கிட்டத்தட்ட 11 மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்பை வழங்க நீதிபதி மறுத்ததைக் கண்டித்து, பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வியாழக்கிழமை தனது இருக்கைக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவாப்ஷா தொடர்பான ஒரு நிலத்தகராறு வழக்கில், ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை வழங்க போவதில்லை என்று சிந்து உயர் நீதிமன்றத்தின் ஹைதராபாத் வட்டார அமர்வு நீதிபதி ஜவாத் அக்பர் சவானா கூறியதை தொடர்ந்து இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வழக்கில் ஒரு தரப்பின் சார்பில் ஆஜரான சிக்கந்தர் பட்டி, அந்த அறிவிப்பை தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ நீதிமன்ற இருக்கைக்குத் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கடந்த 11 மாதங்களாகத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் சிக்கந்தர் பட்டி இன்று நீதிமன்றத்தில் இறுதியாகத் தனது பொறுமையை இழந்தார்,” என்று ஹைதராபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அயாஸ் துனியோ கூறினார்.