• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

Byadmin

Nov 22, 2026


பங்களாதேஷில் நடைபெற்ற 15ஆவது தெற்காசிய கால்பந்;தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட சுப்பர் லீக் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் இன்று சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள சீ ஹோக்ஸ் அணிக்கும் பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் அணிக்கும் இடையிலான போட்டியுடன் மிண்டும் ஆரம்பமாகவுள்ளது.

 

இப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த  இந்தப் போட்டி  சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது. அத்தடன் தொடரவிருந்த றினோன் – புளூ ஸ்டார் மற்றும் கலம்போ எவ்சி – அப்கன்ட்றி லயன்ஸ் ஆகிய போட்டிகளும் சீரற்ற காலநிலை  காரணமாக   பிற்போடப்பட்டன.

சீஹோக்ஸ் – ரெட் ஸ்டார் ஆகிய அணிகள் பிரதான சுப்பர் லீக்கில் சந்தித்துக்கொண்ட போது போட்டியின் 50ஆவது நிமிடத்தில் தேசிய வீரர் மொஹமத் ஹஸ்மீர் போட்ட கோல் மூலம் சீ ஹோக்ஸ் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

எவ்வாறாயினும் அதன் பின்னர் போட்டிக்கு போட்டி பெரு முன்னெற்றம் அடைந்த ரெட் ஸ்டார் கழகம், சுப்பர் லீக் சுற்றில் சீ ஹோக்ஸ் கழகத்துக்கு பலத்த சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கடைசியாக நடைபெற்ற கலம்போ எவ்சியுடனான போட்டியில் சிவப்பு அட்டைக்கு இலக்கான ரெட் ஸ்டார் அணித் தலைவர் சமோத் டில்ஷானுக்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்தப் போட்டியில் விளையாட முடியாது. இது ரெட் ஸ்டார் அணிக்கு பெரும் தாக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரெட் ஸ்டார் அணியின் உதவியாளர் ஒருவரும் சிவப்பு அட்டைக்கு இலக்கானதால் இந்தப் போட்டியின்போது வெறும் பார்வையாளராக அரங்கில் இருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

By admin