திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அங்கு ரோட்ஷோ நடத்தினார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வந்த முதலமைச்சர், தாராபுரம் – உடுமலை சாலையிலுள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கினார். அங்கு முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்தே தவெக வேட்பாளர் சத்யபாமாவுடன் ‘ரோட் ஷோ’ மேற்கொள்ளத் தொடங்கிய விஜய், ஜீவா காலனி, உடுமலை சாலை ரவுண்டானா என தாராபுரத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைவலம் வந்தார்.
அப்போது, அலங்கியம் சிக்னல் பகுதியில் மக்களிடையே உரையாற்றிய தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், தனக்குத் தோல்வி பயம் என்று கூறப்பட்ட விமர்சனத்தைக் குறிப்பிட்டுப் பேசியவர், “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்க வருபவர் தான் இல்லை” என்று கூறியதுடன், “என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும் சென்று பார்ப்பேன், எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று பார்ப்பேன். அதைப் பற்றி உங்களுக்கு என்ன?” எனக் கேட்டார்.
மேலும், “மதுராந்தகம் சென்று மக்களைப் பார்த்து, பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே போலத்தான் நமது தாராபுரம் சொந்தங்களையும் இன்று பார்க்க வந்துள்ளேன். ஒரேயொரு சிறிய உண்மையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன். முன்னர் பேசும்போது, திமுக-வுக்கும், மற்றும் பலருக்கும் நீங்கள் வாக்களித்தால், பெண்களை அசிங்கமாகப் பேசுகிறவர்களை ஆதரிப்பது போல் ஆகிவிடும் என்று கூறியிருந்தேன்,” என்று கூறினார்.
அதைத் தான் வெறும் வாக்குகளுக்காக மட்டுமே சொல்லவில்லை எனக் குறிப்பிட்ட விஜய், “ஸ்டாலின் பேசும்போது என்ன பேசினார் என்பதைப் பாருங்கள். தந்தையும் மகனும் ‘தயவு செய்து திமுக-வுக்கு வாக்களிக்காதீர்கள், கோடானு கோடி நன்றி’ எனச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள். சகோதரி சத்யபாமா பற்றி அவர் பேசியதைக் காது கொடுத்துக் கேட்க முடியாது. அவர் மட்டுமல்ல, அவர் வளர்த்து வைத்துள்ள அனைவருமே இப்படித்தான் பேசிவிட்டுச் செல்கிறார்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், ஆனால் நம் வீட்டிலுள்ள சகோதரி, அம்மா, அக்கா, தங்கைகளைப் பற்றிப் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்,” என்று கூறினார்.
தாராபுரத்தில் நாதக வேட்பாளர் கைது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர பிரசாரம் மற்றும் சாலைவலம் மேற்கொண்டார்.
மதியம் 1 மணியளவில் தொடங்கிய இந்த சாலைவலம், தாராபுரத்தின் முக்கியப் பகுதிகளான உடுமலை சாலை சந்திப்பு, காவல் நிலைய சாலை மற்றும் ஐந்து முக்கு சாலை வழியாகக் கடந்து மீனாட்சிபுரம் பகுதிக்கு அடுத்தபடியாக உள்ள எம்.ஜி.ஆர் நகர் – வீராச்சிமங்கலம் பிரிவை அடைந்தது.
அப்போது அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தாராபுரம் – மூலனூர் பிரதான சாலையைக் கடக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுள்ளுவாக மாறியது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பேருந்துகள் மூலம் கோவைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 3 மணியளவில் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரசார மாநாடு நடைபெறவிருந்த நிலையில், அங்கு வர முயன்ற மற்ற நிர்வாகிகளையும் காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
‘திணிக்கப்பட்டது இடைத்தேர்தல்’ – மு.க. ஸ்டாலின்
பட மூலாதாரம், MK Stalin/X
செப்டம்பர் 3ஆம் தேதியன்று மதுராந்தகம் தொகுதியி இடைத்தேர்தல் பரப்புரையில், தமது வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமனுக்காக பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கடந்த முறை தவறிவிட்டது, இந்த முறை தவறக்கூடாது” என்று தெரிவித்தார்.
மேலும் பரப்புரையில் பேசியபோது, “இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை, தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கின்ற தேர்தலும் இல்லை, இது தவிர்த்திருக்க வேண்டிய, உங்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்” என்று கூறிய மு.க.ஸ்டாலின், “நான்கு மாதங்களுக்கு முன்பு நீங்கள் அனைவரும் ஒருவரை ஜெயிக்க வைத்திருந்த நிலையில், தனிப் பெரும்பான்மை இல்லாத ஆட்சிக்கு ஆதரவளிக்க ராஜிநாமா செய்துவிட்டு, இப்போது வேறு சின்னத்தில் மீண்டும் வந்து உங்களிடம் வாக்கு கேட்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
“அதுவும், ஐந்து ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று வேட்பாளரை வைத்துக்கொண்டே பேசி அமைச்சர் வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களை அவமதிக்க முடியாது. தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி அறிவிக்கப்பட்ட உடனேயே ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜிநாமா செய்வது இதற்கு முன் எப்போதேனும் நடந்துள்ளதா? நிச்சயமாக இல்லை. இது அப்பட்டமான குதிரை பேரம் என்பதை நாம் கூறினால், ராஜிநாமா செய்துவிட்டுத்தான் அவர்கள் தவெக-வில் வந்து இணைந்துள்ளார்கள் என்கிறார் முதலமைச்சர்.”
