11
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், ஜோசப் விஜய் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று தனது முதலாவது அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார். அங்கு அவருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்த நிலையில் முதலமைச்சர் அறைக்குச் சென்ற அவர், முதல்வர் நாற்காலியை சில நொடிகள் உற்றுநோக்கி பார்த்துவிட்டு அதில் அமர்ந்த தருணம் அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்தது.
பதவியேற்பு விழாவில் ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்ததைத் தொடர்ந்து, ஜோசப் விஜய் தனது நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வாக, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை நியமிக்கும் ஆவணம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முதலமைச்சரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைச்சர்களான செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்டோர் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பின்னர் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை, குற்றச்செயல்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக ஒடுக்குவதற்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல், அரசின் தற்போதைய நிதிநிலை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம். சாய்குமார், உள்துறை செயலர் க. மணிவாசன், டிஜிபி Sandeep Rai Rathore உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.