5
ஈழத்தமிழர்; தம் நீண்ட நெடிய போரியல் வரலாற்றில்; ஒரு பகுதியாக, சுய பொருளாதார அணுகலைப் பேணி வந்திருந்தார்கள்.
வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்லாது, தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் வகையில், அவை திட்டமிடப்பட்டிருந்தன.
பொருளாதார முயற்சிகள்; பலவழிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. விவசாயப் பண்ணைகள், மீன்பிடி மற்றும் கைத்தொழில்கள் உள்ளிட்ட; வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளாக அவை இருந்ததோடு, அவற்றின் மூலம் தங்கள் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும் இருந்தன.*
பாரியளவிலான பரந்த தெங்கு உற்பத்தியானது ஈழத்தின் பிரதான பணப்பயிராக இருந்தது. அதில், அவர்கள் தன்னிறைவும் பெற்று; ஏற்றுமதி செய்யுமளவுக்கும் முன்னேறி இருந்தனர்.*
எனினும், அந்நிலை விடுதலைப்புலிகளிற்கு பின்னர் இல்லாது போய்விட்டது என்பது உண்மையாகும்.
தேங்காய் உற்பத்தி
*******
தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற சமூகமாக தாயக வாழ் ஈழத்தமிழர்கள் வாழ்ந்திருந்தனர்.
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் காணப்பட்ட தென்னம் தோட்டங்களை, உரிய முறையில் பராமரிப்புக்குட்படுத்திய பெருந்தோட்டப்பகுதி என்னும் நிர்வாக அலகு இதனை சாத்தியமாக்கி இருந்தது.
கைவிடப்பட்ட தென்னம் கோப்புக்களை மீளவும் பராமரிப்புக்கு கொண்டு வந்த அந்த நிர்வாக அலகு; அதுவரையும் ஒருமுகப்படுத்தப்படாது இருந்த தேங்காய் உற்பத்தியை ஒருமுகப்படுத்தியதால், தேங்காயின் விலையை தளம்பலில்லாது பேணியிருந்து.
சீரான பராமரிப்பில் உள்ள தென்னம் தோப்புக்களை மென்மேலும் பயன்பாடுமிக்கதாக மாற்றியமைப்பதில் பொருண்மிய மேம்பாட்டு செயலகம் உதவியிருக்கிறது.
தேங்காய் உற்பத்தியின் அதிகரிப்பு அவர்கள் மீதிருந்த பொருளாதார தடையின் தாக்கத்தை இழிவளவாக்குவதில் பாரிய பங்கு வகித்தது.
தேங்காய் உற்பத்தியில் தாயக ஈழத்தமிழர் விடுதலைப்புலிகளின் காலத்தில் நேர்த்தியும் முயற்சியும் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தேங்காய் விற்பனையில் கட்டுப்பாடு
*************
போர்க்காலத்தின் ஒரு கட்டத்தில், இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் (இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி) தேங்காய்களை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இன்றைய இலங்கையின் பொருளாதார நிலைமையே போர்க்காலத்திலும் இருந்தது. சாதாரண பொதுமக்களின் வாழ்வை அவை பெரிதும் பாதிப்பதாகவே இருந்தது.
ஒரு இறாத்தல் பாணின் விலையை குறைப்பதாக; ஒரு தேர்தல் வாக்குறுதியை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் முன்வைத்து பரப்புரை செய்து; தேர்தல் வெற்றி பெற முடிந்த நிகழ்வை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும். அதாவது பாணின் விலை ஏறுமுகமாக இருந்ததை இந்நிகழ்வின் மூலம் எடுத்துரைத்து உணரவைக்க முடியும்.
பாணின் விலை ஏறுமுகமாக இருந்ததெனின் அக்காலத்தில் கோதுமை மாவின் விலையதிகரிப்போடு வெதுப்பக உணவுகளின் விலையும் உயர்ந்திருக்கும் என்பது நடைமுறை.
அன்று தொட்டு இன்று வரை, பாணின் விலை ஏறுமுகமாகவே இருப்பதை; மக்கள் நன்றே உணர்வார்கள் என்பது வெள்ளிடைமலை.
