• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

நடுவானில் ரகளையில் ஈடுபட்ட பயணி: Tape மூலம் இருக்கையோடு கட்டிய ஊழியர்கள்!

Byadmin

Sep 5, 2026


அமெரிக்காவில் டாலஸ் நகரிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவர் நடுவானில் சக பயணிகளிடம் வம்பிலுத்து, ஊழியர்களைத் தாக்கி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாலஸ் ஃபார்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூஜெர்சி நோக்கி AA618 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பறந்துகொண்டிருந்தது. பயணத்தின் பாதியில், 67 வயதான ஆர்தர் லண்டீன் என்ற பயணி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சக பயணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது கழுத்தைப் பிடித்துத் தாக்கத் தொடங்கினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பெண் விமானப் பணிப்பெண்ணை, அவர் இனரீதியாகவும் தரக்குறைவாகவும் திட்டி அநாகரிகமாக நடந்துகொண்டார். மேலும், தடுக்க வந்த பிற பயணிகளையும் கடிக்க முயன்று வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பயணியின் இந்த ஆபத்தான நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. இதையடுத்து, விமானத்தில் இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி உள்ளிட்ட சக பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் ஆபத்து ஏதும் ஏற்படாமல் தடுக்க, அவரிடம் இருந்த டேப்பால் மற்றும் பிளாஸ்டிக் கைவிலங்குகளைப் பயன்படுத்தி, அந்த நபரின் கை, உடல் மற்றும் தலைப் பகுதியை இருக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டிப்போட்டனர்.

தரையிறக்கப்பட்ட விமானம்

பயணியின் அத்துமீறல் அதிகமானதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக விமானத்தை பால்டிமோர் விமான நிலையத்திற்குத் திருப்பி அவசரமாகத் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த மேரிலாந்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் எஃப்.பி.ஐ முகவர்கள் விமானத்திற்குள் நுழைந்து, இருக்கையில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வழக்குப் பதிவு

கைது செய்யப்பட்ட பயணி மீது தாக்குதல் நடத்துதல், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குத் தான் தங்களின் முதல் முன்னுரிமை என்றும், விமானத்திற்குள் இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. இருக்கையில் டேப்பால் நபர் கட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

By admin