• Fri. Jul 24th, 2026

24×7 Live News

Apdin News

ஜூலை 1983 | ஜூட் பிரகாஷ்

Byadmin

Jul 24, 2026


சனிக்கிழமை 23 ஜூலை 1983, நள்ளிரவு

வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணம் குண்டு சத்தத்தால் அதிர்ந்தது. அதற்குப் பிறகு அதைவிட பன்மடங்கு சத்தங்களையும் அவலங்களையும் காணப்போவதை அறியாது யாழ்ப்பாணம் நடுச்சாமத்தில் பதறியடித்து எழும்பியது. என்ன ஏதுவென்று அறியாது விழித்தெழுந்த மக்களிற்கு துப்பாக்கி சத்தங்களும் கேட்டன. 23 ஜூலை 1983 அன்று வெடித்த அந்த முதல் அதிர்வின் ஓசை மட்டும் அந்த இரவில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரின் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தலைவர், கிட்டு, விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோஷம், அப்பையா ஆகியோரை அடங்கியிருந்த இயக்கத்தின் அணி, பலாலியிருந்து குருநகர் நோக்கி செல்லும் Four Four Bravo என்ற இராணுவ ரோந்து அணியை தின்னவேலி தபால் கட்டை சந்திக்கருகில் கண்ணிவெடி வெடிக்கவைத்தும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்கினர்; இயக்கத்தின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர், செல்லக்கிளி வீரமரணம் அடைந்தார்.

அடுத்த நாள் ஜூலை 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் ஆடிய கொலைவெறித் தாண்டவத்தில், இந்த விஷயம் தெரியாமல் டியூஷனுக்கும் தேவாலயத்திற்கும் வேலைக்கும் போக வீதியில் இறங்கின சனங்களும் சம்பவ இடத்திற்கருகில் வீடுகளில் இருந்த சனங்களும் என்று நூற்றுக்கணக்கானோர் இரையானார்கள்.

ஜூலை 25, திங்கட்கிழமை கொழும்பில் இனக்கலவரம் வெடித்தது. இனக்கலவரத்தில் கொழும்பில் பாதிக்கப்பட்ட சில நண்பர்களின் நினைவுகள் பதிவுகளாக

“இராமகிருஷ்ண ரோட் top இலிருந்து சிவப்பு tshirt உம் நீல சாரமும் உடுத்த ஒருத்தன் சிங்களத்தில் சத்தமா கத்திக்கொண்டு பெரிய வாளோடு எங்களை துரத்தி கொண்டு ஓடி வந்தான்” ரமோஷன்

“கண்டி நகர் எரியிறதை Trinity College hostel இலிருந்து பார்த்து கொண்டிருந்தேன். என்ன நடக்குது என்று விளங்கேல்ல. சிங்கள நண்பன் ஒருவன் கொட்டியா வந்திட்டுது என்று கத்தினான். நான் அவன கேட்டேன் கொட்டியா வந்தா ஏன் கடையை கொழுத்துறாங்கள் ? கொட்டியாவை கலைக்க வேண்டியது தானே ?. அவன் சொன்னான்..அடோ இது தெமல கொட்டியா ஓய்.. அன்றைக்குத்தான் தான் தமிழ் புலிகள் இருப்பதை அறிந்தேன்” நிமலன்

“எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த காரை நிற்பாட்டி, ஆக்களை இழுத்து அடி அடியென்று அடிச்சு போட்டு திரும்ப அவங்களை காருக்குள்ள போட்டு காரை பெட்ரோல் ஊத்தி கொழுத்தினாங்கள்” யசோ மாமா

“இராமகிருஷ்ண மிஷனில் ஒளிஞ்சு இருந்து கொண்டு யன்னல் இடுக்குக்கால பார்க்க.. மிஷனுக்கு நேர் முன்னுக்க இருந்த என்ட வீடு எரியிறதை என்ற கண்ணால பார்த்தேன்” சிவக்குமார் அண்ணா

” பம்பலபிட்டி இந்துவிலிருந்து van இன் பின் seat இற்கு அடியில ஒளிஞ்சு கொண்டு வெள்ளவத்தைக்கு போகேக்க, பம்பலபிட்டி பாலத்தடியில சிங்களவங்கள் மறிச்சிட்டாங்கள். அன்றைக்கு மட்டும் நான் விலாசமா முன் ஸீட்டில இருந்திருந்தனென்றா நீ இளையராஜாவை சந்திருச்திருக்க மாட்டாய்” ஐங்கரன்

யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட, அன்றைய நாட்களில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் எங்களது வாழ்க்கையையே பிரட்டிப் போடப் போகப் போகிறது என்பதை அறியாமல், அயல் அட்டையில் இருக்கிற பெடி பெட்டைகளோடு சேர்ந்து தாயம், கிளி பூர், ஜஸ் பைஸ், கிட்டி புல், எட்டு கோடு, கப்பல் கோடு என்று நாங்கள் கூடிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தோம்.