இத்தகைய விலையேற்றம், எல்லா பொருட்களிலும் அவதானிக்கப்பட்டது. உள்ளூர் தேங்காயின் விலையும் உயர்ந்தது. ஆனாலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தேங்காய் விலையில், அதிகரிக்கும் போக்கு இருக்கவில்லை.
வியாபாரிகள் இந்த சூழலை தமக்கு அதிகம் இலாபம் ஈட்டும் ஒரு வழிமுறையாக பயன்படுத்த எண்ணிய போது, தன்னிறைவு உற்பத்தி பொருளாதார நோக்கை கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகு; வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து, தேங்காய் கொண்டு செல்லவதை தடை செய்தது. இதனால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வியாபாரிகளால் தேங்காய்களை எடுத்துச்செல்ல முடியவில்லை.
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழும் மக்கள்; விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து, தேவைகள் நிமித்தம் பயணம் செய்யும் உறவினர்கள் மூலம், வன்னியில் இருந்து தேங்காய்களை எடுத்துவர முயன்றனர்.
அவர்களுக்கும் கொண்டு செல்லும் தேங்காய்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி அனுமதித்தது விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகு. இந்த அணுகுமுறையால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தேங்காயின் விலை சீரான மட்டத்தில், சிறிய ஏற்ற இறக்கங்களோடு பேணப்பட்டது. இந்த விலைத்தளம்பல் இல்லாத நிலை, சாதாரண பொதுமக்களின் அன்றாட உழைப்பின் பெரும் பகுதியை; தேங்காய் நுகர்வுக்காக வீணடிப்பதை தவிர்த்து.
தமிழர்களின் இயல்பான சுதந்திரமான வாழ்வில் கூடிய அக்கறை கொண்டவர்களாக தங்கள் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர் என்பதற்கு, இதுவும் ஒரு நற்சான்று ஆகும்.
தேங்காய் ஏற்றுமதிக்காலங்கள்
************
தேங்காய் உற்பத்தியில், ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேங்கு பயிர்ச்செய்கையின் விளைவும், அப்பயிர்ச்செய்கைக்கு; வன்னி பெருநிலப்பரப்பும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏனைய இடங்களில் வாழ்ந்து வந்த பொதுமக்களும் காட்டிய ஒத்துழைப்பும், ஆர்வத்துடன் கூடிய முயற்சியும் தேங்காய் ஏற்றுமதிக்கு வித்திட்டது.
தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையினை போணும் போது, தமக்குத் தேவையான அளவினை உற்பத்தி செய்த பின்னர்; அதற்கு மேலதிகமாக உற்பத்தியாகும் உற்பத்திகளையே ஏற்றுமதி செய்ய முடியும். அதாவது பிறருக்கு வழங்க முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தன்னிறைவுப் பொருளாதார கொள்கையினையே பேணியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து, பெருமளவு தேங்காய்களை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வியாபார நோக்கில் எடுத்துச்செல்ல அனுமதிகள் வழங்கப்பட்டன. இந்த அனுமதிகள் தேங்காய் மிகை உற்பத்திக்காலங்களிலேயே வழங்கப்பட்டிருந்தன; என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது அன்றைய நிர்வாக ஒழுங்கில் ஏற்றுமதிக்கு அனுமதிகள் கிடைத்தன.
தங்களது நுகர்வுக்கு தேவையான அளவு மற்றும் பொதுமக்கள் நுகர்வுக்கு தேவையான அளவு தேங்காய்களின் இருப்பை தக்க வைத்துக்கொண்டு தான், ஏற்றுமதிக்கு அனுமதித்தனர். ஏற்றுமதி நிலவிய காலங்களிலும் தேங்காயின் விலை சாதாரண பொதுமக்களின் நுகர்வுக்கு ஏற்றதாக இருந்திருந்தது.
ஆனாலும், இன்றைய இலங்கையின் பொருளாதார சூழல் என்பது, ஏற்றுமதி அதிகமாகும் பொருட்களின் உள்ளூர் நுகர்வுக்கான விலையில்; அதிகரிப்பை கொண்டிருக்கின்றன என்பதை அவதானிக்கலாம்.
ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்படும் வருமானம் நாட்டின் அல்லது நிர்வாக கட்டமைப்பின் தேறிய வருவாயை அதிகரிப்பதோடு; சொத்திருப்பையும் அது அதிகரிக்கும்.
இவ்வாறானதொரு சூழலில், பொதுமக்களுக்கு சிரமமில்லாத வாழ்க்கை முறையினை அது பாதிக்காதும் இருக்க வேண்டும். இந்த வகையில் விடுதலைப்புலிகளின் முன்னகர்வானது பாரட்டுதலுக்குரியது. அத்தகைய கொள்கை வளமாக்கலை அவர்கள் அப்போது பின்பற்றி இருந்தனர் என்பதையும் அக்கால தகவல் பகுப்பாய்வுகள் மூலம் தெள்ளத்தெளிவாக அறியலாம்.
தெங்கு பயிர்ச்செய்கையில் பாதிப்பு
*************
இன்றைய தேங்காய் விலையின் அதிகரிப்பானது, நாட்டின் பொருளாதார நிலைகளோடு இசைந்து ஏற்பட்டு வந்த போதும்; தெங்கு பயிர்ச்செய்கையில் தாயக ஈழத்தமிழர்கள்; அக்கறை காட்டுமளவு, குறைந்து வருகிறது என்பதும் உண்மை.
எவ்வாறான பொருளாதார சூழல் நிலவினாலும், குறித்த பொருளொன்றின் மிகை உற்பத்தியானது, அதன் விலையினை கணிசமான அளவிற்கு குறைக்கும் என்பது நடைமுறை பொருளாதார அவதானிப்பாகும்.
ஆயினும், அக்குறித்த பொருளின் உற்பத்திச்செலவு அதிகரிக்கும் போது, சந்தைப்படுத்தலில் அப்பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால்; உற்பத்தியாளர்கள் பாரியளவிலான நட்டத்தினை அடைவார்கள் என்பதும் உண்மை.
இவ்வாறான ஒரு நிலைமையே இப்போது, தாயக வாழ் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையாக இருப்பதையும் இங்கே குறிப்பிடலாம். குறிப்பாக நெல் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளின் விளைச்சலை, சந்தைப்படுத்தும் போது இந்நிலையை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்வதனையும் அவதானிக்கவாம்.
தெங்கு பயிர்ச்செய்கையில், இலங்கை அரசாங்கத்தின் தெங்கு பயிர்ச்செய்கை பிரிவின் முயற்சிகள்; கணிசமான அளவுக்கு இருந்த போதும், அதனால் ஏற்படும் வளர்ச்சி வீதம் மந்தமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
சனத்தொகை அதிகரிப்போடு விடுவிக்கப்படாத நிலங்கள் மற்றும் கைவிடப்படும் விவசாய நிலங்கள் என்று ஒருபக்கம் தென்னை வளர்க்க வேண்டிய நிலங்கள் வீணடிக்கப்படுகிறது.*
மற்றொரு பக்கம்; உச்ச பயன்பாடுமிக்க பயிர்ச்செய்கை முறை பின்பற்றப்படுவதில்லை. தென்னை பராமரிப்பு முறையில் உள்ள பற்றாக்குறை மற்றும் தென்னைமரங்களை தாக்கும் நோய்கள், யானை போன்ற விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் விளைச்சல் பாதிப்பு என்பனவும் தெங்கு பயிர்ச் செய்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவையெல்லாம் தெங்கு பயிர்ச்செய்கையை பாரியளவில் பாதிக்கச் செய்கின்ற காரணிகளாக அமைந்துள்ளன.
வெள்ளை ஈ தாக்கம்
*******
அண்மைக்காலத்தில், பலவருடங்களாக தென்னை மரங்களைத் தாக்கி, விளைச்சலை அதிகளவில் பாதிக்கும் ஒரு நோய்த்தாக்கமாக, வெள்ளை ஈ தாக்கம் அமைந்துள்ளது. ஆயினும், இதுவரை அந்நோயின் தாகத்தில் இருந்து, தென்னைகளை மீட்டெடுக்க முடியவில்லை. இந்நோயின் தாக்கத்தினால் மாலதி வர்க்க தென்னை இனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. பல இடங்களில், இந்நோயின் தீவிரத்தினால், தென்னைகள் பட்டுப்போயிருந்ததை அவதானிக்க முடியும்.
நன்கு உயரமாக வளர்ந்த தென்னைகள் மட்டுமில்லாது; இளம் தென்னம் பிள்ளைகளையும்; இந்த, வெள்ளை ஈ நோய் பாதித்துள்ளமையானது; புதிய தென்னந்தோப்புக்களை உற்பத்தி செய்வதில் சவால் மிக்கதொரு சூழல் உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளை ஈ தாக்கத்தின் போது, தென்னம் ஓலைகளில், வெண் சாம்பல் படலம் தோன்றுகின்றது. அந்த வெண் சாம்பல் பகுதிகளில் வெள்ளை ஈ பூச்சிகள் இருப்பதை அவதானிக்கலாம்.
வெள்ளை ஈ பூச்சிகள் இருக்கும் ஓலைகள்; எண்ணெய் தன்மையான ஒருவகை பதார்த்தத்தினால் பாதிக்கப்பட்டு; நாளடைவில், அவ்வோலைகள் கருமைநிறமாக மாறி; உக்கலடைந்து போகின்றன. இந்நிலைமை தென்னையின் விளைச்சலை பாதிப்பதோடு, தென்னை ஓலையினால் கிடைக்கும் பயன்களான கிடுகு மற்றும் தென்னம் ஈர்க்கு உற்பத்தியையும் பாதிக்கின்றன.
விவசாயத் திணைக்களம் மற்றும் தெங்கு உற்பத்தி சபை என எல்லோராலும், இந்த வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நடைமுறை அவதானிப்பாகும்.
நோய்ததடுப்பு என்பது, அந்நோயின் தாக்கத்தினால் ஏற்படும் விளைச்சல் பாதிப்பை இழிவளவாக்குவதே ஆகும். சில நேரங்களில், அந்நோயின் பாதிப்பில் இருந்து முற்றாக பயிர்களை மீட்டெடுத்து, இயல்பான விளைச்சலை நோக்கி நகர்த்துவதும் உண்டு.
தேங்காய் தோல் சுருக்க நோய்
************
தென்னைகளை; வெள்ளை ஈ தாக்கும் முன்னர், தேங்காய்த் தோல் சுருக்க நோய் பாதித்திருந்திருந்தது. இது ஒருவகை ஒட்டுண்ணியால் ஏற்பட்ட போதும், அதனையும் கட்டுப்படுத்துவதில் தோல்வியே ஏற்பட்டிருந்தது.*
நீண்ட கால சுயநோய் எதிர்ப்பாற்றல் மூலம், தென்னைகள் அவ்ஒட்டுண்ணித் தாக்கத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டுள்ளன.
ஆனாலும், இன்றும் அந்நோயின் தாக்கத்தினை தேங்காய்களில் அவதானிக்கலாம்.
இந்நோய், தேங்காயின் மேற்பகுதித் தோலினை சுருங்கச் செய்யும். அதனால் தேங்காயின் பருமன் அதிகரிப்பது தடைப்பட்டு, தேங்காய் விளைச்சல் குறைந்து சென்றிருந்தது. சிறிய தேங்காய்கள் தோன்றுவதால் தேங்காயினை சந்தைப்படுத்தலிலும் இடர்பாடுகள் தோன்றியிருந்தது.
அது மட்டுமல்லாது, தேங்காய் மட்டையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் தும்பு உற்பத்தியும் பாதிப்படைந்து.
இதன் மூலம், தேங்காய்த் தும்பினை மூலப்பொருளாக கொண்டுள்ள; கைத்தொழில் முயற்சிகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தன.
ஏனைய பயிர்த்தாக்கம்
*********
தென்னையை இலக்காக்கி, பெருகிய வெள்ளை ஈ தாக்கம்; ஏனைய பயிர்களையும் அதிகளவில் தாக்கி வருகின்றது. குறிப்பாக வாழை உற்பத்தியாளர்களை இது அதிகளவில் பாதித்துள்ளது.
