நேபாளம்: ஆற்றில் அடித்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. இந்தியா உடனான எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சித்வான் பகுதியில் மட்டுமே அருகிலுள்ள ஆற்றிலிருந்து 300-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் சடலங்களைத் தேடும் பணிகளை நேபாள ஆயுதக் காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சித்வான் வெகு தொலைவில் அமைந்துள்ளதால், யாரையும் உயிருடன் கண்டெடுப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் மீட்புக் குழுவினர். எனவே சடலங்களைக் கண்டறிந்து மீட்கும் நோக்கில் மட்டுமே தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன.
கடும் வெப்பத்திற்கு மத்தியிலும் பிபிஇ உடைகள், உயிர் காக்கும் கவச உடைகள் மற்றும் தலைக்கவசங்கள் அணிந்து, என்ஜின் இல்லாத ரப்பர் படகுகளில் துடுப்புகளைப் பயன்படுத்தி மீட்புக் குழுவினர் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருகின்றனர். மீட்கப்படும் உடல்கள் சுத்தம் செய்யப்பட்டு, மூடப்பட்டு பிரேத அறைக்கு அனுப்பப்படுகின்றன.
வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது கேஸ் சிலிண்டர்கள், கால்நடைகளுடன் மனித உடல்களும் அடித்து வரப்பட்டதாக உள்ளூர்வாசி ஹரிபிரசாத் தஹால் தெரிவித்தார். உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், அனைத்து உடல்களையும் விரைவாக மீட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணாத நிலையில், மலைப்பகுதிகளில் பாயும் நீரின் அழுத்தம் காரணமாகவே சமவெளிப் பகுதியான சித்வானில் அதிகளவிலான உடல்கள் அடித்து வரப்படுவதாக நேபாள ஆயுதக் காவல் படையின் ஆய்வாளர் ரபின் கட்கா தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மனதளவில் ஒரு நிறைவை அடைவதற்கும், கலாசார மற்றும் சட்டரீதியான நடைமுறைகளுக்காகவும் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு