• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

சோனியா காந்தி பிரதமர் பதவியை மறுத்ததன் பின்னணியில் நடந்தது என்ன? புதிய சுயசரிதை கூறும் தகவல்கள்

Byadmin

Nov 11, 2026


சோனியா காந்தி

படக்குறிப்பு, சோனியா காந்தி இந்திய வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்துள்ளார்.

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்திய செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை, சோனியா காந்தி இளம் மனைவியாகவும் தாயாகவும் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார். அவர் குளிக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, தோட்டத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.

அவரது மாமியாரும் இந்திய பிரதமருமான இந்திரா காந்தி, அருகில் இருந்த மற்றொரு கட்டடத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

சில நிமிடங்களில், அந்த ஆண்டின் தொடக்கத்தில் சீக்கிய மதத்தின் புனிதத் தலமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாகத் தனது சீக்கிய பாதுகாவலர்கள் இருவராலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அந்தத் துப்பாக்கிச் சத்தம் பட்டாசுகள் வெடிப்பதைப் போல் இருந்தது. ஆனால், அது “வித்தியாசமாக” இருந்தது. குழந்தைகளைப் பராமரித்து வந்த பெண், பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தட்டி, தோட்டத்தை நோக்கி சைகை காட்டினார். சோனியா வேகமாக அந்தப் பாதையை நோக்கிச் சென்றார்.

வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று மெதுவாக அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதன் உள்ளே இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது புடவையில் ரத்தம் படிந்திருந்தது, கண்கள் திறந்திருந்தன மற்றும் அவரது முகத்தில் அதிர்ச்சி வெளிப்பட்டதாக சோனியா நினைவுகூர்ந்தார்.



By admin