30
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் சூழலில் முக்கிய மாற்றங்கள் உருவாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) காலை 8 மணிமுதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் கட்டுக்கோப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 110 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், கட்சித் தலைவர் விஜய் ஆட்சியை நெருங்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே, தனது வெற்றி சான்றிதழை பெறுவதற்காக விஜய் சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்றார். அங்கு சான்றிதழை பெற்றுக்கொண்ட அவர், பின்னர் தனது பெற்றோரை சந்தித்து அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த தருணம், அவரது அரசியல் பயண ஆரம்பத்தின் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், மகனின் வெற்றியைப் பற்றி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கத் துணிந்த தைரியம் விஜயிடம் இருந்தது என்றும், அது அவரின் தலைமைத்திறனையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கையை விஜய் தன்னுள் வளர்த்திருந்தார் என்றும், அந்த நம்பிக்கையும் முயற்சியும் இன்று வெற்றியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மக்கள் விஜயை ஒரு அரசியல் தலைவராக மட்டுமன்றி தங்களிலொருவராக ஏற்றுக்கொண்டதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். “இது சரித்திர வெற்றி” என அவர் பெருமிதத்துடன் தெரிவித்ததுடன், மக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
விஜயின் தாயார் ஷோபா தனது மகனின் முன்னேற்றத்தைப் பார்த்து “I am so happy” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதற்கு பதிலளித்த சந்திரசேகர், “ஷோபா விஜயின் தாய் மட்டுமல்ல, அவரது முதல் ரசிகையும் கூட” என நகைச்சுவையுடன் கூறினார்.
தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தவெக மற்றும் விஜயின் அரசியல் எழுச்சி, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.