• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மற்றொரு சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

Byadmin

May 29, 2026


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஒரு ஐ.பி.எல். சீசனில் பவர்பிளே ஓவர்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் சூர்யவன்ஷி தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறார்.

முல்லன்பூரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 2 போட்டியில் சூர்யவன்ஷி இந்த பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி, வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடினார்.

2016-இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 467 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர் , டிராவிஸ் ஹெட் (2024-இல் 402 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (2025-இல் 402 ரன்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

ஒரு ஐ.பி.எல். தொடரில் 1 முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள்

2026 இல் வைபவ் சூர்யவன்ஷி 521 ரன்கள் (ஸ்டிரைக் ரேட்: 233.63)

2016-இல் டேவிட் வார்னர் 467 ரன்கள் (ஸ்டிரைக் ரேட்: 150.16)

2024-இல் டிராவிஸ் ஹெட் 402 ரன்கள் (ஸ்டிரைக் ரேட்: 208.29)

2025-இல் சாய் சுதர்சன் 402 ரன்கள் (ஸ்டிரைக் ரேட்: 155.81)

2009-இல் ஆடம் கில்கிறிஸ்ட் 382 ரன்கள் (ஸ்டிரைக் ரேட்: 165.36)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தார்.

துவக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கத்திற்கு மாறாக ரன்குவிப்பில் வேகத்தை குறைத்த போதிலும், ஆட்டத்தின் கடைசி ஓவர்கள் வரை நிலைத்து நின்று 47 பந்துகளில் 96 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சூர்யவன்ஷி தவிர்த்து ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்களும், ஃபெரரியா 11 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர்.

By admin