வழக்கமாக ரெயில் பெட்டிகளில் மேல்படுக்கைக்கு செல்வதற்கு ஏணி போன்ற அமைப்புதான் இருக்கும். அதில் ஏறுவதற்கு முதியவர்களும், பெண்களும் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இப்போது வீடுகளில் படிக்கட்டுகளில் ஏறி செல்வது போல் இந்த பெட்டியில் வடிவமைப்பு செய்துள்ளனர்.
மேலும் மின்விளக்கு அலங்காரங்கள் ஓட்டல் அறைகளை பிரதிபலிக்கின்றன. கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் என ஒவ்வொன்றும் தண்டவாளத்தில் பறக்கும் நவீன நட்சத்திர விடுதியை தான் நினைவுப்படுத்துகின்றன. முதல் தூங்கும் வசதி கொண்ட இந்த ரெயில் பெங்களூரு- மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. இரவு முழுவதும் இந்த வழித்தடத்தில் சாதாரண விரைவு ரெயில்களில் பயணித்த பயணிகள் இனி சொகுசான ஓட்டல் அறைக்குள் இருந்து, தூங்கி உற்சாகமாக எழுந்து வரலாம்.
இப்போது பெங்களூரு – மும்பை வழித்தடத்தில் இயக்கினாலும், அடுத்தடுத்து மற்ற நகரங்களுக்கும் இந்த வந்தே பாரத் ரெயில் வரும். இவ்வளவு வசதி இருக்கே கட்டணம் எப்படி இருக்குமோ? என்ற எண்ணமும் வரும். பஸ் பயணத்திற்கும், ரெயில் பயணத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதேப்போல் ரெயில் பயணத்திற்கும், விமான பயணத்திற்கும் வித்தியாசம் இருக்கும். இது தரையில் ஓடும் விமானத்தை போன்றது. எனவே கட்டணமும் அதற்கு ஏற்ப மாறுபடத்தான் செய்யும். இன்னும் ரெயில்வே நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கவில்லை.