• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

பொதுமக்களே, எச்சரிக்கை! | இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

Byadmin

May 31, 2026


போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டியுள்ளதாகக் கூறி, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் இணையவழிப் பணமோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஊடாக தனிநபர்களைக் குறிவைத்து இத்தகைய ஏமாற்று வேலைகள் நடப்பதாக பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த இணைய அச்சுறுத்தல்களில் சிக்கி பொதுமக்கள் ஏமாறாமல் தடுப்பதற்காக, இலங்கை பொலிஸார் 7 முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொதுமக்களுக்கான பொலிஸாரின் 7 முக்கிய அறிவுறுத்தல்கள்

சந்தேகத்துக்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும்: குறுஞ்செய்தி (sms), மின்னஞ்சல் (E-mail) அல்லது வேறு ஏதேனும் தொடர்பாடல் செயலிகள் மூலமாக வரும் சந்தேகத்திற்கிடமான linkகளை எக்காரணம் கொண்டும் க்ளிக் செய்ய வேண்டாம்.

அனுப்பியவரின் விபரங்களைச் சரிபார்க்கவும்: ஏதேனும் இணைப்பிற்குள்  செல்வதற்கு முன்னதாக, அதனை அனுப்பியவரின் விபரங்களை  மற்றும் அந்த இணையப் பக்கத்தின் உண்மைத் தன்மையை நன்றாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம்: தெரியாத இணைப்புகள் மற்றும் செயலிகள் ஊடாக உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தற்காலிக நேர கடவுச்சொற்களை யாருடனும் பகிரக்கூடாது.

அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவும்: இவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையவழிச் செயலிகள் ஊடாகவோ மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிகாரிகளின் உதவியை நாடவும்: சந்தேகத்திற்கிடமான தகவல்கள், இணையவழிச் செயலிகள் மற்றும் சமூக ஊடகக் குறிப்புகள் தொடர்பாக, அது குறித்துச் சட்ட ரீதியான அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும்.

செயலிகளைப் புதுப்பிக்கவும் : பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக உங்களுடைய கையடக்கத் தொலைபேசி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை  தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.

அவசரப்படுத்தினால் எச்சரிக்கையாக இருக்கவும்: “உடனடியாக பணம் செலுத்த வேண்டும்” என்றோ, அவசரம் அல்லது அச்சுறுத்தும் வகையிலோ ஏதேனும் விடயங்கள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து மிக அதிக கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும், சைபர் குற்றங்களைக் குறைப்பதற்கு இது பெரும் துணையாக அமையும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

By admin