அணுகுமுறை அல்ல என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பானது, ஒரு செய்தி நிறுவனத்தையும் அதன் செய்தியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் நற்பெயரையும் சட்டத்தின் மூலம் அழிக்க முயன்ற முயற்சிக்குக் கிடைத்த கடுமையான சாட்டையடி என்று ANL நிறுவனம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் நீதிமன்றத்துக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் நாடியே வந்தோம். ஆனால், எங்களுக்கு அது கிடைக்கவில்லை. இது முழுக்க முழுக்க உண்மைகளை மூடி மறைக்கும் செயல்” என்று இளவரசர் ஹரி மற்றும் பரோனஸ் லாரன்ஸ் கூட்டறிக்கையில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு, இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சில நாட்களிலேயே வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin