• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷி: 15 வயது சிறுவனின் சிக்ஸர் மழை ரகசியம் என்ன?

Byadmin

May 29, 2026


IPL, SuryaVanshi, Rajasthan, Cricket

பட மூலாதாரம், Getty Images

“என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் சிங்கிள் ரன் எடுக்க வேண்டும்?” ஒரு 10 -11 வயது சிறுவன் தனது பயிற்சியாளரிடம் இப்படிக் கூறினால் அது அறியாமையாகத் தோன்றலாம். ஆனால், இன்று அந்தச் சிறுவன் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இது வைபவ் சூர்யவன்ஷியின் கதை. தனது பயிற்சியாளர் மணீஷ் ஓஜாவிடம் 10-11 வயதிலேயே அவர் இதைக் கூறியிருந்தார்.

15 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026-ன் குஜராத் அணிக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்தார்

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 29 பந்துகளில் 97 ரன்களைக் குவித்தார். குவாலிபயர் 2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெறுவதில் வைபவ் முக்கியப் பங்காற்றினார். அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் ஸ்டிரைக் ரேட் 334.48 ஆக இருந்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு வியந்த கிறிஸ் கெயில், அவரை ‘புதிய சிக்ஸர் மெஷின்’ என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை வைபவால் முறியடிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிகபட்சமாக 59 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் 36 பந்துகளில் சதம் விளாசினார். இதுமட்டுமின்றி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் 244 ஸ்டிரைக் ரேட்டுடன் 93 ரன்களை எடுத்தார்.

15 வயது வைபவ் சூர்யவன்ஷியிடம் அப்படி என்னதான் சிறப்பு உள்ளது? அவர் எப்படி இவ்வளவு ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து ‘சிக்ஸர் மெஷின்’ ஆக உருவெடுத்துள்ளார்?

ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற மனநிலை

IPL, SuryaVanshi, Rajasthan, Cricket

பட மூலாதாரம், Getty Images

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான பேட்டிங்கிற்கு அவரது ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற மனநிலையே காரணமாக கருதப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி தனது 12-வது வயதிலேயே பிகார் அணிக்காக முதல் ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினார்.

அந்த அணித் தொடரின் பயிற்சியாளர் விகாஸ் குமார், “வைபவ் ஆரம்பத்திலிருந்தே அச்சமில்லாமல் விளையாடுகிறார். 12 வயதில் முதல்முறையாக மும்பை அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை போட்டியில் களமிறங்கியபோது, அவர் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. ஆனால், மும்பையின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் கவர் டிரைவ் மற்றும் புல் ஷாட்களை ஆடிய விதம் பார்க்க வேண்டிய ஒன்றாக இருந்தது. தனது மனநிலை என்ன என்பதை அவர் அப்போதே தெளிவுபடுத்திவிட்டார்,” என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும், உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவருமான பேட் கம்மின்ஸின் ஒரே ஓவரில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரியும், தொடர்ந்து மூன்று சிக்ஸர்களும் அடித்து மிரட்டினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 97 ரன்களைக் குவித்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜூரல், “வைபவ் சூர்யவன்ஷி தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ‘என்னால் இதைச் செய்ய முடியாது’ என்ற சந்தேகம் அவரது மனதில் துளியும் இருப்பதில்லை,” என்றார்.

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த பிறகு பேசிய வைபவ், “நான் பந்துவீச்சாளர்களைப் பார்ப்பதில்லை, பந்தை மட்டுமே கவனித்து விளையாடுகிறேன்,” என்று கூறியிருந்தார்.

இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷியின் அச்சமின்மை குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில், “அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம், பந்தை விரைவாகக் கணித்தல் மற்றும் பந்தின் மீது முழு ஆற்றலையும் செலுத்துதல் ஆகியவைதான் இந்த இன்னிங்ஸின் ரகசியம்,” என்று பாராட்டியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி களத்தில் விளையாடும் விதம் இந்த வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் அகாடமி இயக்குனர் ஹித்தேஷ் மஜும்தார், “வைபவ் சூர்யவன்ஷி ‘இந்தத் தலைமுறையின் ஒரு வீரர்’ . 15 வயதில் பல வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தனித்துவமானது. அவருக்குள் பயம் இல்லை. அவர் இயல்பாக விளையாடுவதுதான் அவரது மிகப்பெரிய பலம்,” என்றார்.

மேலும் அவர், “ராகுல் டிராவிட் மற்றும் புஜாராவுக்கு ‘பொறுமை’ என்பது இயல்பான திறமையாக இருந்தது போல, அதிரடியாகப் பேட்டிங் செய்வது வைபவ் சூர்யவன்ஷிக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் ஒரு திறமை. இத்தகைய திறமை கொண்டவர்களுக்கு இதைக் கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை, அது அவர்களாகவே வருவது,” என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சன் கூறியது என்ன?

