• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

கோப்பையை வென்ற பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வேதனை அடைந்தேன்- சூர்யகுமார் யாதவ்

Byadmin

Nov 11, 2026


இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. ஆனால் ரன் குவிக்க முடியாமல் திணறிய சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு சற்று கடினமான காலமாக இருந்தது. அணியில் இருந்து நீக்கப்பட்டதால் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை.

ஒருவர் தனக்குத்தானே நேர்மையாக இல்லை யென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினம். அதே சமயம் ஐ.பி.எல் தொடரின் போது மே மாதத்தில் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

எனவே, எனது கவனம் முழுமையாக என் குழந்தையின் பக்கம் திரும்பியது. அவள் பிறந்ததும் கடந்த சில மாதங்கள் மிகவும் அழகானவையாக அமைந்தன. இதனால் மன அழுத்தம் மறைந்து அந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு விட்டேன்.

எனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய காலத்தில், மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்பினேன். அதை ஏன் மீண்டும் நினைக்கக்கூடாது என்று யோசித்தேன்.

எனவே, அதைப் பற்றித்தான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். 10-15 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படிச் செயல்பட்டேனோ, அதே பாதையில் இப்போதும் பயணிக்கிறேன். மீண்டும் தீவிரப் பயிற்சி, விளையாட்டின் மீது அதே அன்பு மற்றும் ஆர்வம் என அனைத்தும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. தற்போது எனது முக்கிய இலக்கு மும்பை அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் தொடங்க உள்ள சையது முஷ்டாக் அலி கோப்பை 20 ஓவர் போட்டி தொடரில் மும்பை அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார்.

By admin