இரவில் பெரியாட்கள் இரவு 6.30 இற்கு மாநில செய்திகள், இரவு 7.15 இற்கு ஆகாஷவாணி, இரவு 7.45 இற்கு வெரித்தாஸ், இரவு 9.00 மணிக்கு இலங்கை வானொலியின் (லங்கா புவத்) செய்திகள், இரவு 9.15 இற்கு BBC தமிழோசை என்று வானொலி செய்திகள் கேட்பார்கள்.

கொழும்பில பெரிய பிரச்சினை தமிழாக்களுக்கு சிங்களவன் அடிக்கிறான் என்பது விளங்கியது. இந்தியா அனுப்பின சிதம்பரம் கப்பலில் கொழும்பாரை ஏற்றி காங்கேசன்துறையில் கொண்டு வந்து இறக்கி விட்டாங்கள். இரவு 8.30 இற்கு எல்லோரும் சேர்ந்து செபமாலை சொல்லி கொழும்பாருக்காக ஜெபித்தோம்.

ஊரடங்கு பிரச்சினைகள் முடிந்து பள்ளிக்கூடத்திற்குப் போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். பாலர் வகுப்பில் இருந்து நாலு வருஷமா நாங்கள் ஒன்றா இருந்த வகுப்பை வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம், கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்…வாழ்க்கை வெறுத்துச்சுது.

முழு school இற்கும் Jubilee hall இல் assembly நடந்தது. ஆனந்தராஜா மாஸ்டர் English இல், கொழும்பில் இருந்தும் கண்டியில் இருந்து வந்து சேர்ந்துள்ள புதுப் பெடியளை அரவணைக்க சொல்லி சொன்னது விளங்கிச்சு. Interval நேரங்களில் பழைய அண்ணாமாரும் புதுசா வந்த அண்ணாமாரும் ஆவேசமா அரசியல் கதைப்பினம்.. கொந்தளிக்கீனம் என்பது மட்டும் புரிந்தது. அப்படி கல்லூரி வளாகத்தில் துடித்த அண்ணாமார் சிலர் பிறகு இயக்கத்தில் போராளிகளாகவும் தளபதிகளாகவும் புலம்பெயர்ந்த தேசங்களில் முக்கிய செயற்பாட்டாளர்களாகவும் மாறியதை பின்னாள்களில் வரலாறு பதிவு செய்தது.

புதுசா வந்த பெடியளில் சிலது மண்டைக்காய்கள், அடுத்து வந்த term test இல் ஒரு கலக்கு கலக்கினாங்கள். வேற சிலர் யாழ்ப்பாண பெடியளோடு படிக்கேலாது என்று வெருண்டாங்கள். உண்மையில் வந்த புதுப் பெடியளால் எங்கட படிப்பிலும் விளாயாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டோம். கொழும்பு பெடியளால எங்கட வாழ்க்கையும் பரி. யோவான் கல்லூரியின் தரமும் ஒரு படி உயர்ந்திச்சு… St John’s இன் brain gain.

43 வருஷமாகியும் 83 இனக்கலவரத்தின் வடு இன்னும் மாறவில்லை, நீதியும் கிடைக்கவில்லை, விடிவும் பிறக்கவில்லை. 1981 இல் நிகழ்ந்த யாழ்ப்பாண நூலக எரிப்பாலும் ஜூலை 1983 கலவரத்தாலும் தூண்டப்பட்ட இளைஞர்கள் அள்ளுக்கணக்கில் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்தவர்களை விட தமிழ் இயக்கங்களில் இணைந்து ஆயுத பயிற்சி பெற்ற பெடியளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாம்.

எங்களது தாயகத்தில் நாங்கள் தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக தம்முயிரைத் தியாகம் செய்த ஆயிரமாயிரம் மறவர்களின் உயிர்களையும், பனியிலும் குளிரிலும் மழையிலும் வெய்யிலிலும் கடலிலும் பாலைவனத்திலும் உழைத்த பல்லாயிரக்கணக்கோரின் உழைப்பையும்
விதைத்தும் நமது மண்ணில் விடுதலை விருட்சம் முளைவிடவில்லையே! என்ற ஏக்கம் மரணத்திலும் எம்முடன் பயணிக்கத் தான் போகிறது.

முப்படைகளையும் தம்வசம் வைத்திருந்து இராணுவ வெற்றியின் விளிம்பு வரை வந்த எங்கள் இனத்தின் வீரமும் வரலாறும் அவலமும் எதுவுமே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்க்கப்படுகிறது, வளர்ந்து வருகிறது.

பழங்கதை பேசுவதால் என்ன பயன்? என்று கேட்பவர்களுக்கு எமது அரசியலின் மூலமே அந்தப் பழங்கதைகள் தான் என்பது உண்மையிலேயே புரியவில்லையா? இல்லை வேணுமென்றே அந்த பழங்கதைகள் புறந்தள்ளப்பட்டு மறைக்கப்படுகின்றனவா என்பது மட்டும் சரியாகத் தெரியவில்லை.

ஜூட் பிரகாஷ்

மெல்போர்ண்.

By admin