வைபவ் சூர்யவன்ஷியின் சிறுவயது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா, “வைபவ் 8 வயதாக இருந்தபோது என்னிடம் வந்தார். சிறுவயதிலிருந்தே அவர் அச்சமில்லாமல் விளையாடி வருகிறார். அவருக்கு 10-11 வயது இருக்கும்போது, நீங்களும் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்கு அவர், ‘என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது, நான் ஏன் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று என்னிடம் கேட்டார்,” என நினைவு கூர்கிறார்.

மணீஷ் ஓஜா மேலும், “10-11 வயது சிறுவன் இப்படிச் சொன்னால், அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அதன்பிறகு நான் அவரை ஒருபோதும் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுக்கும்படி சொன்னதில்லை. அவரது ஆக்ரோஷமான பேட்டிங் அப்படியே தொடர்கிறது,” என்றார்.

வைபவ் பிகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பை விளையாடிக்கொண்டிருந்தபோது, பயிற்சியாளர் விகாஸ்குமாரிடமும் இதே கருத்தைத்தான் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

“என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் போது ஏன் பவுண்டரி மட்டும் அடிக்க வேண்டும்?” என்று அவர் கேட்டிருக்கிறார்.

விகாஸ்குமார் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி குறித்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ளும் அவர், “வைபவ், உன்னுடைய திட்டம் என்ன? என்று நான் ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர், ‘வந்தா அடிச்சு ஆடுவோம்’ என்று பதில் சொன்னார்” என்கிறார்.

இதேபோன்ற ஒரு விஷயத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிடிடமும் வைபவ் சூர்யவன்ஷி கூறியிருந்தார்.

“முதல் பந்தே கிடைத்தால் அதை பறக்க விட்டுவிடுவேன்,” என்று அவர் கூறியதாக, பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்திருந்தார்.

வைபவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் ஆக்ரோஷமாக மாறியிருப்பதாக மணீஷ் ஓஜா மற்றும் விகாஸ்குமார் ஆகிய இருவரும் கருதுகின்றனர்.

“வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் ஆக்ரோஷத்தைப் பார்த்து நான் வியக்கிறேன். வைபவிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அவர் இவ்வளவு ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தது கிடையாது,” என்று தெரிவித்தார் விகாஸ்குமார்.

வைபவ் சூர்யவன்ஷியின் நுட்பம்

IPL, SuryaVanshi, Rajasthan, Cricket

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும், மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவருமான பேட் கம்மின்ஸின் ஒரே ஓவரில், ஒரு பவுண்டரியும், அதைத்தொடர்ந்து மூன்று சிக்ஸர்களும் அடித்து வைபவ் சூர்யவன்ஷி மிரட்டினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி, அந்த இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அவர் ரன்களைக் குவித்தார்.

வைபவ்வின் பேட்டிங் குறித்து சமூக வலை தளமான ‘எக்ஸ்’ -ல் சச்சின் டெண்டுல்கர் எழுதுகையில், “வைபவ்வின் பேட் ஸ்விங் அற்புதமானது. பந்து வீசப்படும்போது, அவர் தனது முன்பக்கக் காலை நகர்த்தும் விதம் சிறப்பாக உள்ளது. இது அவருக்குத் தடையின்றி ஷாட்களை ஆடவும், எளிதாக சிக்ஸர்களை விளாசவும் சுதந்திரத்தை அளிக்கிறது. அவரது அந்த இன்னிங்ஸ் மிகச்சிறப்பானதாக இருந்தது,” என்று பாராட்டியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் நுட்பம் குறித்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆகாஷ் சோப்ரா விரிவாகப் பேசியுள்ளார்.

“வைபவ் பேட்டை உயர்த்தி, சற்று கீழே இறக்கி, மீண்டும் உயர்த்தி, அங்கே ஒரு நொடி காத்திருக்கிறார். பேட்டை இந்த திசையில் சுழற்றுவதை நான் எவரிடமும் பார்த்ததில்லை. அவரது பேட் கவர் திசையை நோக்கிச் செல்கிறது. பேட்டின் பின்பகுதி வரும் கோணம் மற்றும் அதை அவர் சுழற்றி அடிக்கும் விதம், அபாரமான சக்தியை உருவாக்குகிறது. குறிப்பாக, இடது பக்க ஷாட்களை அவர் மிக அற்புதமாக ஆடுகிறார்,” என்றார் ஆகாஷ் சோப்ரா.

ஒரு வேட்டைக்காரன் சாட்டையைச் சுழற்றுவது போல வைபவ் சூர்யவன்ஷி அடிப்பதையும், அதில் அவர் மணிக்கட்டை பயன்படுத்தும் விதத்தையும் குறிப்பிட்ட ஆகாஷ் சோப்ரா, “இது மிக அற்புதம்,” என்று புகழ்ந்தார்.

வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் பாணியை இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ தளத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்ச் ஆய்வு செய்துள்ளார்.

“வைபவ் தனது கைகளை உயரமாக வைத்திருக்கிறார். பேட்டின் மேல் பகுதி காற்றில் உயரமாக இருப்பதால், பேட்டின் எடை குறைவது போன்ற உணர்வு அவருக்குக் கிடைக்கிறது. அவர் பேட்டைத் தூக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு ‘ஃப்ரீ ஸ்விங்’ மட்டுமே செய்தால் போதுமானது. வைபவ் தனது தலையை மிக நிலைத்தன்மையுடன் வைத்திருக்கிறார்; அது அங்கும் இங்கும் ஆடவோ அல்லது சாயவோ இல்லை,” என்று தெரிவித்தார்.

மேலும், “இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடுப்புப் பகுதியில் ‘பிளைண்ட் ஸ்பாட்’ சிக்கல் இருப்பதுண்டு. ஆனால், வைபவ் தனது தலையை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதால், அவருக்கு அந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை” என்று ஆரோன் ஃபிஞ்ச் குறிப்பிட்டார்.

“இந்த ஐபிஎல் சீசன் முதல் வைபவ் நீளமான கைப்பிடி கொண்ட பேட்டை பயன்படுத்தி வருகிறார். மேலும், அவர் பேட்டை முழுமையாகச் சுழற்றி ஆடுகிறார்” என்றார் பயிற்சியாளர் மணீஷ் ஓஜா.

மேலும் அவர், “வைபவ் தனது புட் வொர்க்கிலும் பணியாற்றியுள்ளார். அவர் தனது புட் வொர்க்கைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய பலவீனங்களைச் சரிசெய்ய வைபவ் எடுக்கும் முயற்சிகள்

IPL, SuryaVanshi, Rajasthan, Cricket

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி தன்னைத் தானே பெரிதும் மேம்படுத்திக் கொண்டுள்ளார் என்று அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கருதுகிறார்.

வைபவ் சூர்யவன்ஷி தன்னைத் தானே பெரிதும் மேம்படுத்திக் கொண்டுள்ளார் என்று அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கருதுகிறார். அவர் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி கடினமாக உழைப்பவர் என்று அவர் கூறுகிறார்.

வைபவ் சூர்யவன்ஷி எந்தத் திட்டமும் வகுப்பதில்லை, ஆனால் நிறைய பயிற்சி செய்கிறார் என்று துருவ் ஜூரல் அவரைப் பற்றிப் பாராட்டியிருந்தார்.

மணீஷ் ஓஜா இது குறித்துக் கூறுகையில், “வைபவ் சமஸ்திபூரிலிருந்து பாட்னாவுக்குப் பயிற்சி பெற வருவார். அவர் 100 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார். வரும் நாட்களில் தீவிரமாகப் பயிற்சி செய்வார். அவருக்குப் பல்வேறு ஷாட்களைக் கற்றுக்கொடுப்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது, எனவே தற்காப்பு ஆட்டப் பயிற்சி பெரிய அளவில் இருக்கவில்லை,” என்றார்.

வைபவ்வின் கடின உழைப்பு குறித்துப் பேசிய பயிற்சியாளர் விகாஸ் குமார், “ரஞ்சிக் கோப்பைப் போட்டியின் போது, வெவ்வேறு ஆட்டங்களில் வைபவ் சூர்யவன்ஷியை இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள் ஒரே முறையில் அவுட் செய்தனர். இந்தத் தவறைச் சரிசெய்யுமாறு நான் அவரிடம் சொன்னேன். நெட் பயிற்சியின் போது, அவர் மீண்டும் அதே முறையில் அவுட் ஆகாமல் இருக்க, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்தார்,” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், வைபவ்வின் பேட்டிங் குறித்துப் பேசுகையில், “நாங்கள் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதையும் சொல்வதில்லை, பேட்டிங்கை ரசித்து விளையாடுமாறு மட்டுமே அறிவுறுத்துகிறோம். அவர் ஒரு மேதை; தன்னிடம் உள்ள பலவீனங்களை பயிற்சியின் மூலம் சரிசெய்ய அவர் தொடர்ந்து உழைக்கிறார்,” என்று குறிப்பிட்டார்.

பீகார் ரஞ்சிக் கோப்பை அணியின் முன்னாள் பயிற்சியாளர் விகாஸ் குமார் மேலும் கூறுகையில், “வைபவ்வின் வாழ்க்கையில் இதுவரை அவருக்குக் கிடைத்த அனைத்து பயிற்சியாளர்களும், அவர் விரும்பியபடி விளையாட அவருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். அதனால்தான் அவர் இவ்வளவு இயல்பாகவும் ஆக்ரோஷமாகவும் பேட்டிங் செய்கிறார்,” என்று தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin