பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
வெள்ளை நிற வட்டங்கள் இரண்டு கருப்பு நிற வட்டப் புள்ளிகளைச் சுற்றியிருந்தன. அவை ஒவ்வொன்றும் டேபிள் டென்னிஸ் பந்தைவிட சற்று பெரியதாக இருந்தன. மேலும், நுரையீரல் முழுவதும் பரவியிருந்த வெள்ளைப் புள்ளிகளும், காசநோய், நுரையீரலை மெல்ல மெல்ல அழித்து வந்ததைக் காட்டின.
இது பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் நுரையீரல் எக்ஸ்-ரே.
லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாப்பியர் ஆகியோர் தங்களது ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ புத்தகத்தில், “1946ஆம் ஆண்டு ஜூன் மாதம், பம்பாயைச் சேர்ந்த மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேலும், கதிரியக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜல் டெபூவும் இந்த எக்ஸ்-ரேவைப் பார்த்த பிறகு, நோய் எந்த அளவுக்கு முற்றியிருந்தது என்பதைப் புரிந்துகொண்டனர். ஜின்னா இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்தனர்” என்று எழுதுகின்றனர்.
“ஆனால், ஜின்னாவின் வேண்டுகோளின்படி, இரு மருத்துவர்களும் இந்த அறிக்கையை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர்.”
பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு 79 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரு பார்சி மருத்துவர்களும் தங்களது “அமைதியான ஆனால் அசாதாரணமான சேவைக்காக”, அந்த நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘நிஷான்-இ-குவைத்-இ-ஆசம்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
“20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் வரலாற்றை மாற்றியமைத்த ரகசியங்களில் ஒன்றாக பல வரலாற்றாசிரியர்கள் கருதும் ஒரு ரகசியம் இது” என்று பாகிஸ்தானின் திட்டமிடல் அமைச்சரும், விருதுக் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“ஜின்னாவின் உடல்நிலை குறித்த தகவல் அவரது அரசியல் எதிரிகளுக்கும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் தெரிந்திருந்தால், இந்தியப் பிரிவினையைத் தடுத்திருக்க முடியும். மேலும், பாகிஸ்தான் உருவாக்கமும் ஆபத்துக்குள்ளாகியிருக்கக்கூடும்.”
‘மோசமடைந்த ஜின்னாவின் உடல்நிலை’
பட மூலாதாரம், OUP
ஜின்னாவின் உடல்நிலை மோசமடைந்து வந்ததும், அவரது உடலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பும் உலகத்திடம் இருந்து மறைக்கப்பட்டிருந்தது.
அக்பர் அகமது தனது ஜின்னா, பாகிஸ்தான் அண்ட் இஸ்லாமிக் ஐடன்டிடி: த சர்ச் ஃபார் சலாடின் (Pakistan and Islamic Identity: The Search for Saladin) என்ற புத்தகத்தில், “ஜின்னாவின் நேர்த்தியான உடையும் கண்ணியமான தோற்றமும், அவர் உடல்நலத்துடன் இல்லை என்ற உண்மையை மறைத்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.
“1938ஆம் ஆண்டு முதல், தனது நரம்பு மண்டலம் மற்றும் உடல் வலிமையில் ஏற்பட்ட சோர்வு குறித்து அவர் புகார் தெரிவித்து வந்தார். அதன் பிறகு அவர் அடிக்கடி நோய்வாய்ப்படத் தொடங்கினார். ஆனால், அவரது உடல்நிலை குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது.”
எழுத்தாளர் ஹெக்டர் போலித்தோ, 1952ஆம் ஆண்டு மே மாதம் பம்பாயில் மருத்துவர் படேலைச் சந்தித்தார்.
ஹெக்டர் போலித்தோ தனது ஜின்னா : கிரியேட்டர் ஆஃப் பாகிஸ்தான் (Jinnah: Creator of Pakistan) என்ற புத்தகத்தில், 1944ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜின்னாவைப் பரிசோதித்தபோது அவரது ரத்த அழுத்தம் சுமார் 90 ஆக இருந்ததாக மருத்துவர் படேல் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
“அப்போது அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், மிகவும் மெலிந்து பலவீனமாகிவிட்டார். நெஞ்சுவலி மற்றும் இருமல் இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார். அவரது நுரையீரலின் கீழ்ப்பகுதியில் நிமோனியாவுக்கான அறிகுறிகள் இருந்தன. அவை முழுமையாகக் குணமடையவில்லை”என்று மருத்துவர் படேல் கூறினார்.
