பட மூலாதாரம், Mayank Makhija/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, இம்முறை, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களைச் சரிபார்க்க திரையில் மதிப்பிடும் முறையை சிபிஎஸ்இ பயன்படுத்தியது, அதில் கடுமையான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்’ அதாவது ஓஎஸ்எம்(OSM) என்பது, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக சிபிஎஸ்இ பயன்படுத்திய ஒரு டிஜிட்டல் மதிப்பீட்டு செயல்முறையாகும். விடைத்தாள்களை விரைவாகவும், குறைந்தபட்ச பிழைகளுடனும் திருத்துவதே இதன் நோக்கம் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது.
இருப்பினும், சிபிஎஸ்இ-யிடம் இருந்து சுமார் 4 லட்சம் மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது விடைத்தாள்களைக் கேட்டபோது, ஓஎஸ்எம் தொடர்பாக சர்ச்சை வெடித்தது.
பல விடைத்தாள்கள் மங்கலாகவோ, வெறுமையாகவோ அல்லது மாற்றப்பட்டோ இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த விவகாரத்தைத் கையில் எடுத்தனர்.
அவர்களில் மூன்று மாணவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ தலைவரை இடமாற்றம் செய்வது போன்ற முக்கிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சகம் எடுக்க வேண்டியதாயிற்று.
அந்த மூன்று மாணவர்கள் யார் என்றும், அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் தெரிந்து கொள்வோம்.
டெண்டர் கொடுப்பதில் வாரியம் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சர்தக் சித்தாந்தா தனது கருத்துக்களை நாடாளுமன்றக் குழுவின் முன் சமர்ப்பித்தார்.
18 வயது சர்தக் சித்தாந்த், சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து 31 எம்பிக்கள் முன்னிலையில் பேசினார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த சர்தக், தனது கோடிங் மற்றும் ஆராய்ச்சித் திறன்களைப் பயன்படுத்தி, சிபிஎஸ்இ-யின் விடைத்தாள் மதிப்பீட்டு முறையான ஓஎஸ்எம் மற்றும் அதனுடன் தொடர்புடைய டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தனது வலைப்பதிவில், சிபிஎஸ்இ எவ்வாறு டெண்டர் விதிகளைத் தொடர்ச்சியாக மாற்றியமைத்து, விடைத்தாள்களை மதிப்பிடும் ஒப்பந்தத்தை ஒரு சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு வழங்கியது என்பதை பற்றி சர்தக் விரிவாக எழுதியிருந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘கோஎம்ப் எடுடெக் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்குப் பயனளிக்கும் வகையில், அடுத்தடுத்த மூன்று டெண்டர் சுற்றுகளில் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தேவைகள் மாற்றப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இறுதியில் இந்த நிறுவனமே டெண்டரை வென்றது.
ஒரு பெரிய அரசு நிறுவனம் தனது விதிகளை மாற்றி எழுதியதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்துடன் எவ்வாறு விளையாடியது என்பதை இந்தக் கதை கூறுவதாகவும் சர்தக் எழுதியிருந்தார்.
சர்தக் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தாமல், ஒரு டெண்டர் காலவரிசையையும் தயாரித்திருந்தார்.
அதில், தங்களுக்கு விருப்பமான நிறுவனத்திற்கு டெண்டரை வழங்குவதற்காக முறைகேடுகள் செய்யப்பட்டன என அவர் கூறியிருந்தார்.
இந்த நிறுவனமும் சிபிஎஸ்இ-யும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், அதற்குள் இந்த குளறுபடி விவகாரம் வெளியாகிவிட்டது.
சர்தக்கின் வலைப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவால் அவர் நேரில் வரவழைக்கப்பட்டார் .
சர்தக் நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
பிடிஐ செய்தியின்படி, இந்த கூட்டத்தில் சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங், பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வி வாரியத்துடன் தொடர்புடைய இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, சிபிஎஸ்இ தலைவர்கள் ராகுல் சிங் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓஎஸ்எம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் குழுவும் அமைக்கப்பட்டது.
ஓஎஸ்எம் யூஆர்எல்-லை ‘ஹேக்’ செய்த நிசார்க் அதிகாரி
பட மூலாதாரம், @ni5arga/X
படக்குறிப்பு, நிசர்க் அதிகாரி ஒரு நெறிமுறை ஹேக்கர், அதனால் அவர் தனது புகைப்படத்திற்குப் பதிலாக அனிமேவைப் பயன்படுத்துகிறார்.
தன்னை எத்திகல் ஹேக்கர் என்று விவரிக்கும் நிசர்க் அதிகாரி, ஓஎஸ்எம் இணைய முகவரிக்குள் எவ்வாறு நுழைய முடிந்தது என்பதை பிபிசியிடம் விளக்கினார்.
அவர் இந்த அமைப்பின் முதன்மை கடவுச்சொல்லைக் கண்டறிந்தது மட்டுமன்றி, மாணவர்களின் பதிவுகள், தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விடைத்தாள் திருத்துபவர்களின் கணக்குகளை அணுகும் வாய்ப்பையும் பெற்றார்.
இவ்வளவு எளிமையாக அதனைஅணுக முடிவதன் மூலம், யார் வேண்டுமானாலும் தேர்வு விடைத்தாள்களில் எளிதாக முறைகேடு செய்யலாம், மதிப்பெண்களை மாற்றலாம், தொலைபேசி எண்கள் மற்றும் வங்கி விவரங்களைக் கூட பெறலாம் என்று கூறுகிறார் நிசர்க்.
மேலும், ‘கோஎம்ப்’ நிறுவனம் மாணவர்களுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் அமேசான் வெப் சர்வீசஸ் போன்ற பொது கிளவுட் சேமிப்பக வசதிகளில் பதிவேற்றியுள்ளது என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் எந்தவித சரிபார்ப்பும் இன்றி பார்க்க முடிந்ததையும் நிசர்க் தெரிவித்தார்.
இந்தியாவின் கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழுவிற்கு (CERT-IN) பல மின்னஞ்சல்கள் மூலம் ஆறு முதல் ஏழு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தான் புகாரளித்ததாகவும் அவர் கூறினார். இந்த மின்னஞ்சல்களை பிபிசி-யும் பார்த்துள்ளது.
CERT-IN என்பது இணையப் பாதுகாப்புப் பிரச்னைகளைக் கையாளும் ஒரு மத்திய அமைப்பாகும். இந்த ஹேக்கிங் குறித்து தனது எக்ஸ் கணக்கிலும் நிசர்க் விரிவாக எழுதியிருந்தார்.
இருப்பினும், சிபிஎஸ்இ இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், அவர் குறிப்பிட்ட இணையதள முகவரி ஒரு சோதனைத் தளம் என்றும், அதில் உண்மையான தரவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தது.
இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, சிபிஎஸ்இ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில், இந்த அமைப்பைப் பாதுகாப்பதற்காக ஐஐடி வல்லுநர்கள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவெளியில் புகாரளிக்கப்பட்ட குறைபாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
தவறான விடைத்தாள் நகலைப் பெற்ற வேதாந்த் ஸ்ரீவஸ்தவா
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் வேதாந்தா தனது கருத்தை விளக்குகிறார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவரான வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவின் இயற்பியல் விடைத்தாள் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், சமூக ஊடகங்களிலும் இது பரவலாக விவாதிக்கப்பட்டது.
மறுமதிப்பீட்டு செயல்முறையின் ஒரு பகுதியாகத் தான் பதிவிறக்கம் செய்த ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல் தன்னுடையது அல்ல என்றும், அது வேறு ஒருவருடையது என்றும் வேதாந்த் குற்றம் சாட்டினார்.
இந்தச் சர்ச்சைக்குப் பிறகு, பலரும் வேதாந்திற்கு ஆதரவளித்த அதே வேளையில், அவர் இணையத்தில் கடுமையாகக் கேலி செய்யப்பட்டார்.
பலர் அவரை தேசத்துரோகி என்றும் கூட அழைத்தனர்.
பின்னர் சிபிஎஸ்இ தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், வேதாந்திற்கு அவருடைய சரியான விடைத்தாள் அனுப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.
செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய வேதாந்தின் சகோதரர் சித்தார்த் ஸ்ரீவஸ்தவா, “வேதாந்த் தனது இயற்பியல் தேர்வு முடிவில் திருப்தியடையவில்லை. இயற்பியலுடன் சேர்த்து கணிதம், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் மறுமதிப்பீட்டிற்கும் நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பார்த்தபோது, இயற்பியல் விடைத்தாள் அவனுடைய நகலுடன் ஒத்துப்போகவில்லை என்பதைக் கண்டறிந்தோம்” எனக் கூறியிருந்தார்.
தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்காக, இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ-க்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாகவும் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டதாகவும் சித்தார்த் கூறினார்.
“எங்களுடைய இந்தப் பதிவு வைரலானது, ஆனால் பலரும் எங்களை மிகவும் கேலி செய்தனர். எங்களை பாகிஸ்தானியர் என்று கூட அழைத்தனர். பல செய்தித் தொகுப்பாளர்கள் எதையும் சரிபார்க்காமல் எங்களைப் பாகிஸ்தானியர் என்று அழைக்கத் தொடங்கினர்” என்றும் சித்தார்த் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த 17 வயது சிறுவன் சமூக ஊடகங்களுக்கு வந்தான், ஆனால் பாஜக அவனைக் ‘துரோகி’ என அழைத்தது என்று அவர் கூறியிருந்தார்.