படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு பாஜக கிசான் மோர்ச்சாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜ்மெர் எம்பி பாகிராத் சௌதரி டிராக்டரில் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மத்திய வேளாண் இணை அமைச்சர் பாகிராத் சௌதரி தனது சொந்த அமைச்சகத்தில் இருந்து வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் குடைமிளகாய் பயிரிடுவதற்காக ரூ.99 லட்சம் வரை மானியம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
தான் ஒரு பசுமைக்குடில் (பாலிஹவுஸ்) நிறுவி 8 ஆண்டுகளுக்கு முன்னர் மானியத்திற்காக விண்ணப்பித்ததாகக் கூறும் அவர், “நான் எதையும் ரகசியமாகச் செய்யவில்லை.” என்றும் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் அஜ்மெர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக பாகிராத் சௌதரி உள்ளார். அவர் விளக்கமளித்த பிறகும் இந்தச் சர்ச்சை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது.
இந்த விவகாரத்தையொட்டி அரசாங்கத்தைக் குறிவைத்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலோட் இதனை ஒரு புதிய வடிவிலான ஊழல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களிலும் இது விவாதப் பொருளாகியுள்ளது. எழுத்தாளர் சாப நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், “வெள்ளரிக்காய், தண்ணீர், காடு, நிலம் என அனைத்திலும் ஊழல். அது எல்லாவற்றிக்கும் மேலாக நெய், நகைகள், கோயில் நன்கொடைகள் என அனைத்திலும் ஊழல். அவமானத்திலும் தலைகுனிய வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 27-ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை எழுந்தது.
அந்தச் செய்தியின்படி, “மத்திய வேளாண் இணை அமைச்சர் பாகிராத் சௌதரி மூன்று மாதங்களுக்கு முன்னர் அவரது சொந்த அமைச்சகத்தின் கீழ் வரும் திட்டத்தில் இருந்து ரூ.99,60,000 மானியமாகப் பெற்றுள்ளார். இதற்கு அவர் அலுவல் சாரா துணைத் தலைவராக இருக்கும் வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.”
எனினும் பாகிராத் சௌதரிக்கு ஆதரவாகப் பேசியுள்ள பாஜக ராஜஸ்தான் மாநிலத் தலைவர் மதன் ராத்தோர், “எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலியானது. இந்த மானியம் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் வழங்கப்படுகிறது, பாகிராத் சௌதரி அதன் உறுப்பினர் கிடையாது. எதிர்க்கட்சியில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் அறியாமையால் செய்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
சர்ச்சை என்ன?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் (நடுவில் இருப்பர்) மற்றும் இணை அமைச்சர் பாகிராத் சௌத்ரி (வலது பக்கம் இருப்பவர்)
தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பூக்களின் ‘வணிக பயிரிடுதலை’ ஊக்குவிப்பதற்காக 2014 – 2015-இல் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
மேலும் அந்தச் செய்தியில், “இது ஒருங்கிணைந்த தோட்டக்கலைத் துறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வருகிறது. இந்தத் திட்டம் சௌதரியின் அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான தேசிய தோட்டக்கலை வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு திட்ட மதிப்பில் 50% வரை (அதிகபட்சமாக ரூ.1 கோடி), வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ரோஜா, அந்தூரியம் மற்றும் ஆர்கிட் உள்ளிட்ட எட்டு வகையான பூக்களைப் பயிரிடுவதற்கு மானியமாக வழங்கப்படுகிறது.
16,592 சதுர மீட்டர்கள் பரப்பளவில் வெள்ளரிக்காய் பயிரிடுவதற்கான பாகிராத் சௌதரியின் திட்டம் உள்பட 467 திட்டங்களுக்கு 2025-இல் தேசிய தோட்டக்கலை வாரியதால் அனுமதி வழங்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
இவை, ‘தோட்டகலை பயிர்களின் உற்பத்தி மற்றும் விளைச்சலுக்குப் பிறகான மேலாண்மை மூலம் வணிக தோட்டக்கலையின் வளர்ச்சி’ என்கிற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் அந்தச் செய்தியின், “வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, அதன் நடவடிக்கைகள் ஒரு இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய வேளாண் அமைச்சர் அதன் அலுவல் சாரா தலைவராகவும், இணை அமைச்சர் அதன் அலுவல் சாரா துணைத் தலைவராகவும் உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையாகப் பார்த்தால் இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெறும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் இணை அமைச்சருக்கு எந்த நேரடி பங்கும் இல்லை என்று கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இறுதி ஒப்புதல் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் வழங்கப்படுவதாகவும் இந்தக் குழுவில் வாரியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என யாரும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கிறது.
மேலும் அதில், “2025-2026 நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் கிழ் 677 ஏக்கர் பரப்பளவில் ரூ.144 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 467 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 60 திட்டங்களுக்கு ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான மானியம் கிடைத்துள்ளது. இந்தத் தளத்தில் உள்ள கட்டாய அறிவிப்பு பலகையில், மானியத் தொகை நீங்கலாக இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.1.99 கோடி எனக் குறிப்பிட்டுள்ளது.” என்று கூறுகிறது.
ஆவணங்களை மேற்கோள் காட்டும் அந்தச் செய்தி, 2024 முதல் சௌதரி அஜ்மெர் தொகுதி பாஜக எம்பியாகவும் வேளாண் அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் உள்ளார் என்று தெரிவிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலைகளைத் தொடங்க ஏப்ரல் 15, 2025-இல் விண்ணப்பிக்கத் தொடங்கினார் என்றும் அதற்கு 14 நாட்கள் கழித்து ஏப்ரல் 29, 2025 அன்று இந்தத் திட்டத்திற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2018-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக பாகிராத் சௌதரி கூறுகிறார். அவர் 2019-ஆம் ஆண்டில் முதல் முறையாக அஜ்மெர் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் எதிர்க்கட்சிகள்
பட மூலாதாரம், Ashok Gehlot
படக்குறிப்பு, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலோட்
இந்தச் செய்தியின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைக் குறிவைத்து வருகின்றன.
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாட்டின் வேளாண் இணை அமைச்சர் தனது அமைச்சகத் திட்டத்தின் கீழ் தனது சொந்த பண்ணைக்காக ரூ.1 கோடி மானியத்திற்கு ஒப்புதல் பெறுகிறார் என்றால் என்ன சொல்வது?”
“ஒருபக்கம் சாதாரண விவசாயி அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று வருவதில் சோர்வடைகிறார். மறுபக்கம் பாஜக அமைச்சர்கள் மற்றும் விருப்ப அதிகாரிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க உதவிகளைப் பெற்று வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை மேற்கோள்காட்டி வெளியிட்ட பதிவில், “வேலியே பயிரை மேய்ந்தால், பயிர் எப்படி பிழைக்கும்? இது மிகவும் கவலையளிக்கிறது. ஏனெனில் ஏழை மக்கள் 5 கிலோ இலவச ரேசன் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான மதிய உணவு ஆகியவற்றுக்கு நன்றிக்கடன் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்ப்படுகின்றனர். இவை ஏதோ அரசாங்கத்தின் உதவிகள் என்றும் மக்களின் உரிமைகள் இல்லை என்றும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அமைச்சர்களும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் அரசாங்கத்தின் கஜானா அவர்கள் எட்டும் தூரத்தில் இருப்பதாக நினைக்கின்றனர். அவர்கள் மானியம் பெற்று, அரசாங்கத்தின் பலன்களைப் பெற்று மக்கள் பணத்தை தங்கள் தந்தையின் சொத்து என்பதைப் போல பயன்படுத்தி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம் என்ன?
பட மூலாதாரம், Bhagirath Choudhary
படக்குறிப்பு, மத்திய வேளாண் இணை அமைச்சர் பாகிராத் சௌதரி
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பாகிராத் சௌதரி, “நான் ஒரு விவசாயி, சிறு வயதில் முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் பிரதமர் கேட்டுக் கொண்டதைப் போல மேம்பட்ட விவசாயத்தைப் பின்பற்றி வருகிறேன். நான் ஒரு பசுமைக்குடிலை நிறுவினேன். எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் இல்லை என்பதே அதற்கு மிகப்பெரிய காரணம்.
இந்தப் பசுமைக்குடியின் உச்சியில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அதிலிருந்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்வதற்கும் பயன்படுத்துகிறேன். இதில் வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் குடைமிளகாய் வளர்த்து வருகிறேன்.” என்றார்.
தான் எதையும் மறைக்கவில்லை என்று கூறும் அவர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து மானியன் பெறுவதாகவும் அதே திட்டத்தின் கீழ் தானும் பெற்றதாகவும் தெரிவிக்கிறார்.
“நான் 2018-ஆம் ஆண்டிலிருந்து விண்ணப்பித்து வருகிறேன். அங்கு ஒரு பலகை வைத்து நான் பெற்றுள்ள கடன்கள் மற்றும் மானியங்கள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன். மேலும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை விவசாயத்தில் பயிற்சி வழங்கி வருகிறேன். நான் எதையும் ரகசியமாக செய்யவில்லை.” என்றார்.