“நான் அவருக்கு கால்சியம் ஊசிகள், உடல் வலிமையை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் குறுகிய அலை டயாதெர்மி சிகிச்சையைப் பரிந்துரைத்தேன். இருமல் குறைந்தது. பின்னர் அவர் ஓய்வெடுப்பதற்காக மலைப்பகுதிக்குச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, 18 பவுண்டு எடை அதிகரித்திருந்தார். இந்தச் செய்தி செய்தித்தாள்களில் வெளியானது. அதில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.”
“நான் ஜின்னாவிடம் சென்று, ‘ஏதோ ஒரு முட்டாள் இந்தச் செய்தியை செய்தித்தாள்களுக்குக் கசியவிட்டுவிட்டார்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘அந்த முட்டாள் நான்தான்’ என்று பதிலளித்தார்.”
“எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு இவ்வளவு சிறப்பாகச் சேவை செய்த அந்த நபருக்கு நான் ஏன் நன்றி சொல்லக்கூடாது?” என்று அவர் கூறினார்.
‘தீவிரமடைந்த நோய்’
பட மூலாதாரம், Keystone/Getty Images
அக்பர் அகமதுவின் கூற்றுப்படி, 1945-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெரும்பாலான நேரம் ஜின்னா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியிட்ட, இஸ்ஃபஹானி ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கடிதத்தில், “அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால், என்னால் அதைச் சமாளிக்கவே முடியவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“அவரது மருத்துவர்களான மருத்துவர் ஜல் படேல் மற்றும் மருத்துவர் தின்ஷா மேத்தா ஆகியோர், ஓய்வெடுக்கவும், உடல்நலத்தை மீட்டெடுக்கவும், பணிச்சுமையைக் குறைக்கவும் அவரை சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனால், பாகிஸ்தானுக்கான போராட்டம் தொடங்கிவிட்டது. ஜின்னாவுக்கு நேரம் வேகமாகக் குறைந்து கொண்டிருந்தது.”
லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாப்பியர் ஆகியோர், பலவீனமான நுரையீரல் காரணமாக ஜின்னா தனது வாழ்நாள் முழுவதும் மோசமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
“1946ஆம் ஆண்டு மே மாத இறுதியில், சிம்லாவில் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா மீண்டும் மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டார். ஜின்னாவின் விசுவாசமான சகோதரி ஃபாத்திமா, அவரை ரயிலில் பம்பாய்க்கு அழைத்துச் சென்றார். ஆனால், பயணத்தின்போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
ஃபாத்திமா உடனடியாக மருத்துவர் படேலை அழைத்தார். தனது நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அவர் விரைவில் உணர்ந்தார்.”
1970களின் தொடக்கத்தில், லாரி காலின்ஸும் டொமினிக்கும் தங்களது புத்தகத்துக்காக ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ஜின்னாவுக்கான சிகிச்சை தொடர்பான ரகசியக் கோப்பை மருத்துவர் படேல் அவர்களிடம் காட்டினார். அதில் வெறுமனே “எம்.ஏ.” என்று எழுதப்பட்டிருந்தது.
அப்போது, ஜின்னாவுக்கு எக்ஸ்-ரே எடுத்த கதிரியக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜல் டெபூ உயிரிழந்திருந்தார். எனவே, அவரது கிளினிக்கில் பணியாற்றிய அவரது மகள் ஹோமியை லாரி காலின்ஸ் தொடர்புகொண்டார்.
மருத்துவர் படேல் தெரிவித்த அதே தகவல்களை ஹோமியும் வழங்கினார்.
நோய் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக படேலும் டெபூவும் முடிவு செய்தனர்.
1975-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ என்ற தங்களது புத்தகத்தில், லாரி காலின்ஸும் டொமினிக்கும் இந்த ரகசியத்தை முதன்முறையாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.
அந்தப் புத்தகத்தின்படி, பம்பாய் ரயில் நிலையத்தில் தன்னை வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்தைச் சந்திக்க முயன்றால், தான் மயங்கி விழக்கூடும் என்று மருத்துவர் படேல் ஜின்னாவை எச்சரித்திருந்தார்.
“எனவே, படேல் அவரை முன்கூட்டியே ரயிலில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் இந்தியாவின் பின்னாளில் மிகக் கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட ரகசியமாக மாறிய அந்த உண்மையை படேல் கண்டறிந்தார்.”
தனது நண்பரும் நோயாளியுமான ஜின்னாவிடம், அவரது உயிரைப் பறிக்கக்கூடிய நோய் குறித்து மருத்துவர் படேல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மருத்துவர் படேலின் கூற்றுப்படி, “ஜின்னாவின் உடல் வலிமை அதன் எல்லையை நெருங்கிவிட்டதாக அவர் கூறினார். தனது பணிச்சுமையை கணிசமாகக் குறைக்காவிட்டால், அதிகமாக ஓய்வெடுக்காவிட்டால், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், உடலுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்காவிட்டால், அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார்.”
படேலின் கூற்றுப்படி, “இந்தக் கசப்பான செய்தியைக் கேட்ட பிறகும் ஜின்னாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது வெளிறிய முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தனது வாழ்க்கைப் போராட்டத்தை விட்டுவிட்டு மருத்துவமனையில் படுத்திருப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அவர் தெளிவாகக் கூறினார்.”
“வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் இந்திய முஸ்லிம்களை வழிநடத்துவது என்ற தனது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, மரணம் மட்டுமே அவரைத் தடுக்க முடியும்.”
ஜின்னாவுக்கு தனது உடல்நிலை குறித்த தகவல் எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டால், அவர்களின் ஒட்டுமொத்த அரசியல் வியூகமும் மாறக்கூடும் என்பது தெரிந்திருந்தது.
ஜின்னாவின் மரணத்துக்காக அவர்கள் காத்திருந்து, பின்னர் முஸ்லிம் லீக் தலைமையில் இருக்கும் அதிக ‘வளைந்து கொடுக்கும்’ தலைவர்களின் மூலம் அவரது கனவை அழிக்க முயற்சித்திருக்கலாம்.
பட மூலாதாரம், Douglas Miller/Keystone/Getty Images)
‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ புத்தகத்தில், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் மருத்துவர் படேல் ஜின்னாவுக்கு ரகசியமாக சில ஊசிகளைப் போடுவார் என்றும், அது அவருக்குச் சிறிதளவு பலத்தை அளித்து, ஜின்னாவை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற அவர் எந்தத் தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. அசாதாரணமான துணிச்சல் மற்றும் உறுதியுடன், ஜின்னா தனது வாழ்க்கையின் இலக்கை நோக்கி வேகமாகத் தொடர்ந்து சென்றார்.”
அக்பர் அகமதுவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் உருவான நேரத்தில் ஜின்னாவின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
“அவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்குப் பிடித்த ‘கிரேவன் ஏ ‘ பிராண்டின் சிகரெட்டுகளை தினமும் சுமார் 50 வரை புகைக்கும் பழக்கமும், இடைவிடாத பணிச்சுமையும் அவரது உடல்நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.”
1947ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி, பாகிஸ்தான் உருவாக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஜின்னா பம்பாயில் உள்ள ஆரம் பாக் கல்லறையில் தனது மனைவி ரத்தன்பாய் (ரட்டி)யின் கல்லறைக்குச் சென்றார்.
அவர் இனி பம்பாய்க்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதை அறிந்திருந்தார்.
பாகிஸ்தான் உருவான பிறகு, ஜின்னா மீண்டும் பணிகளில் மூழ்கினார். எனினும், அவரது அன்றாட வாழ்க்கையும் பணிச்சுமையும் ஓரளவு மேம்பட்டன.