வாழை இலையின் கீழ் புறத்தில் ஒட்டி வாழும் வெள்ளை ஈ பூச்சிகள்; இலையின் மேற்பரப்பில் எண்ணெய் தன்மையான பதார்த்தத்தைப் பரவ செய்து, இலையின் மீது அந்த எண்ணெய் கருமைநிறப் படையை தோற்றுவிக்க காரணமாகின்றது.
இது வாழை உற்பத்தியில் விளைச்சல் அளவை கணிசமாகக் குறைந்து விடுகிறது.
விடுதலைப்புலிகளின் காலத்தில்
*************
ஆனாலும், இவ்வாறு தென்னையை தாக்கும் நோய்களின் ஆதிக்கம்; விடுதலைப்புலிகள் காலத்தில் இல்லை; அல்லது மிகக்குறைவு. விளைச்சலைப் பாதிக்குமளவுக்கு இல்லை என இது தொடர்பாக கலந்துரையாடும் போது, பல தெங்கு உற்பத்தியாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் கூற்றை ஆய்வுக்குட்படுத்தி; உண்மை நிலையை ஆராய வேண்டும். அவர்கள் கூற்று சரியாகின் ஈழத்தமிழர் பொருளாதார சிதைப்பின் ஒரு வடிவமாக தாயக வாழ் ஈழத்தமிழர்களின் தெங்கு உற்பத்தியின் மீது ஒரு மறைமுக போர் நடைபெறுவதாக சந்தேகிக்கத் தோன்றும்.
இது மணலாற்றுப்பகுதியில், தமிழர் நிலங்களில், பரவலடையச் செய்யப்பட்ட புல்லினம் மற்றும் வடக்கில் பரவிய பார்த்தீனியம் போன்றவற்றோடு, போருக்கு பின்னரான காலத்தில், வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில்; குளங்களில் பரவிய ஆக்கிரமிப்பு நீர்களையான ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர்க் களைகளைக் குறிப்பிடலாம்.
சந்தேகிக்கும் படியான கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டால்; இப்படியொரு ஐயம் ஏற்படுவதனைத் தவிர்க்க இயலாது.
ஆனாலும் நோர்கொணட நோக்கில், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தென்னை பயிரிடப்படுவதால், உண்மையை உய்த்தறிவதில் சரியான தரவுப்பாகுப்பாய்வு ஒப்பிடுகள் அவசியம் வேண்டும்.
அத்தோடு தாயக வாழ் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தில் தெங்கு தவிர்த்த ஏனைய பயிர்களை பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். உதாரணமாக வத்தகை, மா, பப்பாளி போன்ற பழச்செய்கையை குறிப்பிடலாம்.
நிலைபெறு தெங்கு உற்பத்தி
***********
தாயகத் தமிழர்கள்; தெங்கு உற்பத்தியில் வெற்றி பெற வேண்டும் என்றால், தென்னையின் வளர்ச்சி மற்றும் வாழ்தகவு என்பவை தொடர்பில், தாயக வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
நிலைபேறான நிரந்தர வருமானத்தை மாதாந்த அடிப்படையில் பெற்றுத்தரக்கூடிய பாரம்பரிய பயிரை இழக்கும் அவல நிலையானது; எதிர்காலத்தில் பொருளாதார பலம் குன்றிய சமூகமாக மாறவும் தமிழர்களின் நிலங்கள் தரிசாகிப் போகவும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி விடும் என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
தாயக வாழ் ஈழத்தமிழர்களின் தேவையை உணர்ந்து; அந்த தேவையினை உடனுக்குடன் சீர்செய்து கொள்ள உதவும் வகையில், ஒரு ஒழுங்கமைப்பை மேற்கொண்டு, பயனடையச் செய்ய வேண்டும்.
புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் அறிவாற்றலை ஒருங்கிணைத்து; தாயக வாழ் ஈழத்தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சிகளை ஒன்றிணைத்து பலமான பொருளாதார நிலையை பெற்றுக்கொள்ளச் செய்யும் நோக்கில் புது வழிகளை ஆராய வேண்டும். அதன் மூலம் தெங்கு பயிர் செய்கையில் ஏற்படும் வீழ்ச்சியை குறைத்து வளர்ச்சி நோக்கிய திசையில் நகர முடியும்.
நதுதசி