“அப்படி ராஜிநாமா செய்யாமல் இருந்திருந்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்திருக்கும் என்பதால்தான் பொய்யான காரணத்தைக் கூறி, சபாநாயகரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்தார்கள். முதலமைச்சர் அதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே! மக்களை ஏமாற்றும், உங்களை ஏமாற்றும் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பாடத்தைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.
கூடுதலாக அவர் பேசியபோது, “திமுக செய்தது ஒரே தவறுதான். தேர்தலுக்கு முன்பு தவெக-வை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துவிட்டோம். நாம் கொள்கை எதிரிகளுடன் மோதினோம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். அதனுடன் சேர்த்து வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தில் பல லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்படி ஒரு சில காரணங்களால்தான் நமது வெற்றி வாய்ப்பை இழந்தோம்,” என்று கூறினார்.
ஆனால், “ஆட்சி அமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தவெக-வுக்கு ஆதரவான அலை வீசியிருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் 150 இடங்களிலேனும் வென்றிருப்பார்கள். ஆனால், தேவையான 118 இடங்கள்கூட வரவில்லை. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் இந்த ஆட்சியே நடக்கிறது,” என்று தெரிவித்தார்.
“அந்த நெருடல் முதலமைச்சருக்கே இருப்பதால்தான், வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி, மீண்டும் அவர்களையே இடைத்தேர்தலில் நிறுத்தி, சட்டப் பேரவையில் தவெக-வின் எண்ணிக்கையை உயர்த்தப் பார்க்கிறார்” எனக் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், “இதில் குதிரை பேரம் நடந்துள்ளது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்” என்றார்.
உண்மையில், “ஒரு பலவீனமான ஆட்சியை அமைத்துள்ள கட்சி, முறையாக மக்களுக்கு நன்மைகளைச் செய்து, மனதில் இடம்பிடித்து, ஆட்சியை வலுப்படுத்த வேண்டும். அப்படித்தான் நடக்குமென நான் எதிர்பார்த்தேன், நாம் அனைவருமே எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் பாதிக்கு தவெக-வை சேர்ந்தவர்களே காரணமாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை தீவிரமடைந்துள்ளது, மின்வெட்டு பிரச்னை, ஆவின் தட்டுப்பாடு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இது தூய சக்தியின் ஆட்சியா! இல்லை, துயர சக்தியின் ஆட்சி” எனத் தெரிவித்தார்.
மேலும், “மிஸ்டர் சி.எம். சார்! அரிசி, காய்கறி, சர்க்கரை அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அமைச்சரவை இப்போது இங்கு வந்து மொத்தமாகத் தங்கி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தோல்வி பயத்தில் மொத்தமாக இங்கு வந்திருக்கிறார்கள். சி.எம். சார், உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது” என்று பேசினார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
‘தக்க பாடம் புகட்டவேண்டும்’ – எடப்பாடி பழனிசாமி
பட மூலாதாரம், AIADMK/X
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் “தவெக பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்து, ஆட்சி அமைக்கப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
‘வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ், சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக சார்பில், சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தி, வாக்களித்த ‘விரல் மை’ காய்வதற்குள் சில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கி, பதவியை ராஜிநாமா செய்து, மதுராந்தகம், தாராபுரம், ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடக்க வித்திட்டுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.
“தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்தவர்களே” தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “இவர்கள் சிறிதும் வெட்கமின்றி மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பதை சகித்துக் கொள்ள முடியாத மக்கள், துரோகிகளுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.
மேலும், “தவெக-வினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழிகளில் ஈடுபட்டும், வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை” மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், “கழகத்தின் வெற்றிக்கு துரோகமிழைத்து, தவெக சார்பில் போட்டியிடும் இந்த இரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை. தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக இருப்பதாகவும்” எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Shanmugam P/X
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இவ்விரு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம், கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி, “பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரங்களை நான் மேற்கொண்டபோது, அவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து வரவேற்பு மற்றும் நல்லாதரவை அளித்ததைப் பார்க்கும்போது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதைக் கண்கூடாகக் காண முடிந்ததாகவும்” அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
‘அவர்கள் ரூ.5,000 தந்தால், நாங்கள் நோட்டீஸ் தருவோம்’
மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடைசி நாளான இன்று (செப்டம்பர் 4) வாகன பரப்புரை செய்த அவர், “தவெகவினர் வாக்காளருக்கு ரூ.5 ஆயிரம் தருவதாகக் கூறும் மக்கள், ‘நீங்கள் என்ன தருவீர்கள்’ என்று கேட்கிறார்கள். அவர்கள் ரூ.5 ஆயிரம் தந்தால் நாங்கள் எங்களுடைய நோட்டீஸை தருவோம்” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் எங்கள் வேட்பாளர் என்ன செய்துள்ளார்? வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார் என்று கூறியே வாக்கு கேட்கிறோம். இந்தத் தலைமைக்கு வாக்களியுங்கள், அந்தத் தலைமைக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் கேட்பதில்லை. நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரை நேரலையில் கண்டிருப்பீர்கள். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்திப் பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என்றார்.