‘நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்’
பட மூலாதாரம், Getty Images
ஹெக்டர் போலித்தோ குறிப்பிட்டுள்ள படி, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் பழைய பார்சி நண்பரான ஜாம்ஷெட் நஸ்ஸர்வான்ஜி, ஒரு நாள் கராச்சியில் உள்ள அரசு மாளிகையின் தோட்டத்தில் ஜின்னாவைத் தேடிச் சென்றார்.
அப்போது, பாதி தூக்க நிலையில் ஒரு மேசையில் அமர்ந்திருந்த ஜின்னாவை அவர் கண்டார். ஜின்னா கண்களைத் திறந்து, “நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், ஜாம்ஷெட். மிகவும் சோர்வாக இருக்கிறேன்” என்று கூறினார்.
பொலித்தோவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜின்னா எப்போதும் மிகவும் பரபரப்பாக இருந்தார். எனவே, வெளியில் அமர்ந்து இப்படித் தூங்குவதை அவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
“ஆனால், இப்போது அவர் சில நேரங்களில் தோட்டத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் அமைதியாகச் சிந்திப்பார். பின்னர் சிறிது நேரம் தூங்கிவிடுவார். சில சமயங்களில், தோட்டத்தில் நடந்து செல்லும்போது குனிந்து ஒரு பூவைப் பறித்து, அதை தனது மேலங்கியில் வைத்துக்கொள்வார்.”
அந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் காலையில், ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் இயன் ஸ்டீஃபன்ஸ், ஜின்னாவைச் சந்திக்கச் சென்றதாக போலித்தோ கூறுகிறார்.
“அந்த நேரத்தில், பாகிஸ்தானை உருவாக்கியவர் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் என்பதை யாரும் உணரவில்லை. அவரது நுரையீரல் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி யாருக்கும் தெரியாது. சில மாதங்களுக்குப் பிறகு அதுவே அவரது உயிரைப் பறித்தது” என பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மையல்ல. நான் சோர்வடைகிறேன். நான் இப்போது இளைஞன் இல்லை. எனக்கு நிறையப் பொறுப்புகள் உள்ளன… அதனால், நான் சோர்வடையும்போது ஓய்வெடுக்கிறேன். மருத்துவர்களைச் சென்றுவிடுமாறு கூறுகிறேன். தேவையில்லாமல் அவர்கள் என்னைச் சுற்றி இருக்க வேண்டாம் என்று நான் விரும்புகிறேன்” என கூட்டத்தின் முடிவில் ஜின்னா கூறினார்.
போலித்தோவின் கூற்றுப்படி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் மருத்துவர்கள் தெரிவித்த கவலைக்குரிய தகவலை ஜின்னா ரகசியமாக வைத்திருந்தார்.
1948ஆம் ஆண்டு ஜூலைக்குள், ஜின்னாவின் நீண்டகால நுரையீரல் நோய் மேலும் மோசமடைந்தது.
இதனால், மிதமான காற்று நிலவும் பலுசிஸ்தானில் உள்ள தொலைதூர மலைவாசஸ்தலமான ஜியாரத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், ஜியாரத்திலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அவரது மருத்துவர் இலாஹி பக்ஷ், ஜின்னாவின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரேக்களை விரிவாக ஆய்வு செய்த பிறகு, அவரது நீண்டகால நுரையீரல் நோய் சிகிச்சைக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக உறுதியாக நம்பினார்.
அந்த நாட்களில், ஜின்னாவின் சில நண்பர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம்.
அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்பு
மருத்துவரும் எழுத்தாளருமான மருத்துவர் ஃபிராங்க் ரயான் தனது ‘காசநோய்: தி கிரேட்டஸ்ட் ஸ்டோரி நெவர் டோல்ட்’ (Tuberculosis: The Greatest Story Never Told ) என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து எனக்கு சில மர்மமான தொலைபேசி அழைப்புகள் வந்தன. பாகிஸ்தான், கராச்சிக்கு உடனடியாக வர வேண்டும் என்றும், ஒருவரைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அந்த நபரின் பெயரும், அவருக்கு இருந்த நோயும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை.”
“இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், அதன் தன்மையைப் புரிந்துகொள்ளவும் நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சில நாட்களுக்குப் பிறகு, நோயாளி உயிரிழந்துவிட்டதால் இனி எனது சேவை தேவையில்லை என்று கூறி எனக்கு அழைப்பு வந்தது.”
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது, ஒரு மருத்துவர் தன்னைச் சந்திக்க வந்ததாக ஃபிராங்க் ரயான் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தத் தொலைபேசி அழைப்புகளுக்குப் பின்னால் இருந்தவர் அவர்தான் என்றும், அந்த நோயாளி வேறு யாருமல்ல, ஜின்னாதான் என்றும் அவர் என்னிடம் கூறினார். அவர் ஜின்னாவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார்.”
“அப்போது, அந்த ரகசியத்துக்கான காரணம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டர் நிறுவனத்தில் நான் ஆற்றிய சொற்பொழிவை அந்த மருத்துவர் கேட்டிருந்தார். நான் வெளியிட்டிருந்த சில படைப்புகளையும் அவர் படித்திருந்தார்.”
“முகமது அலி ஜின்னாவுக்கு நீண்டகால நுரையீரல் காசநோய் இருந்தது. 1946ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது மருத்துவர் படேல் முதன்முதலில் அதற்கு சிகிச்சை அளித்தார்.”
முக்கியமான ரகசியங்கள்
பட மூலாதாரம், Getty Images
‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ புத்தகத்தில், 1947ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லால் நேரு அல்லது மோகன்தாஸ் காந்தி ஆகியோர் இந்த அசாதாரணமான ரகசியத்தை அறிந்திருந்தால், இந்தியப் பிரிவினையைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனது முஸ்லிம் சகோதரர்களுக்காக தனி நாட்டை உருவாக்குவதில் ஜின்னா மிகவும் உறுதியாக இருந்தார். இந்த முடிவை எடுக்குமாறு கடைசி வைஸ்ராயை அவர் கட்டாயப்படுத்தினார்.”
பின்னர், இந்த ரகசியத்தை லார்ட் மவுண்ட்பேட்டனிடம் தான் தெரிவித்தபோது, அவர் அதிர்ச்சியடைந்ததாகவும், அந்த நேரத்தில் ஜின்னாவின் உடல்நிலை எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என்பது தனக்குத் தெரிந்திருந்தால், பாகிஸ்தான் உருவாகியிருக்காது என்று தான் கருதியதாக மவுண்ட்பேட்டன் கூறினார் என்றும் டொமினிக் கூறினார்.
“அந்த நேரத்தில் இவை அனைத்தும் எனக்குத் தெரிந்திருந்தால், வரலாற்றின் போக்கே வேறாக இருந்திருக்கும். சுதந்திரம் வழங்கும் முடிவை நான் சில மாதங்களுக்கு ஒத்திவைத்திருப்பேன். பாகிஸ்தான் உருவாகியிருக்காது.”
“‘என்னால் இதை நம்பவே முடியவில்லை!’ என்று அவர் கூறினார். பின்னர், ஆழ்ந்த அதிர்ச்சியில் மூச்சை இழுத்தபடி, ‘ஓ கடவுளே!’ என்று கூறினார். வழக்கமாக அமைதியாக இருக்கும் அவரது நீலக் கண்கள் தீவிர உணர்ச்சியால் சுருங்கின.”
இந்த ரகசியம் மிகவும் கவனமாக மறைக்கப்பட்டிருந்ததால், பிரிட்டிஷ் உளவுத்துறைக்குக்கூட அது முற்றிலும் தெரியாமல் இருந்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில், நுரையீரல் காசநோயால் ஜின்னா 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் திட்டமிடல் அமைச்சரும் விருதுக் குழுவின் தலைவருமான அஹ்சன் இக்பால், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் மருத்துவர் ஜல் டெபூ ஆகியோரின் தொழில்முறை நேர்மை, அவர்கள் அறியாமலேயே இருந்தாலும், பாகிஸ்தான் உருவாக்கத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு, மருத்துவர் ஜல் ரத்தன்ஜி படேலுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதை 1962-ம் ஆண்டு வழங்கியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் மருத்துவர் ஜல் டெபூ ஆகியோருக்கு ‘நிஷான்-இ-குவைத்-இ-ஆசம்’ விருதை பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த விருது அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி நடைபெறும் விழாவில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு